(சில்லறைக்) குறும்புகளின் கடவுள்.(God of Mischief)
கவிதை

நீ விரும்பிக் கொண்டாடும்
லோக்கி(LOKI)க்கு
சவால் விடும் நோக்கமெதுவும்
என்னிடமில்லை பெண்ணே!.
அவன் குறும்புகளின் கடவுள் மட்டுமே.
நானோ சில்லறைக் குறும்புகளின் தேவன்.
சில்லறை என்பதில்
சிரிப்பதற்கு ஒன்றுமில்லை கண்ணே..
என்னுடைய நோக்கமொன்றும்
டெஸ்ஸெரஸ் கல்லை களவாடுவதல்ல..
அதைவிட அதிகமாய் மின்னும்
உன் கன்னங்களே என் குறிக்கோள்.
எங்கெங்கேயோ எதையெதையோ களவாடி - பின்,
நான் ஒளிந்து கொள்வதெல்லாம்
உன் கன்னக் குழிகளுக்குள் மட்டும் தான்.
அவற்றைப்போல சுகமான
பதுங்கு குழிகள் வேறெதுவுமில்லை
என்பது நான் மட்டும்
அறிந்த இரகசியம்.
என்னைக் காப்பாற்றுவதுவும்
என்னக் காட்டிக் கொடுப்பதுவும்
எப்போதும் நீயாகவே இருக்கிறாய்.
என் மனநிலை
உன்னருகில் மட்டும் தான்
சமநிலைப்படுகிறது..
சறுக்கியும்விடுகிறது.
என் குறும்புகள்
சிலசமயங்களில்
உன்னைச் சிணுங்க வைக்கின்றன.
சில சமயங்களில்
உன்னை சீண்டியும் விடுகின்றன.
எப்போது சிணுங்குவாய்
எப்போது சீண்டுவாய்
என்பதை உணராத
ஒரு அசட்டு தேவனாகவே
எப்போதும் நான் இருக்கிறேன்.