பிரிவின் கடைசி நாழிகை
கவிதை

சன்னலோர இருக்கையில்
அமர்ந்திருந்திருக்கும் உன்னிடம்
விடைபெறுதலின் பொருட்டு
இரயில் நிலைய நடைமேடயில்
கம்பிகள் பற்றி நிற்கிறேன்.
எப்போது திரும்புவாய் என அறியாமல்
துவங்கக் காத்திருக்கிறது
அந்தப் பயணம் இன்னும் சற்று நேரத்தில்.
கணங்களில் நிரம்பிய துயரங்கள்
கனத்துக் கொண்டிருந்த வேளையில்
வழியக் காத்திருக்கும் கண்ணீரை
மிடறு போத்தல் நீர் விழுங்கி
தடுக்கப் பார்க்கிறேன்.
குலுங்கி அதிர்ந்து பெருமூச்சை எறிந்து
புறப்படத் தயாராகும் வண்டியைப் போல
விம்மி ஏறி இறங்குகிறது மார்பு
உள்ளிருக்கும் மன அழுத்தத்தை
ஓர் பெரு மூச்சில் வழித்தெறிய.
இக்கணங்களில் உதிரும்
துயரங்கள் தோய்ந்த பீலிகளை
நினைவுகளில் சுமக்க வேண்டும்
இனி வாய்க்கும் அத்துணை நாட்களிலும்.
புறப்படும் அவசரமா அல்லது
சிறிதேனும் நீளும் அவகாசத்தை
உறுதி செய்யவா..
கண்ணுக்குத் தெரியாத சமிக்ஞை விளக்கை
கம்பிகளில் கன்னமுரச
வண்டியினுள்ளிருந்து தேடுகிறாய்.
இரு கம்பிகளுக்கிடையில்
பிதுங்கித் தெரியும் அக்கன்னப் பரப்பில்
அழுத்தமில்லாததொரு மெல்லிய
முத்தமிடுகறேன்.
உதட்டில் உணர்ந்த உப்பின் சுவை
நெஞ்சில் கரிக்க
இறுதி கையசைப்பை தவிர்த்தபடி
வெறிக்க நடக்கிறேன் திரும்பிப் பாராமல்.