நடைபாதைக் காதல்
கவிதை

1.
தடதடத்துக் கடக்கும்
இரயில் வண்டியில்
விழுந்த மழைத் தாரைகள்
தெறித்துவிழும் நடைமேடையில்
எப்போதும் போல காத்திருக்கிறேன்.
எப்போதும் போல நீ வரவேயில்லை.
2.
கனவுகளில் வரும் இரயில்களுக்கு
தண்டவாளங்கள் இல்லை.
பறவைகளைப் போல பறக்கின்றன
அந்த இரயில்கள்.
அத்தனை ஜன்னலோரங்களிலும்
நீயே அமர்ந்திருக்கிறாய்.
நடைபாதைகளில்
மூன்றாம் பிறை சீனுவைப் போல
ஒரு வினோத
வேடிக்கைப் பொருளாகிறேன் நான்.
3.
இரயிலுக்காகவோ பயணிகளுக்காவோ
எந்நாளும் காத்துக் கிடக்கின்றன
நடைபாதைகள்
என்னுடைய ஒவ்வொரு மணித்துளியும்
உனக்காக காத்திருப்பதைப் போல.
நீயோ
இராஜதானி இரயில்களைப் போல
நிற்காமலே ஓடுவதில்
அதீத கவனத்திலிருக்கிறாய்.
4.
நடைபாதைகளில்
உனக்காகக் காத்திருந்து
சலித்த நான்
உனை நோக்கிய பயணத்திற்காக
இரயிலுக்குள் ஏறுகிறேன்.
அந்தக் கணத்தில் தான்
நீ நடை பாதையில்
இறங்கி நடக்கத் துவங்கிகிறாய்.
5.
இரயிலில் வருவது நீயல்ல.
நடைபாதையில் காத்திருப்பதும்
நானுமல்ல.
இரயில்கள் பயணிக்கும் தண்டவாளத்தின்
இணை சேரா இரு கம்பிகள் தாம்
நாமிருவரும்.