top of page
தனித்து விடப்பட்ட புல்லாங்குழல்
கவிதை

ஆண்டுகள் பலவாய்
வாசிக்காது தனித்து விடப்பட்ட
புல்லாங்குழலின் மௌனங்கூட
முகாரியின் அவரோகணங்களாய்
ஒலித்துக் கொண்டிருக்கின்றன
இவ்வறையெங்கும்.
நல்லதோர் புல்லங்குழலையும் கூட
நலங்கெடப் புழுதியிலெறிவது
தகாதவொன்றுதான்.
வாசிக்கத் தெரியாதவனெனத் தெரிந்துங்கூட
பெருக்கெடுத்த அன்பின் பிரவாகத்தில்
எனக்கந்தப் புல்லாங்குழலைப்
நீ பரிசளித்த வேளையில்
நானாவது மறுத்திருக்கலாம் தான்.
தன்னுள் நுழையும்
காற்றை இசையாக்கும்
அதன் மாயவித்தையை மறுதலித்து
நாம் இப்படி
அதனைச் சிலுவையிலறைந்திருக்கக் கூடாது.
நமக்கான பாவங்களைச் சுமந்த
அப்புல்லாங்குழல்
தன் துளையெங்கும்
இரத்தம் சிந்துவதைக் காண்.
bottom of page