ஞாயிற்றுக் கிழமை தேவதை
கவிதை

1. அதிகாலைச் சோம்பலை
சிறு புன்னகையில் முறித்தவாறு
துயிலெழுகிறாள்
அந்த ஒர்க்கிங் க்ளாஸ் தேவதை.
ஆவி பறக்க படுக்கையருகே
காத்திருக்கும் தேநீர்க் குவளையில்
முந்தைய இரவின் கூடல்
நினைவுகளின் வெட்கங்களைச்
சர்க்கரையாய் கலக்குகிறாள்.
மேலண்ணத்தை நிறைக்கிறது
இனிப்பு.
இன்றைய விடுமுறை நினைப்பில்
மேலும் இனிக்கிறது
அதிகாலைக் குவளைத் தேநீர்.
2. அன்றாடம் அவசர கோலமாய்
குளித்து வெளியேறும் தேவதை
கூந்தலை சீகக்காய் கொண்டு
கழுவுகிறாள் விடுமுறை தந்த
உற்சாகத்தின் மிகுதியில்.
பூத்துவாலை துண்டை தலைசுற்றி
வெளியேறிய தேவதைக்கு
தன் நெஞ்சு நேர்பவனின்
நளபாகத்தில் உருவான
சிற்றுண்டியில் சுவை வாசத்தில்
தன் சிறகுகளை அதிகமாய்
படபடக்கிறாளவள்
அவனுக்கென அவள் இதழில்
ஊறியது
தேனொழுகுமொரு முத்தம்.
3. நண்பகல் பொழுதுகள் நல்லபடி
கழிகின்றன தேவதைக்கு
கணவனை சீண்டியபடியோ
அல்லது கணவன் சீண்டியபடியோ..
சிறகுகளை படபடத்து ஊர்வலம்
வருகிறாள் தேவதை
தன் கணவனுடன் தன்
கணவனுக்காக..
ஊர்வலம் முடிவது பெரும்பாலும்
ஒரு திரையரங்கிலோ அல்லது
ஒரு இசையரங்கிலோ.
பின்னந்தி சரிய வீடு திரும்புமுன்
இரவுணவு மெழுகு வெளிச்சத்தில்.
தலைகனக்க சூடிய மல்லிகைச்
சரங்கள்
அவள் காதல் வாசத்தில் திறக்கிறது
இன்னொரு இரவின் இன்பத்தில்
வாசல்கள்.
4. நாளைக்கு திங்கட்கிழமை.
பரபரக்க கழிய காத்திருக்கும்
வாரநாட்களை புன்னகையுடன்
வரவேற்கத் தயாராகும் தேவதை
சிறகுகளை மெல்ல அலமாரி
கம்பிகளில் தொங்கவிடுகிறாள்.
இனி ஒரு ஆறு நாட்கள்
அவதியவதியாய் கழியும்.
எனினும் ஆறாம் நாளாய்
வருவதும் ஒரு சனிக்கிழைமையே.
அதற்கடுத்த நாள் விடுமுறையே.