top of page
ஜோக்கர்
கவிதை

பளபள ப்ளாஸ்டிக்கில்
கைக்கொரு பாதியாய்ப் பிரித்து
ஒரு முனையைத் தரையோடழுத்தி
மறுமுனையை சிவ தனுசாய்
பட பட சத்தத்துடன்
வளைத்து முறித்து ஒன்றிணைக்க
கலைந்து கலைந்து சேர்கின்றன
இதற்கு முன் ஆடிய ஆட்டங்கள்.
ஒன்றொன்றாய் பிரித்து
வீசப்படும் சீட்டுக்களில்
எவையெவைகளில்
ஒளிந்திருக்கிறான்
நூற்றி ஐம்பத்தொன்பதுக்கு
மூன்றெனும் நிகழ்தகவில்
இரம்மியமாய் சிரிக்கும்
இரட்டைத் தலை ஜோக்கர்.
ஆடுபவர்கள் எல்லாருமே
இராஜாக்களும் இராணிகளும்
என்றான பின்
ஆட்டத்தில் இடைச் செருகலாய்
சேருபவனின் சிரிப்பதென்பது
ஃபுல் ஸ்கூட்டாயிருந்தாலென்ன
ஆஃப் ஸ்கூட்டாய் இருந்தாலென்ன.
ஜோக்கரில்லாமல்
சேர்வதை மட்டும்
இரம்மியென
முதலில் அழைத்தவன்
அன்றலர்ந்த மலர்போல
இதழுதிர்க்கும் புன்னகையின்
மதிப்பறியாதவன்.
bottom of page