சில காதல் கவிதைகள்
கவிதை

இவ்விரவினைப் போலக்
கொடூரமானதென்று
வேறொன்றைமில்லை.
ஒரு புறம்
என் தனிமைகளைத்
தட்டித்தட்டி கெட்டியான
இருளைச் செய்து
அணிந்து நிற்கிறது.
மறு புறம்..
உன் நினைவுகளை
கோர்த்தெடுத்து
நிலவெனச் சமைத்து
தனக்கெனவொரு
ஒளியினைத்
தேடிக் கொள்கிறது
--
பாவு நூலுக்குள்
ஊடும் நூலாய்
நம்மைப் பிணைத்திருப்பதே
நம் காதல் தானே.
இதற்கு மேலும்
நீயோ அல்லது நானோ
சொன்னால்தான் என்ன
சொல்லாவிட்டால் தான் என்ன
--
வரும் வழியில்
பாரதி எதிர்ப்பட்டான்.
தன் கையிலிருந்த
அக்னிக் குஞ்சிலிருந்து
ஒரு விள்ளலை
என்னிடம் தந்து
“இது காதல் அக்னி” என்றான்.
அவன் கையளித்த அக்னி
சட்டென மனப் பொந்துக்குள்
தாவியமர்ந்தது.
அவன் மெல்ல நகைத்து
பாடியபடி நடக்கலானான்.
“பொன்னையே நிகர்த்த மேனி
மின்னையே நிகர்த்த சாயல்..”
காதல் அக்னி
உள்ளிருந்து தகிக்கிறது.
எப்போது நீ வருவாய்
--
உன் புன்னகையின்
கீற்றுகளிலிருந்து
என் இரவுகளுக்கு
வெளிச்சங்களை சேமிக்கிறேன்.
உன் இமைகளின்
படபடப்புகளிலிருந்து
என் பகல்களுக்கு
ஓசைகளை சேமிக்கிறேன்.
உன் உடைகளின்
அசைவுகளிலிருந்து
என் வெம்மைகளுக்கு
காற்றைச் சேமிக்கிறேன்.
உன் கொலுசுப் பரல்களின்
சலசலப்பிலிருந்து
என் வெறுமைகளுக்கு
இசையை சேமிக்கிறேன்.
நான் கொண்ட அத்தனையும்
நீ் கையளித்த கொடை.
நீயோ
காதல் எனக்களித்த
பெருங்கொடை.
--
இருளும் ஒளியும்
கலந்தே இருக்கும்
நட்சத்திரங்கள் மினுமினுங்கும்
இவ்விரவைப் போன்றது
நம் காதல்.
நீயருகி இருக்கையில் இன்பத்தையும்
நீங்கும் வேளையில் துன்பத்தையும்
கையளிக்கிறது.
--
தனைப் பிடித்த விரல்களில்
தன் வண்ணங்களை
தடம் பதித்து செல்லும்
வண்ணத்துப் பூச்சியினை
போலிருக்கிறது
உன்மீது நான் கொண்ட
இக்காதல்.
உன் வண்ணங்களை
என் மீது எங்கெங்கும்
நிரப்பி அழகு காட்டுகிறது பார்.
--
நித்திலமாய் தவழும்
வான் நிலவில்
உன் முகம் தெரிகிறது.
நானிருக்கும் இக்கரைக்கும்
நீயிருக்கும் அக்கரைக்கும்
ஒரே நிலவு தானே.
பின் என்னை மட்டும்
இத்தனை துயரமாய்
ஏன் வாட்டுகிறது
--
இரண்டு நாட்களாக
என்னோடு நீ பேசவில்லை
நானோ அவ்விரண்டு நாட்களிலும்
உன்னோடு மட்டும் தான்
பேசிக் கொண்டிருந்தேன்.
இன்று என்னோடு
பேசிக் கொண்டிருக்கிறாய்.
இப்போதோ..,
நான்
உன்னோடில்லாமல்
உன் கண்களோடு மட்டுமே
பேசிக் கொண்டிருக்கிறேன்.
அசாத்தியமானவற்றையெல்லாம்
சாத்தியமாக்கும் விசயத்தில்
என் காதலுக்கு
எப்பொழுதும் முதலிடந்தான்.
--
நானோ மொழியைத்
தேர்ந்தெடுத்தேன்.
நீயோ உன் விழியை.
யார் யார் எவ்வழி தெரிவினும்
பகிர்வதோ நம் காதலைத் தானே!
--
நான் கொண்ட
காதலையும் காமத்தையும்
தராசின் இரு தட்டுகளில் நிரப்பி
எடையிடுகிறாய்.
எத்தட்டு எப்போது
கீழிறங்கும்..
எத்தட்டு எப்போது
மேலெழும்..
இரண்டுமே
நிறையிடும் உன்னிரு
கூர் விழிகளில் தான்
இருக்கிறதென்பதையும்
நீயறிவாய் தானே
--
நானோ ரோஜாக்களை
இரசிப்பவன்.
நீயோ அனுதினமும்
மல்லிகைச் சரங்களை
சூடி வருபவள்.
இருப்பினும்
எப்படி நிகழ்ந்தது
நம்மிடையே
இப்படியொரு இரசவாதம்.
--
பேசித் தீரா விசயங்கள்
பலவுண்டு என்னிடத்தில்.
பதிலுக்காய் ஒரு “உம்” கூட
இல்லையென்றாகி விட்டது
உன்னிடத்தில்.
இருப்பினும்
என் தனிமையின் அந்தகாரத்தை
விரட்டியடிக்கும் மீப்பெரும் ஒளியை
உன் வார்த்தைகளையன்றி
வேறொன்றும் தந்துவிட
இயலாதென்பதையும்
நீ அறிந்தே இருப்பாய்.
--
காலடியின் கீழிருந்து
கடலை நோக்கி
அலையோடு சுருண்டோடும்
மணற்துகள்களோடும்
அலையின் நுரைகளோடும்
தனிமையின் வெறுமைகளைக்
கரைத்துக் கொண்டிருந்தவென்
கரமொன்றை
உனை விரட்டுமொரு
அலையிடமிருந்து
கரை நோக்கி ஓடிவந்த
அதுவரை நானறியா நீ
ஏன் பிடித்தாய்..
பின்
என் முகம் பார்த்து
ஏன் சிரித்தாய்.
இப்போது பார்.
நம்மி்ருவருக்கும் பொதுவாய்
நமக்கிடையே
இந்த பொல்லாத காதல்
வந்தமர்ந்து கொண்டது.
--
தன் நிலை தானறியா மனதும்
எந்நிலை ஏதுமறியா காதலும்
ஒரே நேர்கோட்டில்
இருக்கும்போதா
நீ என்னைச் சந்திக்க வேண்டும்..
--
அவளும் தன்நிலை
தான் பகிர்ந்திலள்.
நானும்
தானெடுத்து உரைத்திலன்.
ஓரரவம் தானூர்ந்த தடம்
மற்றொன்று உணர்ந்திடும்
அவ் வித்தையறிந்தது
எம்மிடை விழுமிய
எம் காதல்.
--
நீலம் பூத்த கண்களால்
ஒரேயொரு முறைதான்
நீயெனைப் பார்த்தாய்.
அந்நொடியில் தான்
நிறப்பிரிகையைப் பொய்யாக்கி
ஒற்றை வர்ணத்தில்
தன்னை வரைந்து கொண்டது
வர்ணங்களற்றிருந்த என் வானவில்.
--
நேற்றிரவு தொடங்கி
இன்று காலை வரை முடிந்த
அம்மீப்பெரும் யுகம் முழுதும்
உன்னிடம் பேசுவதற்கு
நானெடுத்து வைத்திருந்த
காதற் குறிப்புகளனைத்தும்
“ம்.. சொல்லு” என்றவுன்
இரட்டைச் சொற்கள் கொண்ட
ஒற்றை வாக்கியத்தில்
இமைக்கும் நொடியில்
பறந்து மறையுமொரு
தேன்சிட்டைப் போல
கண்காணாது கரைந்தே போக..,
மிஞ்சிய மௌனத்திலிருந்து தான்
என் காதலைப் பி்ரித்தெடுத்து
பருகுகிறாய் நீ…
ஒரு அன்னத்தைப் போல.
--