top of page
கண்ணீர் இரவுகள்
கவிதை

கனவுகளைக் களவாடிப் போன இரவில்
என்னை முதன்முதலாய்ச் சுகித்தான்.
அந்த இரவில் தரித்த நிர்வாணம்
இன்னும் களையப் படாமலேயே இருக்கிறது.
ஏதேன் தோட்டத்தின் விலக்கப்பட்ட கனியை
கடித்து கைமாற்றி உண்ணக் கொடுத்த
தினத்தில் தொடங்கியது அந்த ஆதி நிர்வாணம்.
பழித்துப் பின் ருசிக்கத் தொடங்கியவனின்
பசி இன்னும் தீர்ந்த பாடில்லை.
அப்படியே அவனின் பழிக்கும் குணமும்.
பித்தத்தின் உச்சத்தில்
அவன் சிந்திச் சிறடிக்கும்
சொற்களின் அர்த்தங்கள்
விடியலில் அனர்த்தங்களாய் விடுகிறது.
கூடலின் இறுதியில் எறியும்
கடைசி ஒற்றைச் சொல்லில்
கூர்மிகும் குறுவாளொன்றினை
இதயச் சுவரின் பக்கவாட்டில்
பக்குவமாய்ச் செருகி பின்
முதுகழுந்தத் துயில்கிறான்.
கண்ணீரில் கரைகிறது இன்னும்
விடியாமல் நீளும் எல்லா இரவுகளும்.
bottom of page