top of page
ஒரு கவிதை உருவாகிறது
கவிதை

நான் அந்தக் கவிதையை
எழுத உத்தேசித்தபோது
காலையில் சூரியன்
உதிக்கவேயில்லை.
அலைபேசி தொடுதிரையில்
எழுதுவது உசிதமானது
அடித்தலில்லாமல் எழுதுவதற்கு
வசதியானதும் கூட.
அனுதினமும் என்றுதான் துவங்கினேன்
அந்தக் கவிதையை.
அப்போது தேநீர் தயாராகிவிட்டதென
கேட்டதொரு நீண்ட விசில் சத்தம்
என் முந்தைய கவிதைக்கான
கடைசிவரியை தந்தது.
இக் கவிதை அனுதினத்திலேயே
ஒரு அந்தரத்தில் தொங்கிக்
கொண்டிருந்தது.
அடுத்தவரிக்கான திராணிகளை
கையில் ஏந்திய தேநீர் கோப்பை
வழங்குமென நினைத்திருந்தேன்.
அப்போதுதான் எழுந்து வந்தவள்
முத்தமொன்றைத் தந்துபோனாள்.
அந்தவொரு முத்தம் ஒருநூறு
கவிதைகளாய் கன்னத்தில்
வழிந்து கொண்டிருக்கிறது.
bottom of page