எமோஜீகளாலானது உலகு
கவிதை

என்னிடமும்
எமோஜீக்கள் இருக்கின்றன.
உங்கள் உரையாடலுக்குத் தக்க
ஏதேனும் ஒன்றை
உங்களுக்குத் தருவதிலிருந்து
அதை நீங்கள் அறியலாம்.
மேலும்
நானவற்றை
உங்களுடனான என்
உரையாடல் சமயங்களில்
நீங்கள் தந்த பொழுதிலெல்லாம் தான்
சேமிக்கத் துவங்கியிருந்தேன்.
நம்மிடம் எமோஜீக்கள்
தீர்ந்துவிடும் சமயமொன்று
நேருங்காலத்தில்
நாம் நம் உரையாடலுக்குப் பதிலாய்
இன்னொரு உரையாடலையேத்
தருவோம் தான்.
முன்பொரு காலத்தில்
செய்ததைப் போல.
உரையாடலுக்குப் பதிலாய்
உரையாடலைத் தருவததை விட
எமோஜீக்களைத் தரும் பொழுதில்
அவ்வுரையாடல்
எவ்வளவு அழகாய்
அமைந்திருந்து என்பதை
நீங்களும்
கவனித்திருப்பீர்களென்று
நான் நம்புகிறேன்.
அதற்காகவேணும்
நாம் நம் எமோஜீக்களைச்
சிக்கனமாகச் செலவழிக்க
வேண்டியிருக்கிறது.
எமோஜீக்கள் தான்
எத்தனை அழகாய் சிரிக்கின்றன.
எத்தனை அழகாய் கோபிக்கின்றன
எத்தனை அழகாய் வருந்துகின்றன.
அவற்றைப் போல
இத்தனை தத்ரூபமாய்
நம்மால் சிரிக்க முடியுமா
அழத்தான் முடியுமா.
சொல்லுங்கள்.