வரம் தந்த சாமிக்கு...
சிறுகதை

ஒரு பதின் வயது பையனுக்கு அவன் அம்மாவைத் தவிர வேறு எந்தவொரு பெண்ணும் ஆதர்சமாய் இருந்துவிட முடியாது. ஆனால் நான் அந்த வயதில் இருந்த பொழுது எனக்கு ஆதர்சமாய் மட்டுமல்லாது ஆச்சர்யமான ஒரு பெண்ணாகவும் இருந்தவள் வசந்தியக்காள். வசந்தியக்காளுக்கு நானோ, எனக்கு வசந்தியக்காளோ இரத்த சம்பந்தப்பட்ட உறவில்லை என்றாலும் அவளுடனான என் உறவு இரத்தத்தை விட அடர்த்தியானது.
நான் என்னுடடைய நண்பர்களான நம்பியுடனும் சங்கரனுடனும் விடுமுறை தினங்களில் கொட்டமடித்துக் கொண்டிருக்கும் நூறாம் நம்பர் கதவிலக்கம் கொண்ட அந்த எட்டு ஒட்டுக் குடித்தனங்கள் குடியிருந்த வீடுகளில் ஒன்றில் ஒரு சனிக்கிழமையில் புதிதாய் குடி வந்த வசந்தியக்காள் அப்போது டீச்சர் ட்ரெய்னிங்க் படித்துக் கொண்டிருந்தாள். வீட்டில் ஒத்தைக்கொரு பெண்ணாய் அவள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் செல்லமாய் வளர்ந்திருந்தாள் என்பது அவள் வந்த கொஞ்ச நாட்களிலேயே எல்லாருக்கும் தெரிந்தது.
முதலில் அவள் நம்பிக்குத் தான் அக்காளாய் ஆனாள். நான் நம்பியைத் தேடிப் போகும் நாட்களில் எல்லாம் அவன் அவனது வீடான நூறின் கீழ் இரண்டில் காணக் கிடைக்காமல் நூறின் கீழ் ஐந்தான வசந்தியக்காள் வீட்டில் கிடைத்துக் கொண்டே இருந்தான். அப்படித்தான் நானும் வசந்தியக்காளின் வீட்டுக்குப் போக ஆரம்பித்தேன்.
அப்படி நான் நம்பியைத் தேடி போன ஒரு நாளில் வசந்தியக்காள் தனது ட்ரெயினிங்கிற்காக தமிழ்நாடு மேப்பை வரைய முற்பட்டுக் கொண்டிருந்தாள். அவளுக்கு அது போக்குக் காட்டிக் கொண்டிருந்தது. ஒழுங்காக வரவே இல்லை. ஏற்கனவே மூன்று சார்ட்டு பேப்பர்களை வம்பாக்கி வைத்திருந்தாள் வசந்தியக்காள். நான் அவளிடம் மெதுவாக
என்னக்கா ரொம்ப சிரமமா இருக்கா மேப் வரையறது.. என்று சாதாரணமாகக் கேட்டுவிட்டு, நான் வேணா வரைஞ்சு தரவா... என்றேன். நீ படமெல்லாம் கூட வரைவியா என்று சந்தேகத்தோடு ஒரு பதில் கேள்வியைக் கேட்டவள் தான் வரைவதை நிப்பாட்டாமலேயே ஒரு அரை மனதோடு நான்காவது சார்ட் பேப்பரை என்னிடம் தந்தாள். பென்சில் கொஞ்சமாய் என் கை சொற்படி கேட்கும். நான் வளையச் சொன்ன இடத்தில் அது வளையும். நான் நெளியச் சொன்ன இடத்தில் அது நெளியும்.
அவள் வீட்டுத் திண்ணையில் உக்கார்ந்தே அந்த சார்ட்டுப் பேப்பர் முழுவதும் நிறையும் அளவிற்கு தமிழ்நாடு பொலிட்டிக்கல் மேப்பை நான்கு மணி நேரத்திற்கும் கொஞ்சம் அதிகமாய் எடுத்துக் கொண்டு வரைந்து கொடுத்தேன். என் வரைதலில் வளரும் தமிழ்நாட்டைப் பார்த்த வசந்தியக்காள் தான் வரைவதை அப்போதே நிப்பாடியிருந்தாள். அச்சில் வார்த்த மாதிரி இருந்த நான் வரைந்த தமிழ்நாடு மேப்பை பார்த்த வசந்தியக்காள்
எப்டிரா இவ்ளோ அழகா வரைஞ்சே.. என்று கேட்டாள்.
தமிழ்நாடு மேப் கிட்டத்தட்ட ஒரு பெண்ணின் முகத்தைப் போல இருக்கும். நெற்றிப் பொட்டில் மெட்ராஸையும் (அப்போது அது மெட்ராஸ் தான். அப்புறமாய்த் தான் சென்னையாயிற்று.), மூக்கைப் போல இருந்த நாகப்பட்டினத்தையும், வாயோரத்தைப் போலிருக்கும் இராமநாதபுரத்தையும், மூக்குக்கும் வாய்க்கும் நடுவில் ஒரு புல்லாக்கைப் போல தொங்கும் தனுஷ்கோடியையும் வசந்தியக்காளுக்குக் காண்பித்து பாத்தியாக்கா.. கிட்டத்தட்ட ஓம் முகத்தை மாதிரியே இருக்குன்னு சொல்லவும், நான் ஒரு பதினான்கு வயது பையனென்றும் பாராமல், அப்படியே என்னைக் கட்டிக் கொண்டாள் வசந்தியக்காள். அம்மாவைத் தவிர என்னை முதன்முதலில் கட்டியணைத்த வேறொரு பெண் வசந்தியக்காள் தான்.
மெத்து மெத்தென்ற ஒரு பெண்ணின் தேகத்தின் அணைப்பு ரொம்பப் புதிதாய் இருக்கவே எனக்கு வெட்கம் வெட்கமாய் வந்தது. நான் வெட்கத்தில் விலகுவதைப் பார்த்த வசந்தியக்காள் இங்க பார்ரா பெரிய மனுஷனுக்கு வெட்கத்தை என்று சொல்லி என்னை தன் பக்கமாய் இழுத்து மீண்டுமொரு முறை அணைத்தாள். இந்த முறை நான் அவளை விட்டு விலகவில்லை. நிமிர்ந்து அவள் முகத்தைப் பார்த்தேன். அப்போது அவள் சிரித்த அந்த கபடமற்ற சிரிப்பை நான் இந்நாள் வரை மறக்கவே இல்லை.
அதன் பின்னான நாட்களில் நான் ஒரு நாள் கூட அவளைப் பார்க்கப் போகவில்லை என்றாலும் வசந்தியக்காள் கோவித்துக் கொள்ள ஆரம்பித்தாள். நாளைக்கு உனக்கு இங்கே வர முடியலைன்னா எனக்கு இன்னிக்கே சொல்லிரு.. நீ சொல்லிவிட்டாய் என்றால் உன்னைத் தேடிக் கொண்டிருக்க மாட்டேனில்லையா.. என்பாள். எனக்கும் அவளைப் பார்க்காத நாளெல்லாம் பிறவாத நாளாயிற்று.
டெலிவிஷன் என்றால் என்னவென்றே தெரியாத அந்த நாட்களில் வசந்தியக்காளுக்கு எப்போதும் துணையாய் இருந்தது ஒரு ஃபிலிப்ஸ் ட்ரான்ஸிஸ்டர் தான். மத்திய அலைவரிசையில் உள்ளூர் ஸ்டேஷனோ அல்லது இலங்கை வானொலி நிலையமோ எதையாவது ஒன்றை வைத்து அந்த ட்ரான்ஸிஸ்டரில் ஒரு புதுப் பாட்டையோ அல்லது ஒரு படத்தின் ஒலிச் சித்திரத்தையோ கேட்டுக் கொண்டே இருப்பாள் வசந்தியக்காள். படிக்கும் போதும் அல்லது எதாவது எழுதிக் கொண்டிருக்கும் போதும் அவளுக்கு அந்த ட்ரான்ஸிஸ்டர் சன்னமான சத்ததில் பாடிக் கொண்டிருக்க வேண்டும். அவளுக்குப் படிக்கும் வேலை இல்லையென்றால் எங்களுடன் சேர்ந்து சீட்டுக் கட்டில் கழுதை விளையாடுவாள். அப்போதும் அந்த ட்ரான்ஸிஸ்டர் படிக் கொண்டிருக்கும். அது பாடாத நேரத்தில் வசந்தியக்காள் பாட ஆரம்பித்து விடுவாள்.
நான், சங்கர், சங்கரின் தங்கை, நம்பி மற்றும் வசந்தியக்காள் என ஐந்து பேரும் வட்டமாக அமர்ந்து நடுவாந்திரமாய் வசந்தியக்காள் வீட்டுப் போர்வை ஒன்றை விரித்து சீட்டாடுவோம். நம்பி கழுதை விளையாட்டில் ஜித்தன். மனக் கணக்கில் இறங்கும் சீட்டுகளை எண்ணி வைத்துக் கொள்வான். இஸ்பேடு இரண்டு ரவுண்டு வெட்டில்லாமல் போனதால் பத்து சீட்டுகள் கழிந்து விட்டன. இன்னும் மூன்றே மூன்று இஸ்பேடுகளே ஆட்டத்தில் இருக்கின்றன. தன்னிடம் ஒன்று இருக்கிறது, இன்னும் இரண்டு யார் யாரிடம் இருக்கின்றன என்று கணக்குப் போட்டு விளையாடுவான்.
நான்கு பேர் அமர்ந்து ஆடும் நாட்களில் அவனிடம் ஐந்து க்ளாவர் சீட்டுகள் வந்து விட்டதெனில் அதிகபட்சம் அந்த ஆட்டத்தில் மூன்று முறை தான் க்ளாவர் வெட்டில்லாமல் கழியும் என்று ப்ராபபிலிட்டி கணக்கு போட்டு பெரிய எண்களைக் கொண்ட க்ளாவர் சீட்டுகளை வெட்டுக் கொடுக்க வைத்துக் கொள்வான். கூட விளையாடும் மற்ற அனைவரும் கைச் சீட்டுகள் காலியாகி அடுத்த ஆட்டத்திற்குக் காத்திருக்கும் போது எதிரும் புதிருமாக இரண்டு பேர் ஆடும் ஆட்டத்தின் கடைசி கட்டங்களில் இந்தக் கணக்குகளையெல்லாம் போட்டு எதிராளியிடம் உன்னிடம் இரண்டு டைமண்டு சீட்டுகளும் ஒரு ஹார்ட்டும் இருக்கிறது என்று சொல்லி அதிர வைப்பான். நம்பியோடு ஆடியாடி எனக்கும் இந்த கணக்குகள் புரிய ஆரம்பித்தவுடன் இரண்டு பேரும் கூட்டு சேர்ந்து கொண்டு மற்ற எல்லாரையும் கழுதை வாங்க வைப்பதைத் தொழிலாய் வைத்திருந்தோம்.
வசந்தியக்காளுக்கு அவள் படிப்பு சம்பந்தப்பட்ட கணக்குகள் வருமோ வராதோ தெரியவில்லை. ஆனால் அவளுக்கு இந்த சீட்டாட்டத்தின் கணக்கு கடைசி வரை புரிபடவே இல்லை. அதனால் ஆரம்பத்தில் அதிகமாகத் தோற்றுக் கொண்டிருந்தவள் பின்னர் தான் ஜெயிப்பதற்கு ஒரு உத்தியைக் கையாண்டாள். அது வேறு ஒன்றுமில்லை. அவளுக்கு அடுத்தாற்போல என்னுடைய டர்ன் வரும் மாதிரியாக, எனக்கு வலப்பக்கத்தில் வந்து அமர்ந்து கொள்வாள். அந்த இடத்தை அவள் வேறு யாருக்கும் தரவே மாட்டாள். அவளுக்கு அடுத்து தானே என் முறை. அதனால் எதைப் போடுவது எதைப் போடக் கூடாது என்றெல்லாம் என்னிடம் அவள் தன் சீட்டுகளைக் காண்பித்துக் கேட்டுக் கொண்டு அதைப் போடுவாள். இப்படி நம்பியுடன் இருந்த சீட்டாட்ட கூட்டு எனக்கு வசந்தியக்காளுடன் உருவானதைக் கண்டு நம்பிக்குப் பயங்கர கோவம் வந்தது. இருந்தாலும் நாங்கள் கொண்டிருந்த அத்தனை வருட நட்பின் பேரில் என்னிடம் அவன் சண்டை பிடிக்காமல் இருந்தான். பல சமயங்களில் ஒரு ஆட்டத்தில் என்னுடைய சீட்டுகள் காலியானதும் நான் வசந்தியக்காளுக்காக விளையாடி அவளை ஜெயிக்க வைத்துக் கொண்டிருந்தேன்.
அந்த வருடக் கடைசியில் பூர்ணகலாவில் கமல் நடித்த சிப்பிக்குள் முத்து படம் ரிலீஸாயிருந்தது. அதன் பாடல்களை உள்ளூர் ரேடியோ ஸ்டேஷனும், இலங்கை வானொலி நிலையமும் மாறி மாறி ஒலிபரப்பிக் கொண்டிருந்தன. அதில் வந்த லாலி லாலி பாட்டு வசந்தியக்காளின் பிடித்த பாடல் வரிசையில் முண்டியடித்துக் கொண்டு முதலிடத்தைப் பிடித்துவிட்டது. எல்லா நேரங்களிலும் வசந்தியக்காள் அந்தப் பாடலையே முனுமுனுக்க ஆரம்பித்தாள். அப்போதெல்லாம் எனக்கு ரேடியோவில் பாடும் சுசீலாம்மாவை விட வசந்தியக்காள் நன்றாகப் பாடுவதாய்த் தோன்றும்.
சீட்டாட்டங்களின் நடுவினில் அந்தப் பாடலை மெலிதாய் முனுமுனுக்கும் வசந்தியக்காள், ஒரு ஆட்டம் முழுவதும் முடியாத நிலையில் நாங்கள் அடுத்த ஆட்டத்திற்குக் காத்திருக்கும் இடைப்பட்ட பொழுதுகளிலோ அல்லது நான் அவளுக்காய் அவளுடைய ஆட்டத்தை விளையாடித் தரும் பொழுதுகளிலோ அவள் என்னைத் தன் தோளில் சாய்த்துக் கொண்டோ அல்லது அவள் என் தோளில் சாய்ந்து கொண்டோ
கல்யாண ராமனுக்கு கௌசல்யை நானே..
யது வம்ச வீரனுக்கு யசோதை நானே..
கரு யானை முகனுக்கு..
கரு யானை முகனுக்கு மலையன்னை நானே...
பார் போற்றும் முருகனுக்கு பார்வதியும் நானே..
என்ற நான்கு வரிகளை மட்டும் திரும்பத் திரும்பப் பாடுவாள். தன்னை ஒரு அன்னையென, என்னை அவள் பிள்ளையென ஒரு அதீத கற்பனையிருக்கும் அவள் அவ்வரிகளைப் பாடுகையில்.
வசந்தியக்காளுக்கு தன் ட்ரெயின்ங்கிற்காக அடிக்கடி ஜங்ஷனிலிருக்கும் ஸ்டேஷனரி ஷாப்புக்குச் செல்ல வேண்டியிருக்கும். சார்ட்டு பேப்பர்கள் வாங்க... சார்ட்டு பேப்பரில் ஒட்டுவதற்குப் படங்கள் வாங்க.. வரைந்த படங்களில் வர்ணம் பூச க்ரேயான்கள் மற்றும் கலர்கள் வாங்க என இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அவளுக்கு ஜங்ஷனில் எதையாவது வாங்க வேண்டிய வேலையிருக்கும். ட்ரெய்னிங் ஸ்கூலிலிருந்து போனாள் என்றால் அவளே போய் வந்து விடுவாள். வீட்டிலிருந்து போக வேண்டியிருந்தால் அவளுக்குத் துணைக்கு ஒரு ஆள் வேண்டியிருக்கும். அவளுக்கு என்னை விட்டால் வேறு யார் துணை. எனவே என்னையயே அழைத்துக் கொண்டு போவாள்.
சாலைக்குமரன் கோவில் இருக்கும் அந்த பஜாரில் டீச்சர் ட்ரெயின்ங் படிக்கும் வசந்தியக்காளைப் போன்றவர்களுக்கென ஒரு பிரத்தியேகக் கடையிருந்தது. அங்கே அவளுக்கு வேண்டிய சகல வஸ்துகளும் ஒரே இடத்தில் கிடைக்கும். நானும் அவளும் வீட்டிலிருந்தே நடந்தே போய் விட்டு நடந்தே வந்து விடுவோம். கடைக்குப் போய் சமான்கள் வாங்கும் முன்பு சாலைக் குமரனைக் கட்டாயம் கும்பிட வேண்டும் வசந்தியக்காளுக்கு. கோயிலையொட்டிய சாம்பிராணிக் கடையில் ஒரு பாக்கெட் சூடனும் ஒரு தீப்பெட்டியும் வாங்குவாள். பின் ஒவ்வொரு சந்நிதியாய் சென்று சந்நிதிக்கு இரண்டிரண்டாய் சூடன்கள் பொருத்தி கண் மூடி வேண்டுவாள் வசந்தியக்காள். கடைசி சந்நிதியில் மிச்சமிருக்கும் அத்தனை சூடன்களையும் பொருத்திவிட்டு, வாங்கிய தீப்பெட்டியையும் அங்கேயே வைத்தும் விடுவாள். எனக்கு வசந்தியக்காள் ஒவ்வொரு தெய்வத்திடமாய் போய் அப்படி என்ன தான் வேண்டிக் கொண்டாள் என்பதைத் தெரிந்து கொள்ள மிகவும் ஆவலாய் இருக்கும். கேட்டால் இந்தா ஏந்தம்பி எங்கூட இதே மாதிரி பாசமாய் எல்லா நாளும் இருக்கனும்ன்னு வேண்டிக்கிட்டேன் என்பாள். நெசம்மாவே அதைத் தான் வேண்டிக் கொண்டாளா. நான் இவ மேல பாசமில்லாம எங்கப் போயிடப் போறேன்னு தோணினாலும் அவள் அந்நேரம் அப்படிச் சொல்லும் போது மனசு பூராவும் ஒரு சந்தோசம் நிறையத் தான் செய்யும். அந்த சந்தோசத்திற்காகவே வசந்தியக்காள் எப்ப சாலைக்குமரன் கோவிலுக்குக் கூப்பிட்டாலும் நான் போகத் தயாரா இருப்பேன்.
அப்படித்தான் அந்த வருஷப் பொங்கலுக்கு இரண்டு வாரத்துக்கு முன்னால் நானும் வசந்தியக்காளும் ஜங்ஷனுக்குப் போனோம். கோயிலுக்குப் போய்விட்டு, அவளுக்கு சார்ட்டு பேப்பர்கள், படங்கள் எல்லாம் வாங்கிவிட்டு வீடு திரும்புவதற்கு முன்னால் வசந்தியக்காள் பொங்கல் வாழ்த்து அட்டைகள் விற்கும் கடைக்கு கூட்டிக் கொண்டு போனாள். நிறைய அட்டைகள் வாங்கினாள். சாமிப் படங்கள் வரைந்த அட்டைகள் அவற்றில் நிறைய இருந்தன. முருகன் வள்ளி தெய்வானையுடன், சிவனும் பார்வதியும், வெங்கிடாசலபதி தனித்து நிறகிறாற்படி என நிறைய அட்டைகள் வாங்கினாள். அதில் கன்னி மரியாள் குழந்தை யேசுவைத் தூக்கி வைத்திருந்த அட்டை ஒன்றும் இருந்தது. எல்லாம் கூடப் படிக்கிற பிள்ளைகளுக்கு என்று சொன்னாள். நான் கரும்பும் பொங்கல் பானையும் வயலும் சூரியனும் இருக்கிற மாதிரியான அட்டைகளை எடுத்துக் கொடுத்தேன். பொங்கல்ன்னாலே கரும்பும் பானையும் தானே. அவற்றிலும் ஒன்றிரண்டு வாங்கிக் கொண்டாள். அதற்கப்புறம் மியூஸிக்கல் நோட்ஸ் எழுதி அவற்றுடன் ஒரு வயலினும் அதை வாசிக்க ஒரு பௌவும் வயலினைச் சுற்றி உதிர்த்து விடப்பட்ட ரோஜா இதழ்களுமென ஒரு பொங்கல் வாழ்த்து அட்டயை எடுத்து ரொம்ப நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள். மிகவும் அழகாக இருந்த அந்த அட்டையை வாங்கலாமா வேண்டாமா என்று ஒரு ஐந்தாறு நிமிடங்கள் யோசனை செய்துவிட்டு எதற்கும் இருக்கட்டும் என்கிற மாதிரி வாங்கி வைத்துக் கொண்டாள்.
வீட்டிற்கு வந்ததும் தன் நோட்டுப் புத்தகம் ஒன்றில் எழுதி வைத்திருந்த தன்னுடைய ட்ரெய்னிங்க் ஸ்கூல் நண்பர்களின் முகவரிகளை எடுத்து விரித்து வைத்துக் கொண்டு அழகாய் மெல்லிசாய் பச்சைக் கலரில் எழுதும் மைக்ரோ பாயிண்ட் டிப் பேனாவைத் திறந்து என்னிடம் கொடுத்தாள். என் கையெழுத்தின் மீது அவளுக்கு அபார நம்பிக்கை. அவள் தன் தோழிகளின் பெயர் ஒவ்வொன்றாய்ச் சொல்லி, வாங்கி வந்திருந்த பொங்கல் வாழ்த்து அட்டைகளில் எது அந்தத் தோழிக்குப் பொருத்தமாய் இருக்கும் என்றும் சொல்லி, ஒரு ஜோஸியக்காரனின் கிளி அவன் அடுக்கி வைத்திருக்கும் அட்டைகளை ஒவ்வொன்றாய் எடுக்கும் அதே லாவகத்துடன் பொறுக்கி எடுத்து என்னிடம் கொடுத்தாள். அவள் சொல்லும் பெயருடைய தோழியின் முகவரியை நான் அவள் நோட்டிலிருந்து பார்த்து அட்டையின் கவரில் மிகவும் மெனெக்கெட்டு உருட்டி உருட்டி அச்சுக் கோர்த்தாற் போல எழுதிக் கொடுத்தேன்.
எல்லா அட்டைகளிலும் பெயர் எழுதியாயிற்று. கன்னி மரியாள் இருந்த அட்டையும் வயலின் இருந்த அட்டையும் மட்டும் தான் பாக்கியிருந்தன. நான் வசந்தியக்காளிடம் இந்த இரண்டுக்கும் பெயர் எழுத வேண்டாமா என்று கேட்க அதான் எல்லாம் எழுதியாச்சுல்லா. இந்த இரண்டும் சும்மா தான் வாங்கினேன் என்று சொல்லி உள்ளே எடுத்து வைத்து விட்டாள். அதன் பின் நானும் அதைக் குறித்து அவ்வளவு யோசிக்கவில்லை.
அடுத்த வாரம் பொங்கலுக்கு முதல் நாள் அவளப் பார்க்க போன போது வசந்தியக்காள் “அன்புத் தம்பிக்கு” என்று அடர் பச்சை நிறத்தில் அவளுடைய கையெழுத்தில் எழுதி அதற்குக் கீழே பிங்க் நிறத்தில் இரண்டு ஹார்ட்டுகள் வரைந்திருந்த ஒரு வாழ்த்துக் கவரை என்னிடம் தந்தாள். நான் ஆசையாய் வாங்கி கவரைத் திறந்து பார்த்தேன். உள்ளே வயலினனும் பௌவும் உதிர்ந்த ரோஜா இதழ்களுமாய் அவள் யோசித்து யோசித்து வாங்கிய அந்த வாழ்த்து அட்டை இருந்தது. சந்தோசத்தின் மிகுதியால் நான் (இந்த முறை) வசந்தியக்காளைக் கட்டிக் கொண்டேன்.
வசந்தியக்காள் டீச்சர் ட்ரெய்னிங்க் முடித்து விட்டாள். பாஸ் பண்ணியாயிற்று. உடனே வேலை கிடைச்சிருமாக்கா என்ற என் கேள்வியில் தெரிந்த அப்பாவித் தனம் அவளுக்கு அந்த வெடிச் சிரிப்பைத் தந்திருக்க வேண்டும். அப்படி ஒரு சிரிப்பைச் சிரித்தாள். ஆமடா.. உன் அக்காள் எப்போது படிச்சு முடிப்பாள்ன்னு அவனவன் கையில வேலையை வச்சிட்டு காத்திருக்கான் பாரு.. உடனே தூக்கிக்கொடுக்க.. என்றாள். அப்ப என்ன செஞ்சா வேலை கிடைக்கும்க்கா என்று கேட்டதற்கு எம்ப்ளாய்மெண்டட் ஆபீஸ்ல போயி பதிஞ்சு வைக்கனும் மொதல்ல. எந்த கெவர்மெண்டு ஸ்கூல்லயாவது வேலை காலியாச்சுன்னா எக்ஸேஜ்சுலேருந்து இன்டர்வ்யூ கார்டு வரும். இன்டர்வ்யூவில பாஸானா வேலை கிடைக்கும். அதுக்கும் எவ்வளவு காசு கொடுக்கனுமோ தெரியலை என்று பெருமூச்சுடன் பதில் சொன்ன வசந்தியக்காள் அடுத்த வாரம் போய் பதியலாம்ன்னு இருக்கேன். அடுத்த வாரம் போலாந்தானே என்றாள். சரியென்று சொன்னேன்.
எக்ஸேஞ்சுக்கு போகும் நாளில் புதுச் சேலை கட்டிக் கொண்டு வசந்தியக்காள் அப்படி அழகாகக் கிளம்பியிருந்தாள். நான் அவளைப் பார்த்ததும் கேலிக்காய் என் இரண்டு கைகளாலும் அவளுக்கு திருஷ்டி சுற்றும் பாவனை காட்டி எனது நெற்றியில் நெட்டி முறித்தேன். வசந்தியக்காளுக்கு வெட்கம் வந்தது. போடா எனச் செல்லமாய் என் கன்னத்தில் தட்டினாள்.
இருவரும் நடந்தே எம்ப்ளாய்மென்ட் எக்ஸேஞ்சுக்குப் போனோம். அங்கே வழக்கம் போல நல்ல கூட்டம் இருந்தது. வரிசையில் காத்திருக்கச் சொன்னார்கள். அப்புறம் வரிசையில் காத்திருந்தவர்களை அவரவர் படிப்பு வாரியாகப் பிரித்து உட்காரச் சொன்னார்கள். பின் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஃபாரம் கொடுத்து நிரப்பச் சொன்னார்கள். மீண்டும் வரிசையில் வரச் சொல்லி நிரப்பிய பாரத்தை சரி பார்த்து மீண்டும் காத்திருக்கச் சொன்னார்கள். மதியம் ஒரு மணிவாக்கில் ஒவ்வொரு பெயராய் கூப்பிட்டுக் கூப்பிட்டு ஒரு பழுப்பு நிறத்தில் போஸ்ட் கார்டு சைஸில் ஒரு கார்டு ஒன்றை கையில் கொடுத்தார்கள். வசந்தியக்காளும் அவளிடம் கொடுத்த கார்டை வாங்கிக் கொண்டு வந்தாள்.
வந்த வேலைமுடிஞ்சுதாக்கா .. வீட்டுக்குப் போவோமா என்று கேட்கவும் இருடா இன்னோரு முக்கியமான வேலை இருக்கு என்று சொன்னவள் யாரையோ இங்கேயும் அங்கேயுமாகத் தேடினாள்.யாரைக்கா தேடுற என்று கேட்டதற்கு இருடா என்ன அவசரம் என்றாள். கொஞ்ச நேரத்தில் பைக்கில் வந்தவனைப் பார்த்து வாஞ்சையாய்ச் சிரித்தாள் வசந்தியக்காள். அதுவே எனக்குப் பிடிக்கவில்லை. அதைவிட அவன் கோலத்தை அவன் முடியழகை அவனணிந்திருந்த உடையை என எதுவுமே எனக்குப் பிடிக்கவில்லை. இருந்தாலும் அக்காவிற்குத் தெரிந்தவன் என்று நான் எதுவுமே சொல்லவில்லை. தம்பி ஏறுடா என்று என்னை அவனுக்கு அடுத்தாற் போல ஏறி உட்காரச் சொன்னாள் வசந்தியக்காள். அவள் சொல்லி நான் எதைச் செய்யாமல் இருந்திருக்கிறேன். சத்தமில்லாமல் ஏறி உட்கார்ந்தேன். எனக்கு அடுத்தாற்போல மூன்றாவது ஆளாய் அவளும் ஏறி அமர்ந்து கொண்டாள். அவன் அங்கிருந்து கிளம்பி அந்த அரசு அலுவலகங்கள் எல்லாம் ஒன்றாய் இருந்த அதே வளாகத்தினுள் இன்னொரு அலுவலகத்திற்கு எங்களை அழைத்துக் கொண்டு போனான். அங்கே இன்னும் சிலரைப் பார்த்து சிரித்த வசந்தியக்காளை இரண்டு பெண்கள் வந்து கட்டிக் கொண்டார்கள்.
ஏய்! அவள் என்னுடைய அக்காள். நீங்களெல்லாம் ஏன் அவளைக் கட்டிக் கொள்கிறீர்கள்.. என்று என் மனதிற்குள் சத்தமாய்க் கத்தினேன். ஆனால் அவர்கள் யாரும் ஏன் வசந்தியக்காள் உட்பட என்னை பொருட்படுத்தவே இல்லை.
சற்று நேரத்தில் வசந்தியக்காளுக்கு அந்தப் பெண்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த மாலையைப் போட்டு விட்டார்கள். பைக்கில் வந்தவனும் தனக்கொரு மாலையை தன் கழுத்தில் போட்டுக் கொண்டான். எனக்கு என்ன நடக்கிறதென்று மெல்ல புரிய ஆரம்பித்தது. கண்ணில் நீர் கோர்த்துக் கொண்டது.
அய்யய்யோ.. போயும் போயும் இந்த பைக் காரனையா வசந்தியக்காள் கல்யாணம் செய்யப் போகிறாள். அக்காள் அவனைக் காதலிக்கிறாளா. ஊருக்குள் நான் பல அண்ணன்களின் அக்காக்களின் காதல் கதைகளை கேட்டிருந்தாலும் முதன் முதலில் ஒரு காதல் கல்யாணத்தை நேரில் பார்க்கப் போகிறேன். அப்படியானால் இது ரிஜிஸ்டர் ஆபீஸா.. எப்படி இப்படி அப்பா அம்மா இல்லாமல் உறவினர்கள் இல்லாமல் கல்யாணம் செய்து கொள்கிறார்கள் இவர்கள். மற்றவர்களை விடுங்கள்.. வசந்தியக்காள் எப்படி இப்படி செய்யத் துணிந்தாள். அக்கா.. இது தப்பு. யார் வேண்டுமானாலும் இப்படி திருட்டுக் கல்யாணம் செய்து கொள்ளட்டும். நீ செய்யக் கூடாது.. அவனுக்கு வேண்டுமானால் இதோ இங்கே வந்திருக்கும் இந்த இரண்டு பேரில் யாரையேனும் ஒருத்தியைக் கல்யாணம் கட்டிக் கொள்ளட்டுமே.. நீயே தான் வேண்டுமா அவனுக்கு.. டேய்.. உனக்கு என் வசந்தியக்காள் தான் கிடைத்தாளா.. வசந்தியக்காளை என்னவெல்லாம் சொல்லி இதற்குச் சம்மதிக்க வைத்தாய். நான் எத்தனை சினிமா பார்த்திருக்கிறேன். அத்தனை சினிமாவிலும் வருகிற வில்லன் மாதிரியே இருக்கிறாயடா.. அக்கா.. வேண்டாம்க்கா.. வா நாம் வீடிற்கே போய்விடலாம்.. என்றெல்லாம் நான் மனதிற்குள் அந்த பைக் காரனுடன் வீரதீரமாய் சண்டை போட்டுக் கொண்டிருந்தேன்.
ஆனால் வெளியே ஒன்றுமே சொல்லாமல் என் உணர்ச்சிகளை எல்லாம் அடக்கிக் கொண்டிருந்தேன். அதனாலோ என்னவோ எனக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. நான் அழப் போகிறேன் என்று பார்த்த வசந்தியக்காளின் தோழி ஒருத்தி அதை வசந்தியக்காளிடம் காண்பித்து குசுகுசுவென ஏதோ சொன்னாள். உடனே வசந்தியக்காள் நேராய் என்னிடம் வந்து
டேய் தம்பி.., அப்பாகிட்டயோ அம்மாகிட்டயோ போயி இவரைக் கல்யாணம் பண்ணி வைய்ங்கன்னு சொல்ற தைரியம் எனக்கு இல்லை. அதையும் மீறி நான் சொன்னாக் கூட அவங்க இந்த கல்யாணத்துக்கு சம்மதிப்பாங்கன்னு எனக்குத் தோணலை. அதனால தான் இந்த முடிவு. ஆனா என் வீட்டிலேருந்து யாருமே இல்லாம என்னோட கல்யாணம் நடக்கக்கூடாதுன்னு நினைச்சுத் தான் உன்னைய என் துணைக்குக் கூட்டிட்டு வந்திருக்கேன். நீ ஏங்கூட இருந்தா அந்த சாலைக்குமரனே ஏங்கூட இருக்குற மாதிரி. அக்காவோட இஷ்டம் தானே தம்பிக்கும் இஷ்டம் இல்லையா.. எந்தத் தம்பியாவது தன் அக்காவோட கல்யாணத்தில அழுவானா.. அதனால நீ இப்ப அழக் கூடாது.. சரியா என்றாள்.
நான் என் அழுகையை கஷ்டப்பட்டு அடக்கினேன். வசந்தியக்காள் அந்த பைக்கில் வந்தவனை மாலை மாற்றி கையெழுத்துப் போட்டு கல்யாணம் பண்ணிக் கொண்டாள். உடன் வந்தவர்களும் அங்கே கையெழுத்திட்டார்கள். போட்டோக்கள் எடுத்துக் கொண்டார்கள். நானும் கண்ணீர் மல்க அக்காவுடன் நின்றேன். எல்லாம் முடிந்ததும் பைக்கில் வந்தவன் என்னை நோக்கி தன் வலக் கரத்தை நீட்டினான். நானும் அனிச்சையாக நீட்டினேன். அவன் என் கரத்தை அழுந்தப் பற்றி குலுக்கினான். வசந்தியக்காள் சற்றே குனிந்து என் கன்னத்தில் முத்தமிட்டாள்.
எல்லாரும் அந்த அலுவலகத்தின் வாசலுக்கு வந்தோம். வசந்தியக்காளின் நண்பர்கள் எல்லாரும் ஒருத்தருகொருத்தர் சொல்லிக் கொண்டு கிளம்பிப் போய்விட்டார்கள். வசந்தியக்காளும் அந்த பைக் காரனும் கொஞ்ச நேரம் ஒருத்தருக்கொருத்தர் பார்த்துக் கொண்டே நின்றார்கள். பின் அவன் நான் வரட்டுமா என்று சொல்லிவிட்டு கிளம்பும் போது அவன் பைக்கின் பெட்ரோல் டேங்கில் கன்னி மரியாளும் யேசுவும் இருந்த படம் ஒட்டியிருந்ததைப் பார்த்தேன்.
அவனும் போன பின்னர் நானும் வசந்தியக்காளும் மட்டும் அந்த அலுவலக வாசலில் நின்று கொண்டிருந்தோம். வசந்தியக்காள் மெல்ல என்னிடம் என் கல்யாணத்துல நீ இருந்தேங்கிறது மட்டுமே எனக்குப் போதும்டா. ரொம்ப சந்தோசமா இருக்கேன்டா தம்பி. இனிமே எங்களை யாரும் பிரிக்க முடியாதுல்ல. சரி .. வா.. நாம நம்ம வீட்டுக்குப் போகலாம் என்று சொல்லி நடக்கத் துவங்கினாள். வீடு வந்து சேரும் வரை இரண்டு பேரும் ஒன்றுமே பேசாமல் நடந்து வந்தோம். வீட்டின் தெருவாசல் வந்ததும் வசந்தியக்காள் உள்ளே நுழைந்தாள். நான் வாசலிலேயே நின்று விட்டேன். வசந்தியக்காள் திரும்பி என்னை பார்த்தாள். நானும் அவளைப் பார்த்துவிட்டு ஒன்றுமே பேசாமல் என் வீட்டை நோக்கி நடந்தேன்.
அதற்கு அப்புறம் நான் நம்பியைப் பார்க்கக் கூட நூறாம் நம்பர் வீட்டிற்குப் போகவே இல்லை.
**********************