ரெமிங்டன்
Hixic[Dot]Com இணைய தளத்தில் வெளியான சிறுகதை.

சரசுவதி என்ற சரசுவுக்கு இந்த அரசு உத்தியோகம் இப்போது கிடைக்குமென்று யாருமே நினைக்கவில்லை. ஏன் அவள் கூடத்தான் நினைக்கவில்லை. மேலும் இப்போதெல்லாம் செகண்ட் கிரேடு படித்தால் தான் வேலை. அதுவும் சிவகெங்கை மாவட்ட எம்ப்ளாய்மென்ட் எக்சேஞ்சிலோ அல்லது தர்மபுரி எம்ப்ளாய்மென்ட் எக்சேஞ்சிலோ பதிந்தால் மட்டுமே ஏதாவது பஞ்சாயத்து போர்டு ஸ்கூலில் வேலை கிடைக்க வாய்ப்பிருந்தது. அப்படி வெளியூர் எம்ப்ளாய்மென்ட் எக்சேஞ்சில் பதிந்துகொள்ள வேண்டுமென்றால் அந்த மாவட்டத்தில் குடியிருப்பவராக இருக்க வேண்டும். அவ்வூரில் சொந்தக்காரர்கள் யாரவது இருக்கிறார்களா என்று பார்த்து அவர்கள் வீட்டு ரேசன் கார்டில் பெயரை சேர்க்க வேண்டிவரும். இப்படி பல சித்து வேலைகளையெல்லாம் செய்தால் தான் டீச்சர் வேலை கிடைக்கும். இல்லையென்றால் ஒன்றுமில்லை. சமீபத்தில் ரத்னா தியேட்டரில் வந்த வறுமையின் நிறம் சிவப்பு சினிமாவில் படித்து முடித்து வேலைக்காக எக்சேஞ்சிலிருந்து இன்டர்வ்யூ கார்டை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்கள் படும் பாட்டை அப்படியே உள்ளது உள்ளபடியே காட்டியிருந்தார்களே. அந்த ரங்கனைப் பாருங்கள். அவ்வளவு படித்திருந்தும் தில்லியில் வேலை கிடைக்காமல் பசியோடு திரிந்தானல்லவா. குப்பைத் தொட்டியிலிருந்து யாரோ கடித்து பாதியாய் எறிந்துவிட்டுப்போன ஆப்பிளை எடுத்துச் சாப்பிட்டானல்லவா. பெரிய பெரிய டிகிரி படித்தவர்களுக்கெல்லாம் எக்சேஞ்சிலிருந்து இன்டர்வ்யூ கார்டு வருவதேயில்லை என்றாகிவிட்டபோது வெறுமெனே பத்தாவது மட்டும் பாஸானவளுக்கு, டைப் ரைட்டிங்கில் லோயர் மட்டும் பாஸானவளுக்கு அரசாங்க வேலை எங்கே கிடைக்கப் போகிறது என்றுதான் எல்லாரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனாலும் சரசுவுக்கு எம்ப்ளாய்மெண்ட் எக்சேஞ்சிலிருந்து கோர்ட்டில் வேலைக்கான இன்டர்வ்யூ கார்டு வந்த போது எல்லாருக்கும் ஆச்சர்யமாகத்தான் இருந்தது.
பத்தாங்க்ளாஸ் பாஸான கையோடு எம்ப்ளாய்மெண்டில் பதிய வேண்டும் என்று அவளை வலுக்கட்டாயமாக கொக்கிரகுளம் அழைத்து வந்தவள் அவள் சித்திதான். நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து பதிந்து கொண்டு வந்தார்கள். எவ்வளவு கூட்டம். அத்தனை பேர் கண்களிலும் பதிந்து முடித்த பத்தாவது நாளில் ஏதேனும் ஒரு வேலைக்கு இன்டர்வ்யூ கார்டு வரும் என்ற கனவு தெரிந்தது. பத்தாங்க்ளாஸுக்கு எல்லாம் வேலை கிடைக்காது. அதனால் தன்னை மேற்கொண்டு படிக்க வைப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த சரசுவுக்கு படிச்சதெல்லாம் போதுமென்று சொல்லி அவளப்பா அவளை பள்ளிக்கூடத்திலிருந்து நிறுத்தியதும் வருத்தமான வருத்தமாகிப் போய்விட்டது அவளுக்கு. வீட்டோடு அம்மாவின் சமையலுக்கு ஒத்தாசையாய் இருந்தவளுக்கு பக்கத்திலிருந்த கனி டைப் இன்ஸ்டிட்யூட்டில் சேர்ந்து அப்பா அவளை டைப் ரைட்டிங்க் படிக்கச் சொன்னது கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது. அவளப்பா அப்படிச் சொன்னதற்கும் ஒரு காரணமிருந்தது. அவர் வக்கீல் குமாஸ்தா ஒருவரிடமிருந்து கேஸ் கட்டுகளை வாங்கி வந்து அவற்றை டைப்பிங் செய்து கொடுக்கும் வேலைகளை செய்து வருவதே அதற்குக் காரணம். கனி இன்ஸ்டிட்யூட்டில் மணிக் கணக்கில் ஒரு டைப் மிஷினை வாடகைக்கெடுத்து டைப் செய்து கொடுத்து வந்தார். இவள் டைப் படித்தாளென்றால் இன்னும் கூட கொஞ்சம் கேஸ் கட்டுகள் வாங்கிவரலாம் என்றும் நினைத்திருந்தார்.
இப்படித்தான் சரசு டைப்பிங்க் படிக்க ஆரம்பித்து லோயர் முடித்திருந்தாள். அவள் லோயர் முடித்ததும் அவள் அப்பா ஒரு ரெமிங்டன் டைப் மிஷின் ஒன்றை புதிதாக வாங்கி வந்தார். எத்தனை நாளுக்குத் தான் கனிக்கு வாடகை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். குமாஸ்தாவிடம் வாங்கும் காசில் பேர்பாதியை வாடகைக்கென்றே கொடுக்க வேண்டியிருந்தது. பேசாமல் ஒரு மிஷினை வாங்கிவிடலாம். செகண்ட்-ஹேண்ட் எல்லாம் சரிப்பட்டு வராது, புது மிஷின் தான் நல்லது என்ற குமாஸ்தாவின் யோசனை ரொம்பவே சரியாய் இருந்தது. இன்ஸ்டிட்யூட்டின் பழைய மிஷின்களில் அழுத்தி அழுத்தி டைப்பிங் செய்து பழகியிருந்த சரசவுக்கு இந்த புது மிஷினில் டைப்பிங் செய்வது அப்படிப் இஷ்டமாய் இருந்தது. இனி கை விரல்களுக்கு அவ்வப்பொழுது சொடுக்கு எடுத்துக் கொள்ளத் தேவையிருக்காது. வீட்டிலிருந்து இன்ஸ்டிட்யூட்டிற்கு போகவோ பின் அங்கிருந்து திரும்பி வரவோ ஒரு நடை நடக்கத் தேவையில்லை. வீட்டிலிருந்தபடியே எல்லா வேலைகளயும் முடித்து விடலாம். அதை விட மிக முக்கியமாக, அவள் அப்பா ரெமிங்டனுடன் வாங்கி வந்த, மேல்பக்கம் கருப்பாகவும் கீழ்ப்பக்கம் சிவப்பாகவும் இருக்கும் இரட்டைக் கலர் டைப்பிங் ரிப்பன். ஒரே வரியில் இரண்டு கலர்களில் டைப்பிங் செய்ய முடிந்தது ரொம்ப சந்தோசமாக இருந்தது. மிஷினில் இருந்த ஒரு விசையை அழுத்த கீழ்ப்பக்கமிருக்கும் ரிப்பனின் சிவப்புக் கலர்ப் பகுதி உயர்ந்து மேலே வந்துவிடும். அப்போது டைப் அடித்தால் அந்தக் கலரில் எழுத்துக்கள் தாளில் அச்சாகும். மீண்டும் அதே விசையை அழுத்த, கருப்பு கலர் ரிப்பன் பழையபடி வந்து விடும். பல கேஸ்களில் மிக முக்கியமான வழக்கு எண் குறிப்புகளை அவளப்பா சொல்லிக் கொடுத்த மாதிரி சிவப்புக் கலரில் அடித்துக் கொடுத்தாள். ஆனால் அம்மாதான் அடிக்கடி சரசுவை ஏதாவது ஒரு வேலை வாங்கிக் கொண்டேயிருந்தாள். அதனால் அவளால் நீண்ட நேரம் அந்த ரெமிங்டனுடன் தொடர்ச்சியாய் நேரம் செலவளிக்க முடியவில்லை.
சரசு தன் அம்மாவிற்கு செய்ய வேண்டிய வேலைகளையெல்லாம் சீக்கிரமாக முடித்துக் கொடுத்து விட்டு கைகளை தன்னுடைய தாவணியில் சுத்தமாகத் துடைத்து விட்டு கேஸ் கட்டை எடுத்துக்கொண்டு டைப் அடிக்க ஆரம்பித்தாள் என்றால் அந்த ரூமிலிருந்து ஒரே சீரான சட்சட்சடசட் என்ற சத்தம் எழ ஆரம்பிக்கும். அந்தச் சத்தத்தில் ஒரு வித இசையின் கோர்வையிருக்கும். அந்த அறையில் அவளுடைய அப்பா அந்த ரெமிங்டனை வாங்கி வருவதற்கு முன்னால் அடுத்த வீட்டிலிருந்து தையல் மிஷின் ஓடும் சத்தம் மட்டுந்தான் கேட்கும். அது ராஜி துணிகள் தைக்கும் சத்தம். அவளும் எப்போதும் தன் தையல் மிஷினோடு தான் இருப்பாள். தெருவிலுள்ள பெண்கள் யாராவது அவளிடம் புதிதாக ஜம்பர் தைத்துக் கொள்ளவோ அல்லது பழைய ஜம்பரை சரி செய்து கொள்ளவோ வந்த வண்ணம் இருப்பார்கள். இல்லையெனில் சிறுசிறு பெண் பிள்ளைகளின் கவுன்களைத் தைத்துக் கொண்டிருப்பாள் ராஜி. அதனால் ராஜிக்கும் அவள் தையல் மிஷினுக்கும் எப்பவுமே ஓய்விருந்ததில்லை.
ஆரம்பத்தில் சரசுவுக்கும் ராஜியைப் போல தையல் படிக்க வேண்டுமென்றுதான் ஆசையிருந்தது. படித்தால் மட்டும் போதுமா. தைத்துப் பார்க்கவோ கை பழகவோ தையல் மிஷின் ஒன்று வேண்டாமா. அப்பா அதையெல்லாம் வாங்கித் தர மாட்டார் என்று அம்மா அவளின் ஆசைக்கு அணை போட்டுத் தடுத்து விட்டாள். சரசுவுக்கும் அம்மா சொல்வது சரியாகவே பட்டது. இருந்தாலும் ராஜியின் தையல் மிஷின் ஓடும் சத்தத்தைக் கேட்கும் போதெல்லாம் மனசுக்குள் தையல் படிக்கும் ஆசை குதியாட்டம் போடும். எப்படியாவது என்றாவது ஒரு நாள் நானும் தையல் படிப்பேன் என்று நினத்துக் கொள்வாள். அப்பா இந்த ரெமிங்க்டனை வாங்கி வந்த பின்னர் தையல் மீதான அந்த ஆசை கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைந்து வருவதையும் சரசு கவனிக்கத் தவறவில்லை. இப்போது தான் அவளுக்கென்று தனியாக ஒரு மிஷினிருக்கிறதே.. அதனருகில் இருந்து டைப் செய்ய ஒரு நாளில் வெறும் இருபத்தி நாலு மணி நேரம் மட்டுந்தானே இருக்கிறது. இதில் எங்கிருந்து தையல் படிக்க.. தைக்க...
எப்படி ராஜிக்கு சதா தைத்துக் கொண்டிருப்பதற்கு ஏதாவது துணிகள் கிடைத்துக் கொண்டே இருந்ததோ அது மாதிரி சரசுவுக்கு ஏதாவது ஒரு கேஸ் கட்டு எந்நாளும் டைப்படிக்கக் காத்துக் கொண்டே இருந்தது. அம்மாவுடனான சமையல் மற்றும் அடுப்படி வேலைகளை முடித்துக் கொண்டு காலை பதினோரு மணிக்கெல்லாம் ரெமிங்க்டனில் உட்கார்ந்தாள் என்றால் பகல் இரண்டுமணி வரை அடித்துக் கொண்டிருப்பாள். அதுதான் ராஜியும் தைக்கும் நேரம். என்ன இருவரும் ஆரம்பிப்பதும் முடிப்பதும் ஒரு அரை மணி நேரம் கால் மணி நேரம் முன்னர் பின்னர் இருக்கும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கேஸ் கட்டு. பாதிக்கு மேல் சிவில் வழக்குகளான சொத்துத் தகராறுகளாய் இருக்கும். அப்பாவின் நிலத்தைப் பங்கிட்டுக் கொள்ள அடித்துக் கொள்ளும் அண்ணன் தம்பிகளின் வழக்குகள். அல்லது ஒருவன் வீட்டு நிலத்தில் அடுத்த வீட்டுக்காரன் சுவரெழுப்பிக் கொண்ட வழக்கு என்று. இந்த வழக்குகளையெல்லாம் டைப்படிக்கும் போது சரசுவுக்கு ஆச்சர்யமாக இருக்கும். ஒரே வீட்டில் உடன் பிறந்த அண்ணன் தம்பிகள் தப்படி நிலத்திற்காக கோர்ட் கேஸ் என்றெல்லாம் அடித்துக் கொள்வார்களா என்ன. ஆனால் ஒரு வழக்கு ரொம்ப வித்தியாசமாக இருந்தது.
பொன்னையா என்பவர் தன்னுடைய எட்டு ஏக்கர் நிலத்திலிருந்து ஒரு நாலு ஏக்கர் பாகத்தை மாணிக்கம் என்பவருக்கு ஒரு குறிப்பிட்ட தேதியில் விற்றிருக்கிறார். பாதி நிலத்தை வாங்கிய மாணிக்கம் தன் நிலத்தின் மேடு பள்ளங்களைச் சரி செய்ய மண் கொணர்ந்து கொட்டியிருக்கிறார். மனுஷன் தன்னோட நாலு ஏக்கரை மட்டுந்தானே சமன் படுத்தியிருக்கனும். ஆனா அவரோ மொத்த எட்டு ஏக்கரையும் சமன்படுத்த ஆரம்பிச்சிருக்கார். அடடா.. அதைப் பாத்த பொன்னையாவுக்கு நா வித்த நாலு ஏக்கரை மட்டும் சொந்தங் கொண்டாடாமல் எட்டு ஏக்கரையும் மொத்தமா அமுக்கப் பாக்குறியான்னு கோபம் வந்துவிட, தன்னோட மொத்த எட்டு ஏக்கரையும் முன் தேதியிட்டு ஆன்டனி என்னும் மூன்றாம் நபருக்கு பொன்னையா விற்றுவிட்டார். இப்போது ஆண்டனிக்கும் மாணிக்கத்திற்கும் வழக்கு. ஆண்டனி மொத்த எட்டு ஏக்கரும் என்னுடையது என்று சொல்ல.. இல்லையில்லை அதில் நாலு ஏக்கர் என்னுடையதென்று மாணிக்கம் சொல்ல.. இடத்தை இரண்டு பேருக்கு விற்ற பொன்னாயாவும் வழக்கில் சேர்க்கப் பட்டிருந்தார். அடப் பாவிகளா என்னென்ன தில்லு முல்லுவெல்லாம் செய்கிறார்கள் இந்த மனுஷன்கள்.
இப்படி ரெமிங்டன் மிஷினோடும், அப்பா கொண்டுவந்து கொடுத்த கேஸ் கட்டுகளோடும் சர்வ சதா காலம் இருந்த சரசுவுக்கு கோர்ட்டில் ரீடர் கம் காப்பியர் வேலைக்கு இண்டர்வ்யூ வந்ததும் அடடா வேலையும் கோர்ட் கேஸ் சம்பந்தப்பட்டது தானா என்று ஒருவித சலிப்பு வரவே செய்தது. ஆனாலும் அதுவே அந்த வேலைக்கான தேர்வில் அவளால் சுலபமாக தேர்வாகவும் முடிந்தது. நேர்முகத் தேர்வில் முதலில் ஒரு கேஸ் கட்டைக் கையில் கொடுத்து அவளை வாசிக்கச் சொன்னார்கள். எத்தனை முறை எத்தனை கேஸ் கட்டுகள் டைப் செய்திருப்பாள். அதிலிருந்த வக்கீல் மொழி அல்லது சட்ட மொழி அவளுக்கு இலகுவாக வந்தது. அவள் வாசிக்கும் நேர்த்தியைப் பார்த்த ஜட்ஜ் ஒருத்தர் சட்டென்று அவளை நிமிர்ந்து பார்த்தார். அவர் அப்படி ஆச்சர்யமாக பார்ப்பதை கவனித்த சரசுவுக்கு ஜட்ஜ் முன்னால் வாசிக்கிறோம் என்று அதற்கு முன்பு உண்டாயிருந்த பயம் சட்டென விலகி விட, சரளமாக வாசிக்கத் துவங்கினாள். அவள் வாசித்து முடித்ததும் அடுத்த அறையில் காத்திருக்கச் சொன்னார்கள். அவள் காத்திருந்தாள். பின்னர் சிறிது நேரம் கழித்து இன்னொரு அறைக்கு அழைத்துச் சென்று அவள் கையில் இன்னொரு கேஸ் கட்டைக் கொடுத்து அதை அப்படியே இன்னொரு வெள்ளைத் தாளில் எழுதச் சொன்னார்கள். குண்டு குண்டான தன் கையெழுத்தில் அழகாக எழுதிக் கொடுத்து விட்டு வந்தாள். அதன் பின்னர் இரண்டு மணி நேரம் காத்திருக்கச் சொல்லி அவளுக்கு அந்த வேலை கிடைத்து விட்டதாக அன்றே சொல்லிவிட்டார்கள். வீட்டிற்கு எக்சேஞ்சிலிருந்து ஆர்டர் வரும் என்று சொல்லியும் அனுப்பி விட்டார்கள்.
இண்டர்வ்யூ நடந்து ஒரு மாதத்திற்குள்ளாக அவர்கள் சொன்ன மாதிரியே வேலைக்கான ஆர்டரையும் அனுப்பிவிட்டார்கள். மெடிக்கல் ஃபிட்னெஸ் சர்டிஃபிகேட் எடுத்துக்கொண்டு இன்னும் பதினைந்து நாட்களுக்குள் வந்து வேலையில் சேரும்படி ஆர்டரில் எழுதியிருந்தார்கள். அப்பாவின் நண்பரான வக்கீல் குமாஸ்தா தனக்கு ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் உள்ள டாக்டரைத் தெரியும் என்றும், அவரிடம் சென்றால் சர்டிஃபிகேட் வாங்கிவிடலாம் என்றும் கூற அப்பாவும் சரசுவும் குமாஸ்தாவுடன் சென்று வாங்கி வந்தார்கள். அம்மா ஒரு நல்ல நாள் பார்த்துச் சொன்னாள். அந்த நல்லநாளில் அப்பவுடன் சென்ற சரசு வேலையில் சேர்ந்தாள்.
இனி தன்னால் நாளெல்லாம் டைப்படிக்க முடியாது என்ற நினைப்பில் சரசுவின் மனது கனத்துக் கிடந்தது. இனி அந்த ரெமிங்க்டன் இருக்கும் அறையில் பகலெல்லாம் ராஜியின் தையல் மிஷினின் சத்தம் மட்டும் தனியாய் ஒலித்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்.