கொலை நடந்த வீடு.
சிறுகதை

முருகேசனுக்கு இப்படிக் கோர்ட் வாசலில் காத்திருப்பது பெருத்த அவமானத்தைக் கொடுத்தது. பசி வேறு காதை அடைத்துக் கொண்டு வந்தது. ஊருக்கெல்லாம் சமைத்துப் போட்ட தனக்கு இப்படி பசியோடு நிற்க வேண்டியிருக்குமென்று தலையில் எழுதியிருக்குமென அவர் ஒருநாள் கூட நினைத்துப் பார்த்ததில்லை. அவரை கோர்ட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்த அவரது மகன் தினேஷை வேறு காணோம். இதோ வருகிறேன் என்று சொல்லிவிட்டுப் போனவன்தான். அவன் வந்தாலாவது தன்னை எப்போது கூப்பிடுவார்கள் என்று வக்கீலிடம் கேட்கச் சொல்லலாம். இந்நேரம் பார்த்து எங்கு போய்த் தொலைந்தானோ தெரியவில்லை. ஒரு டீயாவது சாப்பிடப் போகலாமென்றால் அந்நேரம் பார்த்துதான் அந்த வக்கீல் கூப்பிடுவான். கூப்பிட்டவுடன் போகவில்லையென்றால் அதற்கு வேறு காட்டுக் கத்தலாய் கத்துவான். இந்த வக்கீல் நம் வயதிற்காவது ஓரளவு மரியாதை தரலாம். சின்ன வயதிலேயே கவர்மெண்ட் வக்கீலாகிவிட்டவனிடம் மரியாதையையெல்லாம் எதிர்பார்ப்பது பெரிய முட்டாள்த்தனம். அவனைச் சொல்லியும் குத்தங்கிடையாது. இப்படி நாள் முழுவதும் போலீஸ்காரன் கூட, குத்தவாளிங்க கூடவே பொழப்பு நடத்துற ஒருத்தனுக்கு எங்கிருந்து பொறுமையிருக்கும். ஆனாலும் எந்நிலமை இப்படி ஆயிருக்கக் கூடாது என்று பல மாதிரியான சிந்தனைகளுடன் கிரிமினல் கோர்ட் வாசலில் இருந்த வேப்ப மரத்தடியில் காத்திருந்தார் அவர்.
யாராவது தெரிந்தவர்கள் தென்படுகிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தார். ஒரு முகங்கூட அவருக்குத் தெரிந்ததாய் இல்லை. ஒரு காலத்தில் வக்கீல் குமாஸ்தாவாய் இருந்த சுப்பையா பிள்ளையின் பேத்தி ஒருத்தி இங்கே தான் கிளார்க்காய் வேலை பார்க்கிறாளென அவர் மகன் போன முறை சொன்னது நினைவுக்கு வந்தது. அவள் எங்கேனும் தென்படுகிறாளா என்று பார்த்தார். அவளையும் அவர் வெகு காலத்திற்கு முன்னர் தான் பார்த்திருக்கிறார். அப்போது பார்த்த முகத்தை இப்போது குறுக்கு நெடுக்காய் நடக்கும் ஒவ்வொரு பெண்ணின் முகத்திலும் தேடினார். பத்துப் பன்னிரண்டு வருஷத்துக்கு முன்னால பாத்த முகத்தை இப்போ தேட முடியுமா தேடினாலும் அடையாளந்தான் தெரியுமா என்று தனக்குத்தானேச் சலித்துக் கொண்டார். ஒரு வேளை அவளுக்குத் தன்னை அடையாளம் தெரியக் கூடும் என்ற நினைப்பு கொஞ்சம் நம்பிக்கையைக் கொடுக்கவே மீண்டும் தேடலானார். என்ன ஆனாலுஞ்சரி. இதுக்கு மேல் பசி பொறுக்க முடியாது. டீக்கடைக்குப் போய் ஒரு வடையைச் சாப்பிட்டு காப்பியும் குடிச்சாத்தான் நிக்கக் கூட முடியும் என்ற முடிவுக்கு வந்தவராய் கடையை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
டீக்கடையில் அதிகம் கூட்டமில்லாமலும் அதே சமயம் காலியாக இல்லாமலும் இருந்தது. அங்கே இருந்த கொஞ்சப்பேர் முகத்திலும் ஏதோ ஒருவித சோகம் அப்பியிருந்ததாகவே முருகேசனுக்குத் தோன்றியது. எத்தனை பேர் என்னைய மாதிரி தப்பே செய்யாம அல்லாடுறாங்களோன்னு ஒரு கவலை வந்தது. காலந்தான் ரொம்ப கெட்டுப் போச்சு. இல்லேன்னா சும்மாக்கிடந்த நம்மள இப்படி கோர்ட்டு கேஸூன்னு அலைய விடுமா. இது வரைக்கும் நான் யார் வம்புக்காவது போயிருக்கேனா.. இல்ல யாராச்சும் வம்பிழுத்தா திருப்பிச் சண்டைக்குத்தான் போயிருப்பேனா. எல்லாம் கிரகச்சாரம். அதுதான் இப்படிப் பாடாய் படுத்துது. ஆனா இந்த வக்கீல்களெல்லாம் சந்தோசமாத்தான் திரியிராங்க. அவனுகளுக்கென்ன. ஊரு ரெண்டுபட்டா கூத்தாடிகளுக்குக் கொண்டாட்டங்கற மாதிரி எவனாவது இரண்டு பேரு சண்டை போட்டுக்கிட்டாய்ங்கன்னா கூட நடுவுல புகுந்து பஞ்சாயத்துக்குப் பண்ணுறதுக்கு வந்துடுறாங்க. பூனைகளுக்கு அப்பத்தை பங்கு வைக்க வந்த குரங்கு மாதிரி. சும்மாவா சொன்னான் சாட்சிக்காரன் கால்ல விழுறதை விட சண்டைக்காரன் கால்லேயே விழுந்துட்டு போயிரலாம்ன்னு. வக்கீல் வச்சுகிட்டவன் எவனும் சந்தோசமா இருந்ததா பாத்ததேயில்லை. ஆனா எல்லா வக்கீலும் சந்தோசமாத்தான் இருக்கான்.
டீக்கடையில் வடையே இல்லை. ஒல்லியான தட்டையான சின்ன சைஸில் எண்ணெய் அதிகம் வழிகிற மாதிரி சமோசா மட்டுந்தான் இருந்தது. அதைப் பார்த்த முருகேசனுக்கு சாப்பிட வேண்டுமென்றே தோன்றவில்லை. இருந்தாலும் வயிற்றில் இருந்த பசி எதையாவது தின்னுத் தொலை என்று சொல்லவே ஒரு சமோசாவை எடுத்துக் கடித்தார். டீக்கடையில் மாஸ்டராகவும் மொதலாளியாகவும் நின்று பாய்லரிலிருந்து தண்ணீரை டீப்பை முலமாக க்ளாஸில் ஊற்றியவன் இவர் சமோசாவை எடுத்ததை பாரத்தான். சின்னதாய் ஒரு சிரிப்பை சிரித்து வைத்தான். இப்படித்தான் இருக்க வேண்டும் கடை நடத்துபவன். கைச்சோலியில் கவனமெல்லாமிருந்தாலும் கண்கள் கடையின் பொருட்களின் மீதும் புத்தி யார் யார் என்னென்ன பொருட்களை எடுக்கிறார்கள் என்று கணக்கு வைத்துக் கொண்டும் இருக்க வேண்டும். அப்போதுதான் எல்லாரிடமிருந்தும் சரியாக காசை வாங்கி கல்லாவில் போட முடியும். அப்படி கண் கொத்திப் பாம்பாக கவனித்துக் கொண்டிருந்தாலுங்கூட ஒன்றிரண்டு பேர் எடுத்திருந்த பிஸ்கட்டையோ சமோசாவையோ கவனிக்காமல் போய்விடும். அப்போது எடுத்துத் தின்றவனாய்ப் பார்த்து காசு கொடுத்தால் தான் உண்டு. இல்லையென்றால் அந்த காசு அம்போதான். கோர்ட் காம்பவுண்டில் சுத்துறவன்ல்லாம் திருட்டு பசங்க. போலீஸ் காரன் திருடனைவிட பெரிய திருடன். வக்கீல் அந்தப் போலீஸுக்கும் மேலே. இவனுங்களா தான் தின்னதுக்கு தானே காசைக் கொடுப்பானுங்க. வீட்டின் முன்னறையில் சின்னதாய் சாப்பாடு ஹோட்டல் நடத்தியதில் எனக்குக் கிடைக்காத பாடங்களா. என்று எண்ணியவாறே சமோசாவை சாப்பிட்டார் முருகேசன். அதற்குள் அவரைத்தேடி டீக்கடைக்கே வந்து விட்டான் தினேஷ்.
நீயும் டீக்குடிக்கிறியா என்று கேட்டார். இல்ல இப்பத்தான் கொஞ்ச நேரம் முன்னாடி டீ குடிச்சுட்டு, பக்கத்தில கஸ்டமர் ஒருத்தரை பாத்துட்டு வர்றேன் என்றான். சொல்லும்போதே அவன் இப்போதுதான் சிக்ரெட் பிடித்துவிட்டு வந்திருக்கிறானென்று அவரால் கண்டுபிடுக்கும் அளவிற்கு அவனிடமிருந்து நாற்றம் அடித்தது. சின்னப் பையனாய் இருந்தால் திட்டலாம். அவனோ தோளுக்கு மேல் வளர்ந்து விட்டான். இந்த கேஸ் ஆரம்பித்த பின்னால் அவன் ஒருவன் சம்பாத்தியத்தில் தான் குடும்பமே ஓட்ட வேண்டியிருப்பதால் அவனை ஒன்றும் சொல்ல முடியாமல் தவிர்த்தார். அவன் எல்.ஐ.சி ஏஜென்ட் ஒருவரிடம் சம்பளத்திற்கு வேலை பார்க்கிறான் ஏஜென்ட்டின் கஸ்டமர்கள் எல்லாரும் வியாபாரிகள். கடை நடத்துபவர்கள். பெரிய பெரிய தொகைக்கு இன்ஸூரன்ஸ் செய்திருப்பவர்கள். அவர்களிடம் தினப்படி வசூல் செய்து அதை மாதாந்திரமாய் ஏஜென்ட் எல்.ஐ.சிக்கு செலுத்துவார். இவனுக்கு வேலை தினசரி கலெக்ஷனுக்குப் போவது. தன்னோடு இருந்து ஹோட்டலைப் பாத்துக்கோடான்னு அவரும் அவனுக்குப் பல தடவை சொல்லிப் பார்த்தார். அவனோ அதைக் கொஞ்சம் கூட கேட்கவேயில்லை. அதுங்கூட நல்லதாய்த்தான் போய்விட்டது. இல்லையென்றால் இருக்கிற இந்த சின்ன வேலைக்கும் உலை வைத்திருக்க வேண்டியிருந்திருக்கும். இன்றைக்கு அவனையும் கேஸில் ஒரு சாட்சியாய் சேர்த்துத் தொலைத்திருப்பார்கள். இப்போது அவனுக்கு தன் அப்பா படும் பாட்டைப் பார்த்து கவலைப் படுதல் மட்டுந்தான் கவலையாய் இருந்தது. அவனும் இவரைப் போலவே கோர்ட் வாசலில் வேப்பமர அடியில் ஒவ்வொரு வாய்தாவன்றும் காத்திருக்க வேண்டி இருந்திருக்கும்.
அந்த நாள் காலை நிகழ்வுகளை இன்று நினைத்தாலும் முருகேசனுக்கு உடம்பு ஒரு முறை உதறல் கண்டுவிடத்தான் செய்கிறது. எல்லா நாட்களையும் போலத்தான் அன்றும் அவரது வீடுடன் கூடிய கடையில் கூட்டம் இருந்தது. பதினைந்து பேர் ஒரு சேர அமர்ந்து சாப்பிட வசதி இருந்த கடையில் ஏழெட்டு பேர் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அதில் பழனியும் இருந்தான். அவன் ஏண்டா வந்திருக்கிறான் என்றுதான் நினைத்தார் முருகேசன். சல்லிப்பயல். இவனுக்கு இன்னிக்கு இங்கனதான் விடிஞ்சுதா. வேற இடமே கிடைக்கலையா என்று அவனைப் பார்த்தவுடன் உள்ளுக்குள் அப்படி ஒரு கோபம் வந்துவிட்டது அவருக்குள். கோபத்தை விட பயம்தான் அதிகமாய் வந்தது. இருந்தாலும் வியாபாரம் நடக்கும் இடமாகப் போய்விட்டதால் தன் கோபத்தையும் பயத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டு அவனுக்கும் இலையைப் போட்டார். சீக்கிரம் அவனுக்கு வேண்டியதை போட்டு அவனை அனுப்பி விட வேண்டியது தான். எப்போதும் பன்னி விழுங்குவது மாதிரி சாப்பிடுபவன் இன்றென்னவோ ஆற அமர உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான். எமகாதகப் பயல். அப்போது அவர் மனைவி கோகிலம் வீட்டுக்குள்ளிருந்து குரல் கொடுக்கவே உள்ளே போனார். இவர் உள்ளே போன இரண்டாவது நிமிடத்தில் பழனியை அவனுக்கு எதிர் வரிசையில் உட்கார்ந்திருந்த இரண்டு இளந்தாரி பயல்கள் தங்கள் சட்டைக்குள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பழனியை கழுத்திலும் தோளிலும் வலது கையிலும் இடது கையிலும் என ஐந்தாறு வெட்டுகள் வெட்டிவிட்டு ஓடி விட்டார்கள். பழனியின் மேல் முதல் வெட்டு விழுந்ததும் அங்கே இருந்த மற்ற அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்ததை அப்படியப்படியே போட்டது போட்டபடி போட்டுவிட்டு ஓடி விட்டார்கள். பழனியின் அலறல் கர்ண கொடூரமாய் கேட்க உள்ளேயிருந்து முருகேசன் வேக வேகமாக ஓடிவந்தவர் அவனை இரத்த வெள்ளத்தில் பார்த்தவுடன் அங்கேயே மயங்கி விழுந்துவிட்டார்.
கோகிலம் கடைக்குள் எட்டிப் பார்த்தவள் நிமிடத்திற்குள் சூழ்நிலையைப் புரிந்து கொண்டாள். பழனியின் அலறல் கேட்டு கடைப்பக்கம் வர முயன்ற தன் மகள் சாந்தியை அங்கேயே நிறுத்தி தரதரவென்று இழுத்துக் கொண்டு, பின்பக்க வாசல் வழியே வெளியே ஓடி பக்கத்தில் இரண்டு கடை தள்ளி பலசரக்குக் கடை வைத்திருந்த முருகேசனின் தம்பி ஆறுமுகத்திடம் விசயத்தைச் சொன்னாள். ஆறுமுகம் அவசர அவசரமாய் தன் கடையை இழுத்து மூடினார். சாந்தியையும் கோகிலத்தையும் மூன்றாம் தெருவில் உள்ள தன் வீட்டிற்கு போய்விடும் படி கூறி அனுப்பி வைத்தார். அதற்குள் பழனியின் அலறல் சத்ததில் கடை முன் நல்ல கூட்டம் கூடிவிட்டது. தினேஷ் அன்று அதிகாலையிலேயே கலெக்ஷ்னுக்கு சென்றுவிட்டிருந்தான். கூட்டத்தை மெல்ல விலக்கி கடைக்குள்ளே சென்ற ஆறுமுகம் நேராக தன் அண்ணன் முருகேசனை தண்ணீர் தெளித்து எழுப்பினார். எழுந்த முருகேசனோ ஓவென்று அழ ஆரம்பித்து விட்டார். அய்யய்யோ இப்படி ஆகிப்போச்சே.... ஏந்தலையில இப்படி விடிஞ்சிருச்சே.. இப்பத்தானே இவனுக்கு இட்லிய வச்சிட்டு உள்ள போனேன். அதுக்குள்ள இப்படி வெட்டிப் போட்டுட்டானே... இந்த கொலைகாரப் பாவிக்கு சாகுறதுக்கு வேற இடங்கிடைக்கலையா.. ஏங்கடையில வச்சு வெட்டிப் போட்டானே அந்தப் பாழாப்போனவன். அவனும் இங்கன தானே சாப்பிட்டுட்டு இருந்தான். அவம் யார்ன்னே தெரியலயே. ஏம் பொழப்பு போச்சே. கோகிலத்தை எங்கப்பா. பாத்தா தாங்க மாட்டாளே. என்னாலயே தாங்க முடியலையெ. ஏம் மகள எங்கப்பா. சாந்தியை எங்க. அவ பாத்தாளா. அய்யய்யோ புள்ள தாச்சி புள்ளயாச்சேப்பா. எங்கப்பா அவள. அய்யய்யோ இப்படி ஆகிப் போச்சே. நான் என்ன பண்ணுவேன் என்று புலம்பியபடியே கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்தார்.
ஆறுமுகம் அவரை சமாதானப் படுத்தினார். அண்ணே. அண்ணியையும் சாந்தியையும் என்னோட வீட்டுக்கு அனுப்பிட்டேன். இப்ப நீங்கதான் தைரியமா இருக்கனும். நீங்க இப்படி அழுதுகிட்டே இருந்தீங்கன்னா அடுத்தடுத்து நடக்க வேண்டியதை பாக்க முடியாம போயிடும். ஆம்புலன்சுக்கும் போலீசுக்கும் போன் பண்றேன். அவங்க வரட்டும். முதல்ல பழனிய தூக்கிட்டுப் போகட்டும். அப்புறம் பாக்கலாம். என்று சொல்லி முருகேசனை கடைக்கு உள்ளேயிருந்த ஒரு அறையில் உக்கார வைத்தார். போலீஸ்காரங்க வர்ற வரைக்கும் வெளியே வராதீங்க. உங்க மொபைலைக் கொடுங்க.. என்று சொல்லி, கடைக்கும் உள் அறைக்கும் நடுவில் இருந்த கதவை உள்பக்கமாய்த் தாழிட்டு அடைத்தார். பின் வாசலுக்கு வந்தவர் பின் வாசல் கதவையும் தாழிட்டு அடைத்தார். பின் முருகேசன் மொபைலிலிருந்து நூறுக்கு போன் செய்தார். போலீஸ் கண்ட்ரோல் ரூமிற்கு தகவல் கொடுத்ததும் உயிர் இருக்குற மாதிரிதான் இருக்கு ஆப்புலன்ஸைக் கூப்பிடவா என்று கேட்டார். கூப்பிடுங்கள் என்று சொன்னதும் நூத்தியெட்டுக்கும் போன் செய்து விபரங்கள் சொன்னார்.
போலீஸும் ஆம்புலன்ஸும் வரும் வரை கூட்டத்திற்குள் நின்றிருந்த முருகேசன் கடைக்கு எதிரில் அரிசிக் கடை வைத்திருந்த வைரவமூர்த்தியிடம் பேச்சுக் கொடுத்தார். வெட்டுனவன் யார்ன்னு தெரியுமா மூர்த்தீ. என்று கேட்டார். அவரோ தெரியலையே ஆறுமுகம். இங்கன கூடி உள்ள பயலுக மாதிரி தெரியலையே. இரண்டு பயலுக. வடக்குப் பக்கமா ஓடினாப்புல இருந்துச்சு. காலங்காத்தாப்புல இப்படி ஆயிருச்சே. பழனிப் பயலத்தானே வெட்டிப்புட்டானுவ. எங்கெல்லாம் வம்பு வளத்து வச்சுருந்தானோ தெரியலையே. இப்பதான் ஒருத்தன் போன்ல யாருக்கோ தகவல் கொடுத்துட்டுருந்தான். பழனியோட அம்மைக்குத்தான் இருக்கும்ன்னு நினைக்கேன். அவ வந்தான்னா பெருக்கூப்பாடால்லா இருக்கும். பழனிப்பயலோட சொந்தக் காரனெல்லாம் கூட்டிட்டு வந்தா இன்னும் களேபரமா ஆயிடுமேப்பா. முருகேசண்ணந்தான் பாவம். யார் வம்புக்கும் போகாத மனுஷனுக்கு இது போதாத காலந்தான். இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே ஆம்புலன்ஸ் வந்து விட்டது. எல்லாரும் ஆம்புலன்சிலிருந்து இறங்கிய நர்ஸுடன் நடந்தார்கள். அந்த நர்ஸ் நேராக பழனியின் பல்ஸ் பார்த்து “முடிஞ்சிருச்சுங்க. இனிமே போலீஸ் வந்தப்புறந்தான் தூக்க முடியும்” ன்னு சொல்லிவிட்டு ஆம்புலன்சுக்கு உள்ளே போய் உட்கார்ந்து கொண்டார்.
கொஞ்ச நேரத்தில் பழனியின் அம்மை வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டபடியே வந்து சேர்ந்தாள். அவளின் கூப்பாட்டு அலறலில் ஊருக்கே அந்தப் பொல்லாத பழனி மீது இரக்கம் வந்து விட்டது. நேரே பழனியின் உடலை இரத்தத்திற்கு நடுவிலும் போய் எடுத்துக் கொண்டு மடியில் போட்டுக் கொண்டழுதாள். ஏம்மவன இப்படி கொன்னு போட்டுட்டீயளேன்னு அழுதாள். ஏலே பழனீ ஏலே பழனீன்னு திரும்பத் திரும்பக் கூப்பிட்டுக் கொண்டேயிருந்தாள். ஆம்புலன்ஸ் நர்ஸ்தான் வந்து அம்மா பாடியைத் தொடக் கூடாது. போலீஸ் வரட்டும். யாருய்யா. இந்தம்மாவுக்குச் சொந்தக்காரங்க. கொஞ்சம் தள்ளி இருக்கச் சொல்லுங்கப்பா. கைரேகை எல்லாம் அழிஞ்சுரும். அப்புறம் செஞ்சது யாருன்னு தெரியாமப் போயிரும். என்று சொல்ல பழனியின் சொந்தக்காரனான ராசப்பன் மெதுவாய் பழனியின் அம்மாவிடம் வந்து யே. அத்த. எந்திரிச்சு வா. எவஞ்செஞ்சான்னு மட்டும் தெரியட்டும். அவனையும் இப்படியே இரத்தத்தில் மொதக்க விடுறேன். நீ வா அத்தே. என்று அவளை எழுப்பிக் கூட்டிக்கொண்டு வாசலுக்கு வந்தான்.
போலீஸிலிருந்து, ஃபாரன்ஸிக்கிலிருந்து, எல்லாரும் வந்து சாக்பீஸால் படம் வரைந்து போட்டோக்கள் எடுத்து பழனியின் பாடியை எடுத்துக் கொண்டு போவதிற்குள் மதியமாயிற்று. முருகேசனையும் ஸ்டேசனுக்கு அழைத்துக் கொண்டு வந்து விட்டார்கள். முருகேசனுடன் அவர் தம்பி ஆறுமுகமும் பக்கத்துக் கடை வைரவ மூர்த்தியும் வந்தார்கள். தினேஷ் தன் முதலாளிக்குச் சொல்லி அவருக்குத் தெரிந்த வக்கீலுடன் வந்திருந்தான். அந்த வக்கீல் தான் ஸ்டேசனில் நீண்ட நேரம் கூடவே இருந்தார். போலீஸிடமும் இவர்களிடமும் மாறி மாறி பேசினார். எல்லாம் விசாரித்துச் சொன்னார்.
திட்டம் போட்டு நடந்த கொலை. மூர்க்கத்தனமா வெட்டியிருகாங்க. எங்கேயோ எப்பவோ யார்கிட்டயோ பழனி பண்ணியிருந்த பிரச்சினைக்கு தான் நடந்துருக்கனும்ன்னு யோசிக்குது போலீஸ். ஏற்கனவே அவன் ரிக்கார்டெல்லாம் தூசி தட்டி எடுத்துட்டாங்க. வேற ஸ்டேசன்லயோ அல்லது பக்கத்துல ஏதாவது கோர்ட்லயோ சீக்கிரமே யாராவது இதுக்காக சரணடைவாங்கன்னு எதிர்பார்க்குறாங்க. முருகேசன். சாப்பிட்டீங்களா. இல்லையா. தம்பி அப்பாவுக்கு சாப்பிட ஏதாச்சும் வாங்கிக் கொடு. எப்படியும் ராத்திரி ரொம்ப நேரம் ஆயிடுங்க வீட்டுக்குப் போக.
என்னது கடையா.. அதெல்லாம் இப்போதைக்கு திறக்க விட மாட்டாங்க. எதுக்கு நீங்க அங்கிட்டுப் போறீங்க. இவங்க கஸ்டடியிலிருந்து கடை திரும்ப வர்றதுக்கு எப்படியும் மூணு நாலு வாரத்துக்கு மேல ஆயிடும். வீடும் சேந்தாப்பல இருக்குதா.. அடடா.. இன்ஸ்பெக்டர்கிட்ட நாம்பேசிப் பாக்குறேன். யாராவது கன்ஸ்டபிள அனுப்பச் சொல்லி அவரு கூட இருக்குறப்போ வீட்டுலேர்ந்து உங்களுக்கு அவசரத்துக்கு வேண்டிய சாமான்கள எடுத்துட்டு உங்க தம்பி வீட்டுக்குப் போயிருங்க. வேற வழியில்லைங்க.. உங்க கடைக்குள்ள நடந்திருக்க வேண்டாம். நடந்திருச்சு. இப்ப உங்களை முக்கிய சாட்சியா போடுவாங்க. அவங்களுக்கும் வேற வழியில்லை. ஏன்னா செத்துப் போனவனையும் வெட்டுனவனையும் கடைசியா பாத்தது நீங்க தான். கேஸ் முடியும் மட்டும் நீங்க கோர்ட்டுக்கு வந்து தான் ஆகனும். விட மாட்டாங்க. கவலைப் படாதீங்க. காசெல்லாம் கேக்க மாட்டாங்க. நான் பேசியிருக்கேன். தம்பி அப்பாவை பாத்துக்க. நான் கிளம்புறேன். எதுனா அவசரம்ன்னா போன் பண்ணு.. வக்கீல் போய்விட்டார்.
அன்று அவரங்கு வரவில்லை என்றால் என்னவாயிருக்குமென்றுத் தெரியவில்லை. ஒருவேளை போலீஸ் தன் மேலேயே பழியைத் திருப்பி விட்டிருக்குமோ அல்லது அப்படிச் செய்யாமலிருக்க எவ்வளவு காசு செலவு செய்ய வேண்டியிருந்திருக்குமோ என்னவோ. எப்போது வீட்டுக்குப் போவோம். வீடு. இது வரைக்கும் அது முருகேசன் வீடு. இனி யாராவது அப்படி சொல்வார்களா. பழனியை வெட்டிக் கொன்ற வீடுன்னுதான் எல்லாரும் சொல்வார்கள். அதுதான் இனி அதற்கு அடையாளம். மொத்தத்தில் எவனோ செய்த பாவம் என் தலையில் விடிந்து விட்டது என்றெல்லாம் யோசித்தபடி ஸ்டேசனில் அன்று காத்திருந்தார் முருகேசன். இன்றும் வாய்தாவுக்கு கோர்ட்டில் காத்திருக்கிறார் முருகேசன்.
*****************