காயாம்பூ
சிறுகதை

சுப்பு மாமா மகளுக்கு கல்யாணம் நடக்கும் மண்டபத்தில் நுழைந்து, உள்ளே போய், நான் மாமாவைத் தேடிக் கொண்டிருக்கும் போது அங்கே ராஜியைப் பார்த்ததும் மனசுக்குள் பூப்பூவாய்ப் பூத்த அத்தனை மத்தாப்புக்களையும் வெளித் தெரியாமல் அடக்கிக் கொண்டு அவளருகே சென்று நின்ற பொழுதினில் அவள் அமர்ந்திருந்த நாற்காலியிலிருந்து எழுந்து நின்று என் கைகளை அழுந்தப் பற்றிக் கொண்டாள்.
இப்பதான் வர்றியா விஸ்வா . சாப்பிட்டியா இல்லையா..என்று தான் முதலில் கேட்டாள். சீக்கிரமா போ.. பந்தி முடிஞ்சிரப் போவுது. பொங்கலும் கேசிரியும் ஒனக்குப் புடிச்ச மாதிரியே இருக்கு..
இத்தனை வருஷங்களுக்குப் பிறகும் எனக்குப் பிடித்த பொங்கலின் கேசரியின் பக்குவங்கள் அவளுக்கு நினைவிலிருப்பது தெரிந்ததும் பொசுக்கென துக்கம் ஒரு சின்ன உருண்டையைப் போலத் தொண்டைக்குள் திரண்டு நின்றது. பொங்கலுக்காகவும் கேசரிக்காகவும் எப்படி அவள் கைகளை உதறிவிட்டு போவது. ஆடு பகை குட்டி உறவா என சொந்தங்களும் பந்தங்களும் படுத்திய பாடுகளால் ஏற்கனவே ஒரு முறை உதறியதில் உண்டான துக்கமும், அந்தத் துக்கம் கொடுத்த ஆறாத வடுக்களும் இன்னமும் மனசெங்கும் துருத்திக் கொண்டிருக்கும் நிலையில் இன்னுமொரு முறை அவள் கைகளை கட்டாயம் உதறத்தான் வேண்டுமா. இங்கேயே இப்படியே இந்தக் காலம் உறைந்து போய்விடக் கூடாதா.
எப்போதும் போல என் எண்ணவோட்டங்களைப் படித்தவளாய், “இன்னைக்கு பூரா இங்கன தான்.. போய் சாப்பிட்டுட்டு வா.. ஆற அமர பேசலாம்” என்று தோள் தொட்டு திருப்பி சாப்பிட அனுப்பி வைத்தாள்.
பகட்டில்லாமல் ஒப்பனை செய்வதிலும், செய்த ஒப்பனைக்குப் பாந்தமாய் காட்டன் சேலை அணிவதிலும் ராஜியை எப்பவும் விஞ்சவே முடியாது. இன்றைக்கும் அப்படித்தான்.. அது என்ன.. ம்.. காயாம்பூ.. காயாம்பூ நிறத்திலொரு சேலை. இந்த நிறத்துக்கு அந்த பெயரைச் சொல்லிக் கொடுத்ததே ராஜிதான். வெள்ளை வெள்ளையாய் நிறைய பூ வேலைப்பாடுகள் சேலை முழுவதிலும் நிறைந்திருந்தன. மடிப்புகளை ஒன்றொன்றாய்க் கோர்த்தெடுத்து அடுக்கி வைத்தாற்போல கஞ்சியிட்டு இஸ்திரி போட்டிருக்க, இஸ்திரி மடிப்புகளுக்கு எந்தவொரு பாதகமும் வந்துவிடாதபடிக்கு நாற்காலியில் பட்டும் படாமலும் மீண்டும் அமர்ந்தாள் ராஜி. அன்றைக்கு பார்த்த பழகிய அதே ராஜி. வயது கூடியதின் விளைவாய் கொஞ்சம் அதிகமாய் சதைப் பிடிப்பு. அதுவும் அவள் அழகை மெருகேற்றத் தான் செய்திருந்தது.
சாப்பிட்டுவிட்டு வந்த பொழுதில், பத்திலிருந்து பதினொன்னரை மணி கல்யாணச் சடங்குகள் சூடுபிடித்து நடந்து கொண்டிருக்க, ராஜி இருந்த வரிசையில் உட்கார இடமில்லாமல் பல வரிசை பின்னுக்கு தள்ளி அமர்ந்து நிகழ்வுகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். பார்வையில் படும் காட்சிகளுக்கும் மனதில் ஓடும் காட்சிகளுக்கும் துளிகூட சம்பந்தில்லாமல் நடப்பவற்றை எல்லாம் சும்மாவேண்டும் ஒரு ஒப்புக்குப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன். எண்ணமெல்லாம் நீக்கமற நிறைந்திருந்தவள் ராஜி. என்றைக்கு அவளை மறந்திருந்தேன். இன்றைக்கு மீண்டும் நினைப்பதற்கு. மற்ற எல்லா நாட்களிலும் ஒரு கனவைப்போல உடனிருக்கும் ராஜி, இன்றைக்கு நிஜமாகவே கண்ணுக்கெட்டும் தூரத்தில் உடனிருக்கிறாள் என்பது தான் இப்போதைக்கான கூடுதல் விசேசம்.
தாலி கட்டி முடிந்து, அக்னி வலம் வந்து, வந்திருந்தோர் ஆசிகளைப் பெற்று, பெண்ணும் மாப்பிள்ளையும் எழுந்து போய்விட, சட்டென அத்தனையையும் மாற்றிவிடும் காலத்தின் அந்த மாயக் கரங்கள் மணமேடைக்கும் ஒரு அசாத்திய அமைதியை, ஒரு அதீத வெறுமையை தந்திருந்தன. சிறிது நேரத்துக்கு முன்னர் தான் கூடியிருந்த அத்தனை பேரின் கவனமும் அந்த மணமேடையின் மீது குவிந்திருந்தது. இப்போதோ அதைக் கவனிக்க ஒருவருமில்லை. அக்கினி வளர்த்த குண்டத்திலிருந்து கூட சிறு புகையில்லை. சுற்றியிருந்த நான்கு தூண்களிலும் தொங்கிக் கொண்டிருந்த பூச்சரங்களில் பாதிக்கும் குறைவாய்த் தான் பூக்களிருந்தன. மீதமெல்லாம் சுற்றி நின்றிருந்தவர்களால் உருவி எடுக்கப்பட்டு, மணமக்கள் மீது அட்சதைப் பூக்களாய் தூவப்பட்டு, பின்னர் தூவியவர்களாலேயே மிதிக்கவும் பட்டு நசுங்கிக்கிடந்தன. மணமக்களின் தலையில் விழுந்து தூவியவர்களின் ஆசிகளை மணமக்களுக்குக் கொடுத்ததும் அப்பூக்களின் கடமை முடிந்துவிடுகிறது இல்லையா.
பூமியில் பூக்கும் அத்தனை பூக்களுக்கும் ஆயுள் மிகமிகக் குறைவுதான். எனக்கும் ராஜிக்கும் இடையே பூத்திருந்த அந்த அந்தரங்கப் பூ கூட அப்படியொரு அல்பாயுசில் உதிர்ந்து சருகாகி பின் காணாமலே போய்விட்டது. சொந்தங்களுக்குள் உண்டான சிறு பகையொன்று பெருந்தீயென பலப்பல நாக்குகள் வளர்த்து அப்போது தான் மலர்ந்து மணக்கத் தொடங்கியிருந்தவொரு பூவைக் கருக்கிப் போட்டுவிட்டது.
யார் யாரோ என்னிடம் வந்து என் சௌகரயங்களை, என் வேலையை, நானிருக்கும் தலைநகரத்தை, சடுதியில் மாறிவிடக் கூடிய அந்நகரத்தின் சீதோஷ்ண நிலைகளை, கட்டுக்குள் அடங்காத அந்நகரத்துப் போக்குவரத்தை, சமீபத்திய வெள்ளத்தை, அவ்வெள்ளம் தந்த பாதிப்பை, அவ்வெள்ளத்தைச் சுற்றி நடந்த அரசியலை என என்னென்னவோ விசாரித்தார்கள். அவர்களுக்கு நான் பட்டும் படாமலும் பதில் சொல்லிக் கொண்டிருந்தாலும் என் எண்ணமும் கண்களும் ராஜியை மட்டுமே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தன. அவளைச் சுற்றி சதா ஒரு கூட்டமிருந்து கொண்டே இருந்தது. அந்தக் கூட்டத்தின் நடுவிலும் கூட அவள் ஒரு சுந்தரப் பூவாகத் தெரிந்தாள். அருகே போய் பேசலாம் தான். அதை விட இப்படி தூரத்திலிருந்தே அவளை பார்ப்பது அத்தனைப் பிடித்திருந்தது. போகாமலேயே இருந்துவிட்டேன். ஒருவேளை அப்படி அவளருகில் போயிருந்தால் இப்போது அவள் சிரித்து சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதற்கு நான் இடைஞ்சலாக மாறிவிடக் கூடும் தான். நான் எப்போதும் இப்படித்தான். பொசுக்கு பொசுக்கென ஓட்டுக்குள் ஒடுங்கிக் கொள்கிற ஒரு நத்தையை மாதிரி.
நத்தை தன் முதுலில் சதா சுமந்தலையும் ஓடு அதற்கு சுகமா அல்லது சுமையா? நானறியேன். என்னைப் பொறுத்தவரை என்னுடைய துக்கத்தையெல்லாம் மறைத்து வைக்க, அவற்றை பிறரறியாமல் பாதுகாக்க இப்படி ஒதுங்கியிருத்தலைத் தான் என்னுடைய ஓடாக நான் பாவிக்கிறேன். தலைநகர வேலையும் வாசமும் கூட கிட்டத்தட்ட ஒரு நத்தையோடு தான். என் உணர்கொம்புகளுக்கு ஒருவித ஒவ்வாமையை தந்துகொண்டேயிருந்த அத்தனை சொந்தங்களையும் புறந்தள்ளி, நான் ஒளிந்து கொள்ள தேர்ந்தெடுத்த நத்தை ஓடு. எங்களையெல்லாம் விட்டு வெகு தூரம் ஓடு ஓடு என விரட்டியவர்கள் இவர்கள். ஆனால் இன்றக்கென்னவோ அவர்கள் மத்தியில் வரவேண்டும் என்று தோன்றிவிட்டது. அதற்குக் காரணம் சுப்பு மாமா தான்.
சுப்பு மாமா. அன்றைக்கு சொந்தங்களின் சண்டைச் சச்சரவுக்குள் சிக்கித் தவித்த என்னையையும் ராஜியையும் எங்களுக்கிடையே பூத்துக் கிடந்த உறவையும் பத்திரமாய் பாதுகாக்க, அவர் எடுத்துக் கொண்ட சிரமங்கள் அதிகம். அதை விட அவர் பட்ட அவமானங்கள் அதிகம். எங்கள் இரண்டு குடும்பங்களும் சதா சண்டை போட்டுக் கொண்டு முட்டி மோதிக் கொண்டிருக்கையில், தனக்கென்ன போச்சு என்று ஒதுங்கி இருக்க அவரால் முடியவில்லை. இரண்டு குடும்பத்திற்கிடையே, இங்குமங்குமாய் ஓடி ஓடி பல வகையான சமாதான முயற்சிகளை மேற்கொண்டவர். அத்தனையும் விழலுக்கு இறைத்த நீராய் போன பின்பும் பிரிந்த குடும்பங்களுக்காக மட்டுமில்லாமல் பிரிந்து போன இரண்டு சிறு பிள்ளைகளுக்காய் வருந்தியவர். அப்படிப்பட்ட சுப்பு மாமா தன் மகள் கல்யாணத்துக்கு என்னை வரச் சொல்லிக் கூப்பிடுகையில் எப்படி வர மாட்டேன் என்று சொல்ல.
நீ கண்டிப்பா வரணும் விஸ்வா. இவனுங்க மேலே இருக்குற கோபத்தைக் காரணம் காட்டிக்கிட்டு இன்னமும் நீ தனியா கெடந்து கஷ்டப்பட்டுட்டு இருக்கக் கூடாது. ஒலகத்துலேயே கொடூரமான விஷயம் என்னான்னு உனக்குத் தெரியுமா. ஊருபட்ட சொந்தம் இருந்தும் நமக்குன்னு ஆளில்லாம தனியா கெடக்குறது தான். போதும். இது வரைக்கும் நீ பட்ட கஷ்டமெல்லாம். தனியாளா நீ போயிருக்குற இந்த வனவாசத்தை முடிச்சுக்க. திரும்ப வா. ஆமா.. இங்க வந்தா நீ இவனுங்க மொகத்துலேயெல்லாம் முழிச்சு தான் ஆகனும். வேற வழியில்லை. இத்தனை வருஷம் இவனுங்களுக்குக் கொடுத்த தண்டனை போதும். கண்டிப்பா கல்யாணத்துக்கு வா.
அன்றைக்கும் சரி. இன்றைக்கும் சரி. சுப்பு மாமா இப்படித் தான். எது விட்டுப் போனாலும் சொந்தம் விட்டுப் போகக் கூடாதுன்னு அடிச்சுக்கிடக் கூடிய ஒரு மனசு அவருக்கு.
நான் யார்கிட்ட தோத்துப் போறேன் விஸ்வா . என்னோட சொந்தக்காரன்கிட்ட தானே. அதிலென்ன நஷ்டம் சொல்லு. அவன் ஜெயிச்சதாவே நெனைச்சுக்கிடட்டுமே. என்னையை ஜெயிச்சிட்டேன்னு அவன் சந்தோசப் படப்போறான். அவ்வளவு தான. அந்த சந்தோசத்தை அவனுக்குக் கொடுக்குறதுல எனக்கு ஒரு வருத்தமும் இல்லை. ஒரு மனுஷனுக்கு பலமே அவனோட சொந்த பந்தங்கள் தான். இப்படி நான் சொல்றதுல பல பேருக்கு உடன்பாடில்லாம இருக்கலாம். ஏன். உன்னோட அத்தைக்குக் கூடத்தான்.. உனக்கும் தான் நான் இப்படி இருக்குறது பிடிக்கலைன்னு ஓம்முகம் அப்பட்டமா படம்போட்டு காட்டுது. வீட்டுல கூடப் பொறந்த அண்ணந்தம்பிகளை வேணாம் வேணாம்ன்னு ஒதுக்கி வைச்சிட்டு ரோட்டுல போறவன் வாரவன் கூட நீ அந்நியோன்யமா பழகுறேன்னு சொன்னீன்னா அது உனக்கே சிரிப்பாத் தெரியலையா. எது தடுக்குது உன்னை. காசா.. பணமா.. கௌரவமா.. விட்டுக் கொடுக்கலாம் விஸ்வா . எல்லாத்தையும் விட்டுக் கொடுக்கலாம். தப்பே இல்லை.
உங்களை மாதிரி வாழுறது கஷ்டம் மாமா. வாழுறது என்ன. நெனைக்கிறதே ரொம்ப கஷ்டம். லெச்சத்துல ஒருத்தருக்குக் கூட இப்படி ஒரு மனசு வாய்க்காது. நான் அந்த லெச்சத்துல ஒருத்தன் இல்லை மாமா.
நானும் லெச்சத்துல ஒருத்தன் இல்லை விஸ்வா . ரொம்ப சாதாரணமான, சராசரி மனுஷந்தான். இப்படி இருக்க முடிஞ்ச வரைக்கும் முயற்சி பண்ணுறேன். கடைசி வரைக்கும் முயற்சி பண்ணிக்கிட்டே இருக்கனும்ன்னு நெனைக்கிறேன். அவ்வளவு தான். இந்த பூமியில நாம இருக்கப் போறது ரொம்ப கொஞ்ச காலம் தான் விஸ்வா . அந்த கொஞ்ச காலத்துக்குள்ள ஏன் சக மனுஷனோட சண்டை போட்டுக்கிட்டு இருக்கனும். நாந்தான் பெரிசு..நீ சிறுசுன்னு ஒருத்தருக்கு ஒருத்தர் அடிச்சுக்கிட்டும் புடிச்சிக்கிட்டும் இருக்கனும் சொல்லு.
சுப்புமாமாவின் மனசும் குணமும் யாருக்கும் அத்தனை எளிதில் வாய்ப்பதில்லை. அவர் கூப்பிட்டு வராமல் இருக்க என்னால் முடியவில்லை.
மதிய சாப்பாடுக்குப் பின்பு சற்றே அயர்ந்த நிலையில் அமர்ந்திருந்த வேளையில் தான் ராஜியுடன் பேச வாய்த்தது.
நல்லா இருக்கியா ராஜி..
கையில் சின்ன ஐஸ்க்ரீம் கப்போடு வந்தமர்ந்தவளிடம் கேட்டேன். முந்தானைத் தலைப்பை வாரியெடுத்து மடி மீது போட்டுக் கொண்டு இடது கையில் கப்பைப் பிடித்துக் கொண்டு வலது கையில் இருந்த சின்ன மரக்கரண்டியால் ஐஸ்க்ரீமைக் கோரியெடுத்தவள், க்ரீம் வழியக் காத்திருந்த அந்த கரண்டியை என் வாயை நோக்கி நீட்டினாள்.
வேண்டாம் ராஜி.. நீ சாப்பிடு.
ஏன்.. இப்பல்லாம் நீ ஐஸ்க்ரீம் சாப்பிடுறதில்லையா. பல்லெல்லாம் போயிருச்சா.. எங்க காட்டு. நல்லாத்தானே இருக்கு. அப்புறம் என்ன..
பல்லெல்லாம் நல்லாத்தான் இருக்கு, இருந்தாலும் வேணாம். நா என்ன சின்னப் புள்ளையா. ஐஸ்க்ரீம் சாப்பிட. நீ சாப்பிடு.
நான் மட்டும் இன்னும் சின்னப் புள்ளையாக்கும். ஆமா.. யார் சொன்னா சின்னப்புள்ளைங்க மட்டும் தான் ஐஸ்க்ரீம் சாப்பிடனும்ன்னு. எல்லாரும் சாப்பிடலாம். ஓ... எச்சிக் கரண்டின்னு பாக்குறியா. வேறொன்னு எடுத்துட்டு வரவா.
டோன்பி ஸில்லி. அதெல்லாம் இல்லை. சும்மா தான் வேணாம்.
எத்தனை ஐஸ்க்ரீம் இப்படி ஒத்தை ஸ்பூன்ல சாப்பிட்டிருப்போம். அதெல்லாம் மறந்துட்டியோ என்னவோ. இருக்கட்டும். என்ன கேட்ட ..
நல்லா இருக்கியான்னு கேட்டேன்.
பாத்தா எப்படி தெரியுது. நல்லா இல்லாத மாதிரி தெரியுதா.
பாத்தவுடனே எல்லாமும் தெரியுற மாதிரி இருந்துட்டாத்தான் ப்ரச்சனையே இல்லையே ராஜி. வெளியே தெரியிற மாதிரியேவா உள்ளேயும் இருக்கோம்.
அதென்னவோ உண்மை தான். வெளியேவே எல்லாமும் தெரிஞ்சிட்டா நல்லாத்தான் இருக்கும். பட் யூ நோ ஒன் திங். ட்ரூத் ஈஸ் காம்ப்ளிகேட்டட். அதனால அது உள்ளேயே பத்திரமா இருக்கிறது தான் நல்லது. மேலும் எல்லாராலேயும் எல்லா உண்மைகளையும் தாங்கிக்க முடியாது. என்ன நாஞ்சொல்றது.. சரிதானே..
நல்லா இருக்கியான்னு கேட்டது தப்பா. அதுக்கு போயி எவ்ளோ பெரிய விசயமெல்லாம் பேசுற.
கேட்டது தப்பில்லை தான் . இட்ஸ் அ குட் லைன் டூ ஸ்டார்ட் வித். ஆனா நமக்குள்ள அதெல்லாம் தேவையில்லை. இல்லையா. நீ எப்படி இருக்கன்னு நாங்கேக்குறதும், நான் எப்படி இருக்கேன்னு நீ கேக்குறதும் அர்த்தமில்லாத ஒன்னு. ஹவ் டூ வீ ஃபீல்.. ஹவ் டூ வீ லீட் அவர் லைஃப் ன்னு நமக்கே தெரியும். அப்புறம் எதுக்கு இந்த தேவையில்லாத கேள்விகள். ஆமா.. வனவாசம் போயிருந்தியே.. முடிஞ்சிருச்சா..
எல்லாரும் சேந்து விரட்டினாங்க போனேன்.
யாரு விரட்டினது உன்னை. அத்தையும் மாமாவுமா.. இல்லை.,, எங்கப்பாவும் அம்மாவுமா. இல்லை.. இந்தா இங்க சுப்பு பெரியப்பா மகள் கல்யாணத்துல வந்திருக்கிற அத்தனை பேருமா.. யாரு விரட்டினது உன்னை.
கூடப் பொறந்தவங்க தானே ராஜி... எங்கம்மாவும் உன் அப்பாவும். அப்புறம் ஏன் அவ்ளோ சண்டை போட்டாங்க. ஒருத்தர் மொகத்துல ஒருத்தர் முழிக்க மாட்டோம்ன்னு இருந்தாங்க. நீ சொல்ற மாதிரி இந்தா இங்க இருக்குறவங்க எல்லாரும் ஏன் அவங்கவங்களுக்கு சாதகமான ஒரு பக்கத்துல சாய்ஞ்சுகிட்டு அந்த சண்டையை வளத்து விட்டு குளிர் காய்ஞ்சாங்க. அங்கே போகாதே .. யாரையும் பாக்காதே.. பேசாதேன்னு ஓங்கிட்டேயும் ஏங்கிட்டேயும் சொல்லிச் சொல்லி உனக்கும் எனக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளியை உண்டாக்கினாங்க..
உனக்கும் எனக்கும் இடைவெளி இப்ப இருக்கா விஸ்வா . சொல்லு இப்ப இருக்கா. என்னையைப் பொறுத்த வரைக்கும் அந்த இடைவெளி எப்பவுமே என்னைக்குமே இருந்ததேயில்லை. அது கெடக்கட்டும். அப்புறமா அதைப் பத்தி பேசுவோம். ஸோ.. அவங்க சண்டை போட்டாங்க.. நீ எல்லாரையும் விட்டுட்டு போயிட்ட. என்னையையும் சேத்து. அப்படித்தானே... இல்லையா. சரி. அது முடிஞ்ச கதை. இப்ப ஏன் வந்த விஸ்வா . சுப்பு பெரியப்பா கூப்பிட்டார்னா. இது வரைக்கும் அவர் உன்னையைக் கூப்பிடவே இல்லையா. அப்பல்லாம் வரணும்ன்னு தோணாத உனக்கு இப்ப மட்டும் ஏன் வரணும்ன்னு தோணுச்சு.. ராஜியையும் வரச் சொல்லியிருக்கேன். கண்டிப்பா வர்றேன் சொல்லியிருக்கான்னு சுப்பு பெரியப்பா சொன்னாரா.. ரொம்ப நாளைக்கு அப்புறமா என்னையைப் பாகாலாம்ன்னு வந்தியா..
அப்படி அவர் சொன்னதும் அதைக் கேட்டு நான் வந்தததும் தப்பா ராஜி. எனக்கு உன்னையைப் பாக்கனும்ன்னு தோணக்கூடாதா.
டோன் மிஸ்டேக் மீ விஸ்வா .. யூவார் ய கான்ஸியீடட் ஃபூல்(a conceited fool).
எங்களிருக்குவருக்குமிடையே மிகப்பெரியதொரு மௌனம் வந்து குடியமர்ந்து கொண்டது. அதை மீண்டும் ராஜியே உடைத்தாள்.
ஸாரி. பட் ஐ மென்ட் இட். வந்துட்ட.. இதோ பாத்துட்ட. அடுத்து என்ன பண்றதா உத்தேசம். அன்னைக்கு சண்டை போட்டுக்கிட்ட நம்ம அப்பா அம்மா யாருமே இன்னைக்கு உசிரோட இல்லை. நீயும் நானும் தான் மிச்சம். நீயும் கல்யாணமே பண்ணிக்கலை. நானும் பண்ணிக்கலை. இப்ப வந்து என்னைக் கல்யாணம் பண்ணிக்கலாம் வான்னு கூப்பிட வந்திருக்கியா.. வாட்ஸ் தி பர்பஸ் ஆஃப் திஸ் மீட் விஸ்வா .. சுப்பு பெரியப்பா மக கல்யாணம் மட்டும் தானா.
யூவார் பனிஷிங் மீ ராஜி..
யூ அல்ரெடி டிட் விஸ்வா . லெட் இட் பீ. நான் உன்னை ஒன்னு கேக்குறேன். நாம ஏன் கல்யாணம் பண்ணிக்கனும் விஸ்வா . நீ என்கிட்ட கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேக்க வந்தியோ வரலையோ எனக்குத் தெரியாது. நான் உங்கிட்ட கேக்குறேன். எதுக்காக நாம கல்யாணம் பண்ணிக்கனும். ரெண்டு பேரும் லவ் பண்ணினோம்ங்கிறதுக்காகவா.. இல்லை.. எல்லாரும் தான் கல்யாணம் பண்ணிக்கிறாங்களே நாமும் பண்ணிக்கிட்டா என்னன்றதுக்காகவா. நம்ம ஊர்ல எல்லாரும் பண்றாப்புல லவ்வோட பர்பஸே கல்யாணம் தானேங்கிறதுக்காகவா. எனக்கு நிசம்மாவே புரியலை விஸ்வா . நீயும் நானும் கல்யாணம் பண்ணியிருந்தா என்ன பண்ணியிருப்போம். உனக்கு வேண்டியது வேண்டாதது எல்லாத்தையும் நானும், எனக்கு வேண்டியது வேண்டாதது எல்லாத்தையும் நீயும் பாத்துப்பாத்துச் செஞ்சுகிட்டு, என்னையை மாதிரி இன்னோரு ராஜி.. இல்லைன்னா உன்னைய மாதிரி இன்னோரு விஸ்வா.. இல்லை அப்படி ஒன்னு இப்படி ஒன்னுன்னு இரண்டு குழந்தைகளைப் பெத்து, அவங்களை வளர்த்து ஆளாக்கி, உன்னையை ஆளாக்க நாங்க எவ்ளோ கஷ்டப்பட்டோம் தெரியுமான்னு அந்த குழந்தைங்கக் கிட்டேயே நம்ம அருமை பெருமைகளைப் பேசி, அவங்களுக்கும் இதே மாதிரி கல்யாணம் பண்ணி கொடுத்து, இது எல்லாமே ஒரு மாதிரி அப்ஸர்டா இல்லை. எனக்கு இந்த குடும்பம்ங்கிற இன்ஸ்டிடியூஷன் மேலேயே நம்பிக்கை போயிருச்சு விஸ்வா .
தப்பா யோசிக்கிறியோன்னு தோணுது ராஜி. மனுஷனா பொறந்தா , இல்லை.., பூமியில பொறந்த எல்லா உயிர்களுக்குமே ரீ-ப்ரொடக்ஷன் ட்யூட்டி இல்லையா.
அப்ப ஏன் நீ இது வரைக்கும் கல்யாணம் பண்ணிக்கலை.. குழந்தை பெத்துக்கலை. இப்படி சுப்பு பெரியப்பா மகள் கல்யாணத்துக்கு வரப்போற ராஜியையே கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு காத்திருந்தியாக்கும். ஜோக்ஸ் அபார்ட். ஒலகத்தோட மக்கள் தொகை இன்னைக்கு எண்ணூறு கோடியைத் தாண்டியாச்சு விஸ்வா . நீயும் நானும் குழந்தை பெத்துக்கலைன்னா மனுஷ இனமே அழிஞ்சு போயிறாது.
அவ்வளவு வெறுத்துப் போச்சா ராஜி. நாந்தான் காரணமா. ஒருவேளை அப்பவே உன்னையும் கல்யாணம் பண்ணி கூட்டிட்டுப் போயிருக்கனுமா. அப்படி பண்ணியிருந்தா வேற மாதிரி யோசிச்சிருப்பியா.
மே பீ. ஆனா அது தான் நடக்கலையே. உன் கூட நடக்காத அந்தக் கல்யாணம் வேற யார் கூடயும் வேண்டாம்ன்னு மட்டும் தான் அப்போதைக்கு முடிவெடுத்தேன். அதுக்காகவே எங்க அப்பா அம்மா கூட நிறைய சண்டை போட்டேன். ஒரு கட்டத்துக்கு மேலே அவங்களும் போனாப் போகுதுன்னு விட்டுட்டாங்க. என்னோட பிடிவாதம் தான் உனக்குத் தெரியுமே. அதுக்கப்புறமா இப்படி தனியா இருக்குறது எனக்கும் புடிச்சிப் போச்சு. தட்ஸால். நல்ல வேலையில இருக்கேன். உங்கம்மா சொல்வாங்களே, அப்படி, முள்ளங்கிப் பத்தையா சம்பளம் வாங்குறேன். நிறைய செலவு பண்றேன். அதை விட அதிகமா நிறைய டொனேட் பண்றேன். ஐயாம் ஹேப்பி விஸ்வா .
நிறைய மாறிப் போயிட்டே ராஜி. அதுங்கூட நல்லாத்தான் இருக்கு. நாந்தான் மக்கு மாதிரி இங்கேயிருந்து போனா மாதிரியே திரும்பி வந்திருக்கேன்னு நினைக்கேன். யாரோ யார் கூடவோ சண்டை போட, அது என்னையையும் உன்னையையும் இப்படி பிரிச்சு வைச்சிருச்சேன்னு நானும் நிறைய நாள் யோசிச்சு யோசிச்சுச் சங்கடப் பட்டிருக்கேன். ஆனா அது உண்மையான காரணமில்லைன்னு தெரிஞ்சும் அதை ஏத்துக்க தெரியாத முட்டாளாத் தான் இருந்திருக்கேன் இவ்ளோ நாளா. இப்ப இத்தனை வருஷம் கழிச்சு, உங்கிட்ட என்னையைக் கல்யாணம் பண்ணிக்கிறயான்னு கேக்குறதுக்கு எனக்கு தைரியமும் இல்லை. அருகதையும் இல்லை. நான் அந்த எண்ணத்தோட இந்த கல்யாணத்துக்கும் வரவும் இல்லை. ஐ ஜஸ்ட் வாண்டட் டீ ஸீ யூ. எனக்கு உன்னைப் பாக்கணும்ண்கிற எண்ணம் எல்லா நாளும் இருந்தது. சுப்பு மாமா சொன்னவுடனே அது ட்ரிகர் ஆயிருச்சு அவ்வளவு தான். நான் ஏற்கனவே சொன்னா மாதிரி நீ நிறைய மாறிட்டே ராஜி. ஒரு விசயத்தை தவிர. அது இந்த காட்டன் சேலை.
இது என்ன கலர்ன்னு ஞாபகமிருக்கா விஸ்வா .
ஏன் இல்லை. காயாம்பூ கலர். நீ சொல்லிக் கொடுத்தது தானே. சரியா ஞாபகம் வைச்சிருக்கேனா. அவள் சேலைத் தலைப்பை எடுத்து என் கையில் வைத்துக் கொண்டேன்.
ஆமா. காயாம்பூ. உனக்கு நாந்தான் சொன்னேன். இந்த நிறமும் பூவோட நிறமும் கிட்டத்தட்ட ஒன்னு போலத்தான் இருக்கும். இந்தக் கல்யாணத்துக்கு நீ வருவேன்னு எனக்குத் தெரியும். அதனால தான் நான் இந்த சேலையை இன்னைக்குக் கட்டிட்டு வந்தேன். அந்தக் காயாம்பூ பூக்குற செடி காய்க்கவே காய்க்காதுன்னும் அதனால அந்தப் பூவை காயாம்பூன்னும் சொல்வாங்க. ஆனா அந்தச் செடி காய்க்கும். பூக்கவும் காய்க்கவும் கனியவும் செயயாத ஒரு செடி எப்படி ப்ராபகேட் ஆகும். இல்லைன்னா ஒன்னையையும் என்னையையும் மாதிரி ஒத்தையாவே இருந்துட்டு ஒத்தையாவே போக வேண்டியது தான். இல்லையா.
என்னடா இவ முன்னுக்கும் பின்னுக்கும் முரணா பேசுறாளேன்னு பாக்குறியா விஸ்வா. அப்படித் தான் சில சமயம் ஆயிடுறது. சுப்பு பெரியப்பா அடிக்கடி சொல்றாப்புல எதுக்காக நாம இப்படி ஒரு வீம்பை மனசு பூராம் சுமந்துட்டு அலையிறோம்ன்னு தோணும். அப்படியே உன்னை தேடிவந்து உங்கூடவே ஒன்னாவே இருந்துறலாம்ன்னும் நினைப்பேன். அதுக்கு அடுத்த நிமிஷமே அவனே எதுவும் வேண்டாம்ன்னு தானே போயிருக்கான்.. திரும்ப போயி எதுக்குத் தொந்தரவு பண்ணனும்ன்னு வேதாளம் திரும்பவும் முருங்கை மரத்து மேலே ஏறி உக்காந்துக்கும். மனசு தானே. தஞ்சாவூர் பொம்மை மாதிரி இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமா சாஞ்சிட்டு இருக்கு, கொஞ்ச நேரத்துக்கு அப்புறமா ஆட்டம் நின்னு போயிடும். அதுவும், திரும்ப யாராச்சும் அல்லது எதுனாச்சும் வந்து ஆட்டி விடுற வரைக்கும் தான். இப்ப கூட இந்த கல்யாணம் அப்படி ஒரு விசயம் தான். இந்தா இப்படியும் அப்படியுமா ஆடிட்டு இருக்கேனே.. ஒரு நிமிஷம் நீ ஏன் வந்தேன்ற கோபத்தோட அடுத்த நிமிஷம் நீ ஏன் இத்தனை வரலைன்னு ஏக்கத்தோட.
ஆடட்டும் விடு ராஜி. அதை அதும் போக்குலேயே விடுறது தான் சரி. எனக்கு காபி குடிக்கனும் போல இருக்கு. இங்கே சாயங்கால டிபனுக்கு இன்னும் நேரம் இருக்கே. வர்றியா வெளியே காபி ஷாப்புக்கு போகலாம்.
இருவரும் வெளியே இறங்கி நடந்தோம். நடக்கும் போது இருவருக்கும் இடையே ஒரு இடைவெளி இருந்தது போலவும் இல்லாதது போலவும் இருந்தது. எதற்கோ ஒரு முறை திரும்பி கல்யாண மண்டபத்தைப் பார்த்தேன். எதோவொரு வேலையாய் வெளியே போய் மண்டபத்துக்குத் திரும்பிய சுப்பு மாமா, வாசலில் நின்றபடி எங்கள் இருவரையுமே பார்த்துக் கொண்டிருந்தார்.