top of page

அடையாள அட்டை

அகல் மின்னிதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் ரூ 1500 பரிசு பெற்ற சிறுகதை

அடையாள அட்டை

தகிக்கும் வெயிலைப் பொருட்படுத்தாமல் ட்ரெஷரி ஆபிஸில் க்ளார்க்கிற்காகக் காத்திருந்தாள் இரத்தினத்தக்காள். பதினொன்னரை மணியாகிவிட்ட பின்னாலும் அந்த க்ளார்க் இன்னும் வந்து சேர்ந்த பாடில்லை. அவர் வந்து ஒரு கையெழுத்து போட்டுவிட்டார் என்றால் இரத்தினத்தக்காளுக்கு தான் வந்த வேலை முடிந்துவிடும். எப்போது வருவாரோ. யாரைக் கேட்டால் தெரியுமென்று தெரியவில்லை. இடுப்பில் முடிந்திருந்த சுருக்குப் பையை அடிக்கடித் தடவிப் பார்த்து அது பத்திரமாக இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டாள். இடுப்பை விட்டு அது எங்கே போகும். அது அங்கேயே பத்திரமாய் இருந்தது. சுருக்குப் பை முக்கியமில்லை. அதிலிருக்கும் இருநூறு ரூபாய் பணம் தான் முக்கியம். அதைக் கொடுத்தால்தான் அந்த க்ளார்க் கையெழுத்து போடுவார். அவர் கையெழுத்து போட்டால் தான் அவளுக்குக் கிடைத்து வரும் முதியோர் பென்ஷன் தொடர்ந்து கிடைக்கும். ஏப்ரல் மாதத்தில் இந்த ஒரு நாள் இப்படித்தான் கழிகிறது அவளுக்கு. அவள் தன் எழுபதாம் வயதில் இன்னும் உயிரோடிருப்பதை அவள் விட்டுக் கொண்டிருக்கும் மூச்சுக் காற்றல்ல இதோ இந்த க்ளார்க்கின் கையெழுத்துதான் வருடாவருடம் உறுதி செய்கிறது.

இரத்தினத்தகாளுக்கு இந்த ஆயிரம் ரூபாய் பென்ஷன் பணம் அவ்வளவு தேவையாய் இருந்ததில்லை. அவள் ஒருத்தியின் வாய்க்கும் வயிற்றுக்கும் தேவையானதை ஐந்தாறு வீட்டில் பத்து பாத்திரம் தேய்த்துச் சம்பாதித்துக் கொண்டுதானிருக்கிறாள். ஆனாலும் இந்த ஆயிரம் ரூபாயைப் பங்கு போட்டுக் கொள்ள அவளின் இரண்டு மருமகள்களும் அவளுடைய பேரனோடும் பேத்தியோடும் வருவார்கள். இந்தப் பணம் இருந்தால் மட்டுமே அவளால் தன் பேரனையோ அல்லது பேத்தியையோ மாதத்தில் ஒரேயொரு நாள் மட்டும் பார்க்க முடியும். அதற்காகவேணும் இந்தப் பணம் அவசியம். அதற்கு இந்தக் கையெழுத்து அவசியம். இந்த ஒரு நாள் இங்கே வருவதால் அவளுடைய அன்றாட வேலைகள் அனைத்தும் நின்று போய்விடும். நாராயணனின் மனைவி இன்றைக்கு அவள் வீட்டிற்கு வேலைக்கு வராததற்காய் ஒரு நாள் சம்பளத்தைப் பிடித்துக் கொள்வாள். நாளைக்குக் காலையில் போகும் போது வாசலில் நிப்பாட்டி திட்டித் தீர்த்து விடுவாள். அது கூட பரவாயில்லை. இந்த பணமில்லை என்றால் மருமகள்கள் திட்டுவது தாங்க முடியாமலிருக்கும்.

மூத்த மகனின் வீட்டுக்காரிக்கு அவனை விட கோபம் அதிகம். அவள் ஏச்சும் பேச்சும் காதால் கேட்கக் கூடியதாக இருக்காது. கூனிக் குறுகிதான் கேட்க வேண்டும். காட்டுக் கத்து பேய்க் கத்து கத்துவாள். இத்தனைக்கும் அவள் இரத்தினத்தக்காளின் உடன் பிறந்த தம்பி மகள்தான். பத்தாவது கூட தாண்டாதவனுக்கு சரக்கு வண்டி ஓட்டுபவனுக்கு தன் தம்பியைத் தவிர யார் பெண் தருவார்கள் என்று தன் தம்பியின் கால்களில் விழாத குறையாய் கெஞ்சி தான் அவளை மணமுடித்து வைத்தாள் இரத்தினத்தக்காள். அவளுக்கு இப்படிக் கோபம் பொத்துக் கொண்டு வருமென்று இரத்தினத்தக்காளுக்கு ஜோசியமா தெரியும். தன்னுடைய கோபம் தன் மனைவியிடம் செல்லுபடியாகமல் போகவே மூத்தவன் அந்தக் கோபத்தையெல்லாம் இரத்தினத்தக்காள் மீதே காண்பிக்கத் துவங்கினான். அது அவன் மனைவிக்கு மேலும் தொக்காய்ப் போய்விட்டது. இல்லையென்றால் மதியம் சாப்பிட்டுக் கொண்டிருந்தவனிடம் இவள் ஏதோ கேட்கப் போக, அது அவன் மனைவிக்குக் கோபத்தை மூட்ட, வந்த கோபத்தில் அவள் பேயாய்க் கத்த, அதற்கு பெற்ற தாயை எச்சில் கையால் அறைவானா மகன். அன்றைக்கு வெளித் திண்ணைக்கு வந்தவள் தான். இன்றளவும் அவன் வீட்டு வாசற்படி மிதிக்காமல் இருக்கிறாள் ரோசக்காரி இரத்தினத்தக்காள்.

அப்போது கல்யாணமாகாமல் வெளியூரில் இருந்த சின்னவன் செய்தி கேட்டு மூன்றாம் நாள் வந்து சேரும் வரைக்கும் அந்தத் திண்ணையிலேயே சாப்பிடாமல் கொள்ளாமல் கிடந்தாள் இரத்தினத்தக்காள். வந்த சின்னவனோ அம்மாவை ஏன் அடித்தாய் என்று பெரியவனிடம் சண்டையெல்லாம் போடவில்லை. வெளியூரில் நானென்ன கலெக்டர் வேலையா பார்க்கிறேன். அந்த ஊரில் செய்யும் புரோட்டா மாஸ்டர் வேலை இந்த ஊரில் கிடைக்காதா என்ன என்று மறுநாளே இரத்தினத்தக்காள் இப்போது குடியிருக்கும் பழைய மாட்டுக் கொட்டகை வீட்டை வாடகைக்கெடுத்து அவளுடன் அங்கே குடி போய்விட்டான். தனக்குக் கல்யாணமாகும் நாள் வரை அவனும் இரத்தினத்தக்காளை நல்லபடியாகத்தான் பார்த்துக் கொண்டான்.

அவனுக்கும் வந்தாள் ஒரு நல்ல மகராசி. இங்கன வீசுற அந்த புரோட்டாவை எங்க அப்பன் ஊர்ல வந்து வீசு. எங்கப்பன் வீட்டோட இருந்துக்கலாம். அதுதான் எனக்கும் சௌகர்யம் உனக்கும் சௌகர்யம்ன்னு அவனைத் தன் சொந்த ஊருக்கு கிளப்பிக் கொண்டு போய்விட்டாள். எங்கன இருந்தாலும் நல்லா இருக்கட்டும் என்று இவளும் அவனை அனுப்பிவிட்டாள். இருந்தாலும் சின்னவன்தான் இன்னமும் தன் பெஞ்சாதிக்குத் தெரியாமல் வந்து வீட்டு வாடகைப் பணத்தைத் தந்து விட்டு போகிறான். குடியிருக்கும் மாட்டுக் கொட்டகைக்கு வாடகை மட்டும் தந்து விட்டால் போதுமா. வேளாவேளைக்கு பசியெடுக்குதே. பிச்சையெடுத்தா திங்க முடியும். உடம்புல கொஞ்சம் நெஞ்சம் தெம்பு இருக்குற வரைக்கும் நாலு வீட்டில் எச்சில் தட்டு கழுவுவேனே ஒழிய புள்ளைங்க வீட்டு வாசல்ல சோத்துக்கு நிக்க மாட்டேன்னு வைராக்கியத்தோட இருக்கிறாள் இரத்தினத்தக்காள்.

இரத்தினத்தக்காளின் இந்த நிலைமையைப் பார்த்து ஊரே கவலைப்பட்டது. ஆனாலும் அவளின் மகன்களிடமோ அல்லது மருமகள்களிடமோ யாரும் பேசத் தயாராய் இல்லை. அவள் மகன்களின் குணமும் மருமகள்களின் குணமும் அவர்களுக்கு நன்றாகத் தெரிந்த விசயந்தானே. யார் போய் பேசுவது அவர்களிடம், பின்னர் யார் வாங்கிக் கட்டிக் கொள்வது என்று ஒதுங்கிக் கொண்டாலும் அக்காளுக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் மறுக்காமல் செய்தது ஊர் ஜனம். அவளுக்கு ஓல்டேஜ் பென்ஷன் வாங்கிக் கொடுத்தது மூனாந்தெரு சண்முகம். தன் வீட்டை விட்டு இரத்தினத்தக்காளை வெளியேற்றிய மூத்தவன் தன் வீட்டு ரேசன் கார்டிலிருந்து மட்டும் அவளை வெளியேற்ற மறுத்து விட்டான். அவளுடைய கணக்கில் கிடைக்கும் அரிசிக்கும் பருப்புக்கும் சர்க்கரைக்கும் மட்டும் அவள் அவன் வீட்டு ரேசன் கார்டில் இருக்க வேண்டிய கட்டாயம் இருந்தது அவனுக்கு.

ரேசன் கார்டில்லாமல் பென்ஷன் வாங்குவது அவ்வளவு லேசுப்பட்ட காரியமாய் இல்லை. மூத்தவன் வீட்டிற்கும் தாசில்தார் ஆபிஸுக்கும் நடையாய் நடந்தார் சண்முகம். மூத்தவன் பிடிவாதமாய் மறுத்துவிட, தாசில்தார் ஆபீஸிலிருந்த நடுத்தெரு மணிகண்டன் வீஏஓவுக்கும் ஆர்.ஐக்கும் கொஞ்சமாய்ப் பணம் தந்து புதிதாய் ஒரு ரேசன் கார்டு ஒன்றை வாங்கித் தந்தான். அதைக் கொண்டு சண்முகம் இரத்தினத்தக்காளுக்கு பென்ஷனுக்கு ஏற்பாடு செய்தார். அன்றிலிருந்து அவளுக்கு மாதாமாதம் பத்து தேதிக்குள் ஆயிரம் ரூபாய் மணியார்டரில் வந்து விடும்.

இரத்தினத்தக்காளுக்குப் பென்ஷன் பணம் வருவது போன வருடத்தில் அவளுக்கு உடம்புக்கு முடியாமல் படுக்கையில் விழும் வரைக்கும் அவளது இரண்டு மருமகள்களுக்கும் தெரியாமல் தான் இருந்தது. பொதுவாக இருமலோ காய்ச்சலோ வந்தால் பிள்ளையார்க் கோயிலருகில் இருக்கும் மெடிக்கல் ஷாப்பில் மாத்திரை வாங்கிக் கொண்டு வருவாள். பக்கத்திலிருக்கும் ஒரு ரைஸ் மில்லில் ரேசனரிசியைக் கொடுத்துப் பொடித்து நொய்யரிசியாக்கி வைத்திருப்பதிலிருந்து ஒரு கைப்பிடி எடுத்து கஞ்சி காய்ச்சி குடித்து விட்டு வாங்கி வந்த மாத்திரைகளை விழுங்கிக் கொண்டு வீட்டிலேயே முடங்கிக் கிடப்பாள் இரத்தினத்தக்காள். இரண்டொரு நாட்களில் உடம்பு கொஞ்சமாய்த் தேறியதும் மீண்டும் வீட்டு வேலைகளுக்குக் கிளம்பி விடுவாள். அப்படித் தான் அவளுக்கு போன வருடமும் காய்ச்சல் வந்தது. ஆனால் அது மூன்று நாட்களுக்குள் சரியாகாமல் அவளைப் படுத்த படுக்கையாக்கி விட்டது. இரவெல்லாம் முனகிக் கொண்டே இருந்தவளின் சத்தத்தைக் கேட்ட பக்கத்து வீட்டுக்காரர் அவளை கம்பவுண்டரிடம் அழைத்துக் கொண்டு போனார். அவர் அவளைப் பார்த்து விட்டு இரண்டு நாட்களாவது ஆஸ்பத்திரியில் சேர்த்து குளுகோஸ் ஏற்ற வேண்டும் இல்லையென்றால் உயிருக்கே ஆபத்தாய் போய்விடுமென்று சொல்லவே பக்கத்திலிருந்த ஒரு நர்ஸிங் ஹோமில் சேர்த்துவிட்டு மூத்தவனுக்குத் தகவல் கொடுத்தார் அந்த பக்கத்து வீட்டு நல்ல மனுஷன்.

மூத்தவன் மனைவியோ அடுத்த நாள் தான் வந்தாள். முதல் நாள் முழுவதும் அந்த நர்ஸிங் ஹோமிலிருந்த ஒரு நர்ஸே பார்த்துக் கொண்டாள். இரண்டொரு நாட்களில் குணமாக வேண்டிய நோய் குணமாகாமலே இருக்கவே அவள் தன் கணவனிடம் சண்டை பிடிக்கத் துவங்கி விட்டாள். உங்கம்மா உங்களை மட்டுந்தான் பெத்தாளா. நான் மட்டுந்தான் இவளுக்கு மருமவளா. உங்க தம்பி பெண்டாட்டி மருமவ இல்லியா! நான் இரண்டு நாள் பாத்த மாதிரி அவளும் வந்து தான் பாக்கட்டுமே. பாத்தா என்ன குறைஞ்சா போயிருவா. அவளை வரச் சொல்லுங்க. நான் போறேன் வீட்டுக்கு. என்று போய்விட்டாள். அதற்கு பின் இரண்டாவது மருமகள் வந்தாள்.

அப்படி இரண்டாவது மருமகள் வந்திருந்த அன்று பார்த்து பென்ஷன் பணமும் மணியார்டரில் வந்து சேர்ந்தது. எப்போதும் கொண்டு வந்து கொடுக்கும் போஸ்ட்மேன் இரத்தினத்தக்காளை அவள் வீட்டில் காணாமல் பக்கத்து வீட்டில் கேட்ட பொழுது அங்கேதான் அவளை ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதைச் சொல்லியிருக்கிறார்கள். மனுஷன் பதறி அடித்துக் கொண்டு அங்கேயே வந்துவிட்டார். அவருக்குப் பதறிய பதட்டம் கூட பெத்த பிள்ளைகளுக்கோ அல்லது மருமகள்களுக்கோ இல்லையே என்று நினைத்தாள். அவர் அன்று வந்த பொழுது இருந்த சின்ன மருமகளுக்கு அவர் கொண்டு வந்த பணம் மட்டும் தான் கண்ணுக்குத் தெரிந்தது.

அடுத்து இரண்டு நாட்களுக்குப் பின்னர் உடம்பு ஓரளவு குணமானதும் ஆஸ்பத்திரியில் நான்காயிரம் ரூபாய் பணம் செலுத்திவிட்டு இரத்தினத்தக்காளை வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போகச் சொன்னார்கள். இப்போது இரண்டு மருமகள்களுக்கும் யார் பணத்தைக் கட்டுவதென்று சண்டையாயிற்று. இரத்தினத்தக்காளோ போஸ்ட்மேன் கொடுத்த ஆயிரம் ரூபாயைக் கொடுத்தாள். மீதி பணத்தினை இரண்டு மகன்களும் பெருத்த சண்டை சச்சரவுகளுக்குப் பின்னர் ஆளுக்குக் கொஞ்சமாய்க் கொடுத்தார்கள். அன்றே மணியார்டர் பணம் வந்தவுடன் அதை இரண்டு மகன்களுக்கும் ஆளுக்குப் பாதியாக இரத்தினத்தக்காள் கொடுத்து விட வேண்டுமென்றும் அப்போது தான் இந்த மாதிரி இனி எப்போதாவது உடம்புக்கு வந்து விட்டால் அவர்களால் செலவு செய்ய முடியுமென்றும் அவர்கள் நான்கு பேரும் முடிவெடுத்து விட்டார்கள். இரத்தினத்தக்காள் வெளியில் தெரியாதவாறு ஒரு சிரிப்பொன்றைச் சிரித்து விட்டு சரியென்று சொல்லிவிட்டாள். அன்றிலிருந்து இரண்டு மருமகள்களும் மாதந்தோறும் முதல் பத்துத் தேதிக்குள் தங்கள் மகனையோ மகளையோ அழைத்துக் கொண்டு வந்து பணத்தை வாங்கிக் கொண்டு போக ஆரம்பித்தார்கள். அப்படித்தான் இரத்தினத்தக்காள் தன் பேரனையோ அல்லது பேத்தியையோ பணம் கொடுத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

இரத்தினத்தக்காள் பழசையெல்லாம் யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் அந்த ட்ரஷரி க்ளார்க் வந்து சேர்ந்தார். இவளும் அவரைப் போய் பார்த்தாள். சுருக்குப் பையிலிருந்த இரண்டு நூறு ரூபாய்களை அவரிடம் கொடுத்தாள். வாங்கி சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டவர்

இந்தாம்மா இங்கன ஒரு கைநாட்டு வை. ஒரு நிமிஷம் இரு. உங்கிட்ட ஆதார் அட்டை இருக்கா. என்று கேட்டார்.

ஆதார் அட்டையா அப்படின்னா என்று பதிலுக்குக் கேட்டாள் இரத்தினத்தக்காள்.

அதாம்மா அடையாள அட்டை. நீ இன்னாருன்னு சொல்றதுக்கு சர்க்கார் புதுசா ஒரு அட்டை கொடுப்பாங்க. அந்த அட்டை இருக்கா..

எங்கிட்ட எந்த அட்டையும் இல்லீங்களே. அதையும் நீங்களே கொடுத்துருங்க. நாந்தான் வருஷந்தவறாம இங்கன வாரமுல்லா. உங்களுக்குத் தான் என்னய நல்லாத் தெரியுமே.

அவர் சத்தமாய்ச் சிரித்தார். அவள் அப்படி என்ன சொல்லிவிட்டாளென்று இப்படி சிரிக்கிறார் என்று புரியாமல் இரத்தினத்தக்காள் அவரை பார்த்துக் கொண்டே நின்றாள்.

அதெல்லாம் இங்க கொடுக்க மாட்டாங்க. தாசில்தார் ஆபிஸ் பக்கத்துல இதுக்குன்னே ஒரு ஆபீஸ் இருக்கு. அங்க போனியின்னா போட்டோ புடிப்பாங்க. கைரேகையெல்லாம் எடுப்பாங்க. அதுக்கப்புறம் அட்டை உன் வீடு தேடி வரும். அது வந்தவுடனே அதை எடுத்துட்டு இங்க வா.

நா ஒருநா வேலையை விட்டுட்டுதான் இன்னிக்கு இங்கன வந்துருக்கேன்ய்யா. இதுக்கே சம்பளத்தை புடிச்சிகிடுவா மகராசி. இனிமே அடையாள அட்டைய எடுக்கப் போகனும்ன்னா அதுக்கு ஒரு நாளோ இரண்டு நாளோ ஆயிரும்ய்யா. நீங்க இந்த தடவை மட்டும் பணத்தை அனுப்பிச்சிருங்க. அடுத்த மாசம் நா அட்டையோட வாரேன். ரூவா வரலைன்னு சொன்னா எம் மருவளுக நம்ப மாட்டளுகய்யா. நா பொய் சொல்லுதேன்னு சொல்லித் திட்டுவாளுக. அடிச்சாலும் அடிச்சுப்புடுவாளுக.

புரியாம பேசாதம்மா. ஆதார் கார்டு இல்லைன்னா பென்ஷன்ல்லாம் குடுக்க முடியாது. நான் என்ன எனக்கா கேக்குறேன். சர்க்கார் கேக்கச் சொல்லுது நாங்கேக்குறேன். பென்ஷன் பணம் போடனும்ன்னா ஆதார் அட்டையோட வா. இல்லைன்னா வராதே. இப்போ போ. என்று விரட்டாத குறையாக விரட்டிவிட்டார் அந்த க்ளார்க். அவள் கொடுத்த இருநூறு ரூபாயைத் திருப்பித் தருவார் என்று நினைத்து நின்று கொண்டிருந்தாள் இரத்தினத்தக்காள். ஆனால் அவர் தருவதாய்த் தெரியவில்லை.

இரத்தினத்தக்காளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. அந்த ஆதார் அட்டை இல்லையென்றால் தான் வாழ்ந்த இந்த எழுபது வருஷ வாழ்க்கைக்கு எந்த ஒரு அடையாளமும் இல்லை என்பதை உணர்ந்த அவள் வந்த அழுகையை அடக்கிக் கொண்டு வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

*********

CONTACT

Tel: 9810488582| Tel: 7011144631 | sureshbarathan@gmail.com

Sign Up for Stay Connected

Thanks for submitting!

Follow me:

  • Black Facebook Icon
  • Black Twitter Icon

© 2022 by Suresh Barathan

bottom of page