கதைகள்

இரத்தினத்தகாளுக்கு இந்த ஆயிரம் ரூபாய் பென்ஷன் பணம் அவ்வளவு தேவையாய் இருந்ததில்லை. அவள் ஒருத்தியின் வாய்க்கும் வயிற்றுக்கும் தேவையானதை ஐந்தாறு வீட்டில் பத்து பாத்திரம் தேய்த்துச் சம்பாதித்துக் கொண்டுதானிருக்கிறாள். ஆனாலும் இந்த ஆயிரம் ரூபாயைப் பங்கு போட்டுக் கொள்ள அவளின் இரண்டு மருமகள்களும் அவளுடைய பேரனோடும் பேத்தியோடும் வருவார்கள். இந்தப் பணம் இருந்தால் மட்டுமே அவளால் தன் பேரனையோ அல்லது பேத்தியையோ மாதத்தில் ஒரேயொரு நாள் மட்டும் பார்க்க முடியும். அதற்காகவேணும் இந்தப் பணம் அவசியம்.

பகட்டில்லாமல் ஒப்பனை செய்வதிலும், செய்த ஒப்பனைக்குப் பாந்தமாய் காட்டன் சேலை அணிவதிலும் ராஜியை எப்பவும் விஞ்சவே முடியாது. இன்றைக்கும் அப்படித்தான்.. அது என்ன.. ம்.. காயாம்பூ.. காயாம்பூ நிறத்திலொரு சேலை. இந்த நிறத்துக்கு அந்த பெயரைச் சொல்லிக் கொடுத்ததே ராஜிதான். வெள்ளை வெள்ளையாய் நிறைய பூ வேலைப்பாடுகள் சேலை முழுவதிலும் நிறைந்திருந்தன. மடிப்புகளை ஒன்றொன்றாய்க் கோர்த்தெடுத்து அடுக்கி வைத்தாற்போல கஞ்சியிட்டு இஸ்திரி போட்டிருக்க, இஸ்திரி மடிப்புகளுக்கு எந்தவொரு பாதகமும் வந்துவிடாதபடிக்கு நாற்காலியில் பட்டும் படாமலும் மீண்டும் அமர்ந்தாள் ராஜி.

திட்டம் போட்டு நடந்த கொலை. மூர்க்கத்தனமா வெட்டியிருகாங்க. எங்கேயோ எப்பவோ யார்கிட்டயோ பழனி பண்ணியிருந்த பிரச்சினைக்கு தான் நடந்துருக்கனும்ன்னு யோசிக்குது போலீஸ். ஏற்கனவே அவன் ரிக்கார்டெல்லாம் தூசி தட்டி எடுத்துட்டாங்க. வேற ஸ்டேசன்லயோ அல்லது பக்கத்துல ஏதாவது கோர்ட்லயோ சீக்கிரமே யாராவது இதுக்காக சரணடைவாங்கன்னு எதிர்பார்க்குறாங்க. முருகேசன். சாப்பிட்டீங்களா. இல்லையா. தம்பி அப்பாவுக்கு சாப்பிட ஏதாச்சும் வாங்கிக் கொடு. எப்படியும் ராத்திரி ரொம்ப நேரம் ஆயிடுங்க வீட்டுக்குப் போக.

எல்லாருக்கும் பொதுவாய் காய்கிற நிலவைப் போல, எல்லாருக்கும் பொதுவாய் சுட்டெரிக்கிற சூரியனைப் போல, இன்று இந்த மழையும் கூட எல்லாருக்கும் பொதுவாகவே பொழிகிறது. இன்றைக்கு நான் சுந்தரிக்காக பெய்தேன் என்று மழை யாரிடமாவது சொல்லவா போகிறது.. அப்படியே மழை யாரிடமேனும் சொன்னாலும் கூட அதை அவர்கள் நம்பவா போகிறார்கள்..
மழை அப்படிச் சொன்னாலும் சொல்லாவிடினும், அதை யாரேனும் நம்பினாலும் நம்பாவிடினும், இந்த மழை இன்று எனக்காகவே பெய்கிறது என்பதை நான் நம்பத்தான் போகிறேன் என்று சுந்தரி தனக்குத் தானே சமாதானமாய்ச் சொல்லிக் கொண்டாள்.

எப்படி ராஜிக்கு சதா தைத்துக் கொண்டிருப்பதற்கு ஏதாவது துணிகள் கிடைத்துக் கொண்டே இருந்ததோ அது மாதிரி சரசுவுக்கு ஏதாவது ஒரு கேஸ் கட்டு எந்நாளும் டைப்படிக்கக் காத்துக் கொண்டே இருந்தது. அம்மாவுடனான சமையல் மற்றும் அடுப்படி வேலைகளை முடித்துக் கொண்டு காலை பதினோரு மணிக்கெல்லாம் ரெமிங்க்டனில் உட்கார்ந்தாள் என்றால் பகல் இரண்டுமணி வரை அடித்துக் கொண்டிருப்பாள். அதுதான் ராஜியும் தைக்கும் நேரம். என்ன இருவரும் ஆரம்பிப்பதும் முடிப்பதும் ஒரு அரை மணி நேரம் கால் மணி நேரம் முன்னர் பின்னர் இருக்கும்.

உன் காசு பணமெல்லாம் யாருக்கு வேண்டும். ஒழுங்கு மரியாதையாக என்னோடு புறப்பட்டு வருகிறாயா.. இல்லையேல் நான் ரகுநாத்துக்கு வேறொரு பெண்ணைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்துவிடுவேன். நீ, உன் வாழ்நாளெல்லாம் இப்படி தனியொருத்தியாகவே அல்லாடிக் கொண்டிருக்க வேண்டியது தான். சாக்கிரதை..
என்ன மிரட்டுகிறீர்களா அப்பாஜீ.. தாராளமாக நீங்கள் அவருக்கு இன்னொரு பெண்ணைக் கல்யாணம் கட்டிக் கொடுங்கள். எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. ஆனால் அந்தப் பெண்ணையாவது காசுக்காக அடித்துத் துன்புறுத்தாமல் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். நான் தனித்து வாழ்ந்தாலும் தன்மானத்தோடு வாழ்வேன் அப்பாஜீ. ஒரு நாள் நீங்கள் உங்கள் மகனுடன் வாருங்கள். நான் வீட்டு வேலை பார்க்கும் வக்கீலம்மாவிடம் இது குறித்துப் பேசுவோம். பரஸ்பரம் பேசி முடித்து பிரிந்துவிட்டால் ஒருவருக்கும் பிரசச்சினை இல்லை பாருங்கள். இப்போது நீங்கள் போய் வாருங்கள்.

ஒரு பதின் வயது பையனுக்கு அவன் அம்மாவைத் தவிர வேறு எந்தவொரு பெண்ணும் ஆதர்சமாய் இருந்துவிட முடியாது. ஆனால் நான் அந்த வயதில் இருந்த பொழுது எனக்கு ஆதர்சமாய் மட்டுமல்லாது ஆச்சர்யமான ஒரு பெண்ணாகவும் இருந்தவள் வசந்தியக்காள். வசந்தியக்காளுக்கு நானோ, எனக்கு வசந்தியக்காளோ இரத்த சம்பந்தப்பட்ட உறவில்லை என்றாலும் அவளுடனான என் உறவு இரத்தத்தை விட அடர்த்தியானது.