சந்நதம் - வாசகர் விமர்சனம்
- Suresh Barathan
- Dec 23, 2023
- 3 min read
தலைப்பு - சிறுகதைத் தொகுப்பு
நூல் - சந்நதம்
ஆசிரியர் - சுரேஷ் பரதன்
சுவடு பதிப்பகம்
முதல் பதிப்பு - டிசம்பர் 2022
நெல்லை வாசிப்புச் சுற்றுலாவில் அறிமுகம் ஆன தோழியர் ப்ரீத்தி செல்வின், எனக்குப் பரிசளித்த புத்தகம் - சந்நதம்.
பன்னிரண்டு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு .
1."புன்னகையைத் தொலைத்தவள்" கதையின் நாயகி பாரதி புகைப்படத்தில் கூட புன்னகைப்பதில்லை. கிளி ஜோசியக்காரனிடம் மாட்டிக் கொண்ட கிளி, ஒன்றிரண்டு நெல்மணிகளை மட்டுமே தின்று, வெட்டப்பட்ட தன் சிறகுகள் முளைக்கும் என்ற நம்பிக்கையில் தன் உயிரைக் காத்திருக்கும். கூண்டிற்கு வெளியே கூரிய நகங்களும் பற்களும் கொண்ட பூனை அதைக் கொல்ல காத்திருக்கும். பாரதியால் அந்தக் கிளியைக் காப்பாற்ற முடியவில்லை. பிடித்தமான நண்பனான பூவரச மரத்தையும் காப்பாற்ற முடியவில்லை. பின்னர், மிட்டாய் கடைக்காரரின் மனநிலை சரியில்லாத தங்கை கங்கம்மா - அவளை சாக்லேட் கொடுத்து அழைத்துப் போகும் அந்த விடலைப் பையன்- அந்தக் கிளி ஒவ்வொரு சீட்டாக எடுத்துப் போடுவது போல , தன் உடைகளைக் களைந்து நிற்கும் ,கங்கம்மா. அவளை பாரதியால் காப்பாற்ற முடிந்ததா? மனதில் எரியும் கோபத்தீயை என்ன செய்வது? எப்படி புன்னகைப்பது?
2. ரோஜாத் தோட்டம் :-
அறுபது ஆண்டுகளுக்கு முன்பு "சாரதா "என்றொரு திரைப்படம் வந்தது. மண வாழ்க்கைக்கான தகுதியை இழந்த அந்தக் கணவன், தன் மனைவி சாரதாவுக்கு மறுமணம் செய்ய முயற்சிப்பான். இறுதியில் மணக் கோலத்தில் சாரதா இறந்து விடுவாள்.அறுபது ஆண்டுகள் கழிந்தாலும் பெண்களின் நிலை மாறவில்லை. இந்தக் கதையில், மணவாழ்க்கை வாழ முடியாத பரமு அண்ணன், சாரதா மதனியை அம்மாவுக்காக திருமணம் செய்தது மிகப் பெரிய தவறு . அதற்குப் பிறகு அவள் எப்படி வேண்டுமானாலும் வாழட்டும் என்று அனுமதி கொடுக்க இவன் யார்? வாழ்ந்து முடித்தவர்களுக்காக, வாழப் போகிறவர்களின் வாழ்வை பணயம் வைக்கக் கூடாது. யாருக்குத் தெரியும். இன்று நாளிதழில் படிக்கும் " மனைவி காதலனுடன் ஓட்டம்" என்ற செய்திகளின் பின்னால் பரமு அண்ணன் போல ஒரு கணவன் இருப்பானோ? இந்த சாரதா போல் வாழ்ந்து விட்டால் தியாகி என்று கும்பிடுவார்கள். அவள் வேறு வாழ்க்கை தேடிப் போனால் வேசி என்று இகழ்வார்கள் . இரண்டுக்கும் இடையில் பெண்ணை ஒரு உயிராகப் பார்ப்பது எப்போது? இது மாறி நடந்திருந்தால் அந்தப் பரமு அண்ணன் வேறு திருமணம் செய்திருப்பான் தானே? சாரதாவின் நிலைக்கு யார் காரணம்?
3.ஒரு வாய் சோறு :- ஆண் மையக் கதை. சீத்தா ராமன் மேல் பரிதாபம் வருகிறது. " பொழுதன்னைக்கும் திட்டிக்கொண்டே போடுற சோத்திலே எங்கன இருந்து ருசியைத் தேட?" பணத்தை வைத்து மட்டுமே கணவனை மதிக்கும் லட்சமியைப் போலவும் அறிவுரை மட்டுமே சொல்லும் சுந்தரம் மாமா போலவும் நிறைய பேர் இருக்கிறார்கள் . மீனாள் மாதிரி பெண்களைத்தான் தேட வேண்டி இருக்கிறது.
4. அப்பாவின் காதல் கதை:-
இராமலிங்கம் - ஜெயஸ்ரீ யின் நிறைவேறாத காதல் கதை இராமலிங்கத்தின் மகள் பார்வையில் விரிகிறது. ஜெயஸ்ரீ வாழ்ந்த வீடு என்பதால் இராமலிங்கம் சொந்த ஊரில் ஜெயஸ்ரீ பெயரில் வீடு வாங்குகிறார் .பின்னே, இராமலிங்கத்தின் மகளின் பெயர் ஜெயஸ்ரீயாகத்தானே இருக்க முடியும். " அப்பாவிற்கு எது வாங்கினாலும் என் பெயரில்தான் வாங்க வேண்டும்" இதில் பரிதாபத்திற்குரிய பாத்திரம் இராமலிங்கத்தின் மனைவிதான். நிறைவேறாத காதலை காலம் கடந்தும் மனதில் சுமந்து கொண்டு இருப்பவர்களின் வாழ்க்கைத் துணை - பாவம்தான்.
5. பறத்தலும் பறத்தல் நிமித்தமும், கதை ஒரு அமானுஷ்ய உணர்வைத் தருகிறது .
6. மரணம் என்றொரு புள்ளியில் :-
மரணித்த பக்தவத்சலம் பவித்ராவின் வாக்குமூலம். மோசமான தந்தை, ஸ்ட்ரோக்கில் விழுந்த தாய், பள்ளிப் பருவத்திலேயே போதைப் பழக்கம். வேலை கிடைத்ததும் வீட்டை விட்டு வெளியேறி சுதந்திரமான வாழ்க்கை இறுதியில் அவள் மரணத்திற்கு யார் காரணம்? அவள் அப்பாவா ? முன்னாள் கணவன் ராபர்ட் டா? இந்நாள் காதலன் ஹார்வியா? அவள் சேர்த்து வைத்த சொத்தா?
7 செக்மேட் :- பெரிய செஸ் சேம்பியன் ஆகி இருக்க வேண்டிய கோமாவை காலம் பித்தனாக்கி வேடிக்கை பார்த்தது.
8. நிசியிலெழும் பசி:-
சுந்தரேசன் ஒரு சிறிய நகரத்தில், இரவில் பேருந்தில் வந்து இறங்கும் நபர்களுக்கு, தங்கும் அறை ஏற்பாடு செய்து, அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்து தன் வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொள்பவன். ஒரு கால் ஊனமானவன் . அவனை சாப்பிட்டியா? என்று பிரியத்துடன் கேட்கும் ஒரே ஜீவன் செம்பகம். செம்பகம் யார்?
9. சரணாலயம்:- அக்காவின் புருஷன் கேட்ட புலிநகம் தேடி இராஜஸ்தான் பயணமாகும் மாதவனின் கதை.
"முதலில் புல்லட் கேட்டப்போவே செவுட்டில் அறைந்திருந்தால் இப்போது புலி நகம் கேட்டிருப்பானா?இப்போதும் பாதிக்கப் படுவது பெண்தான்.
10 பூரண பொற்கொடி:-
தேவையில்லாத நாலாவது கர்ப்பத்தை கலைக்க நினைக்கும் புவனா ஆறுதல் தேடி பூரண பொற்கொடி அக்காவிடம் வருகிறாள். பூரணாவுக்கு போகாத கோயில் இல்லை பார்க்காத வைத்தியம் இல்லை ஆனாலும் குழந்தை இல்லை. காலம் எல்லார்க்கும், எல்லாமும் கொடுத்து விடுவதில்லை.
"பொம்பளைக்கு எதிரின்னு யாரும் வெளியிலேயிருந்து தனியா வரத் தேவையே இல்லை அவளை பொம்பளைன்னு சொல்ல வைக்கிற அந்த உடம்பு ஒன்னே போதும்.". அருமையான வரிகள்.
11 சந்நதம்:- பெரியம்மாவுக்கு சந்நதம் வந்து விட்டது. வந்திருப்பது யார்? பதிமூன்று வயதில் இறந்து போன ராஜாத்தியக்காள். தன் தந்தையிடம் இனி குடிக்க மாட்டேன் என்று சத்தியம் வாங்கவே ராஜாத்தி சாமியாக வந்திருக்கிறாள் . இறந்த பிறகும் ராஜாத்திக்கு குடும்பத்தைப் பற்றிய கவலைதான்.
12. "வெற்றிடம்" கதையில் ஒரு தலையாய் காதலித்த மாமன் மகள் ரஞ்சுவை பன்னிரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பிரிட்டனில் சந்திக்கிறான் நாயகன். காலம் அப்படியே உறைந்து போகுமா?
இந்தக் கதைகளில் வரும் பாரதி, பக்தவத்சலம் பவித்ரா, சாரதா மதினி, ரஞ்சு, புவனா, பூரணத்தக்காள் , மீனாள் என அனைவரையுமே நாம் எங்காவது சந்தித்திருப்போம். அனைத்துக் கதைகளுமே பெண்களின் பிரச்சினைகளை பேசுகின்றன. அனைத்திலும் ஒரு மெல்லிய சோகம் இழையோடுகிறது.சமூகத்தின் மேல் கோபம் தெரிகிறது. எழுத்தாளர் திருநெல்வேலிக்காரர் என்பதும் எழுத்தில் தெரிகிறது .
எழுத்தாளர் சுரேஷ் பரதன், வெளியிட்ட முதல் கவிதைத் தொகுப்பு "ஊர் நடுவே ஒரு வனதேவதை". " எரிதழல் என்ற கையெழுத்து இதழின் இணை ஆசிரியராகப் பணியாற்றினார். அவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு சுவடு பதிப்பகம் வெளியிட்ட இந்த " சந்நதம்". எழுத்தாளர் மென்மேலும் இதைப் போன்ற அருமையான கதைகளை நமக்குத் தர வாழ்த்துக்கள்.
Comments