இரட்டை விருதுகள் (Two Book Awards)
- Suresh Barathan
- Dec 23, 2023
- 1 min read

சிவகாசியில் இயங்கி வரும் பாரதி இலக்கியச் சங்கம் ஆண்டு தோறும் சிறந்த நாவல், சிறந்த சிறுகதைத் தொகுப்பு, சிறந்த கவிதைத் தொகுப்பு என மூன்று நூல்களுக்கு லட்சுமி அம்மாள் நினைவாக, பரிசுகள் வழங்கி கௌரவித்து வருகிறது.
இந்த ஆண்டின் சிறந்த நாவலாக திரு. வடிவரசு அவர்கள் எழுதிய முறம்பு நாவல் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது . அவருக்கு என் வாழ்த்துகள்.
என்னுடைய "சந்நதம்" சிறுகதைத் தொகுப்பும், என்னுடைய "ஈரூசற்தாண்டவம்" கவிதை தொகுப்பும் 2023ன் சிறந்த சிறுகதை நூலாகவும், சிறந்த கவிதை நூலாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கின்றன.
இரட்டை மகிழ்ச்சியை கொண்டு வந்து கொடுத்திருக்கின்ற இந்த இரட்டை விருதுகள். (Two Book Awards)

என் எல்லா எழுத்துக்களுக்கும் முதல் வாசகர் தலைவி தான். அவர் நல்லாருக்கு நல்லால்லை என
ஒற்றை வார்த்தையில் தான் சொல்வாரெனினும், அவர் வாசிக்கும் போது அவருடைய முகத்தையே பார்த்துக் கொண்டேயிருப்பேன். அவர் முகம் காட்டும் பாவங்களிலிருந்தே அது எத்தனை நன்றாக இருக்கிறது எத்தனை நன்றாக இல்லை என என்னால் முழுவதுமாகப் புரிந்து கொள்ள முடியும். எனவே என்னுடைய முதல் நன்றி அவருக்கு.
இரண்டாவதாக நான் நன்றி சொல்ல நினைப்பது இவ்விரு புத்தகங்களின் பதிப்பகத்தாரான சுவடு நல்லுவுக்கும், சுவடு மன்சூருக்கும். என் எழுத்துக்கள் மீது முழு நம்பிக்கை வைத்து,, ஒன்றல்ல இரண்டு புத்தகங்களையும் ஒரு சேர கொண்டு வந்தார்கள். அவர்களுக்கு என் மனங்கனிந்த நன்றி.
மூன்றாவதாக, பாரதி இலக்கியச் சங்கத்துக்கும், என்னுடைய இரண்டு நூல்களைத் தேர்ந்தெடுத்த தேர்வாளர்களுக்கும் என் மனங்கனிந்த நன்றி.
பாரதி இலக்கியச் சங்க செயலர் என் நூற்கள் விருது பெற்ற விவரத்தை அலைபேசியில் அழைத்துச் சொல்லும் போது ஒரு விசயம் சொன்னார். ஒரே ஆசிரியருக்கு எப்படி இரண்டு விருதுகள் என கேள்வி எழுந்ததெனவும், அதற்கு மறு மொழியாக, இரண்டு புத்தகங்களையும் இரண்டு வெவ்வேறு தேர்வுக் குழுக்கள் தானே தேர்வு பண்ணியிருக்கின்றன. அதனால் அது சரிதான் எனவும் பதில் சொன்னதாகச் சொன்னார். கேட்கவே அவ்வளவு சந்தோசமாக இருந்தது. அவருக்கும் என் மனங்கனிந்த நன்றி.
எத்தனையோ பேர் என்னுடைய சந்நதம் புத்தகத்தை வாசித்ததாகச் சொன்னார்கள். அதற்குச் சாட்சியாக இருப்பது, நுழைபுலம் இணையக் கூட்டமும், இரவு பத்தரை மணிக்கு பதிப்பகத்தார் மூலம் வந்த தொலைபேசி அழைப்பும், சென்னை மீட் அரங்கத்தில் நடந்த கூட்டமும். அத்தனை பேரும் என் சிறுகதைகளை, அவ்வளவு சிலாகித்துப் பேசினார்கள்.
புத்தகத்தை வாசித்த அத்தனை வாசகர்களுக்கும் என் சிரந்தாழ்ந்த வணக்கங்களும் நன்றியும்.
Comments