சூன்யத்தின் கைதிகள்
- Suresh Barathan
- Feb 21, 2023
- 1 min read
எதிரே வந்தவளிடமிருந்த கண நேர கவனத்தை, அவள் ஏந்தி வந்த தண்ணீர்க் குடத்தை நோக்கி திருப்பினேன்.
நீரின் சின்னத் தளும்பல் கூட இல்லாது அவளது மடக்கிய கைக்குள் ஒரு செல்லக் குழந்தை போல அமர்ந்திருந்தது குடம்.

அவள் சுமந்த விதமா, அல்லது குடம் அமர்ந்த இடமா.. எதனுடைய சாமர்த்தியத்தில் குடம் தளும்பாமல் இருக்கிறதென்ற கேள்வி கண்களில் மின்னியதை இலகுவாய்ப் புரிந்து கொண்டாள் போலும் சொன்னாள்.
உன்னைப் போல இது ஒன்றும் அரை குடமில்லை. என்னைப் போன்றதொரு நிறை குடம்.
நீரைக் கொண்டு குடத்தை நிரப்பினாய்.. சரி. எதைக் கொண்டு உன்னை நிரப்பினாய் என்று கேட்க..,
அழகென்று நீ நினைத்தால்.. நான் அழகால் நிரம்பியவளாகிறேன்.
அறிவென நீ நினைத்தால் நான் அறிவால் நிரம்பியவளகிறேன்.
பெண்மையென நீ நினைத்தால் நான் பெண்மையால் நிரம்பியவளகிறேன்.
மொத்தத்தில் நான் உன் எண்ணங்களால் நிரம்பியவள்.
என் எண்ணங்களால் நிரம்பியவளென்றால் நீ என் எதிரில் நிற்பது எப்படிச் சாத்தியம்..
கண்களை மூடிக் கொண்டு கேள்விகளை கேட்கிறாய் நீ. திறந்து சுற்றிலும் பார்.
நீயும் நானும் சூன்யத்தின் கைதிகள்.
நான் கண்களைத் திறக்கவேயில்லை.
Comments