top of page

எழுத்தாளர் இமையம் அவர்களின் செல்லாத பணம் நூல் அறிமுகம்.

தில்லி தமிழ்ச் சங்கத்தில் நிகழ்த்திய உரை – 19-09-2021

தன் அருள் எனும் மொழியால் நம் எல்லாரையும் இங்கே ஒருங்கிணைத்திருக்கும் நம் தமிழ்த் தாய்க்கு என் முதல் வணக்கம்.


தமிழின் பெயரால் தமிழர்களின் பெயரால் இப்படி ஒரு நல்லதொரு இலக்கிய கூட்டத்தினை இன்று மட்டுமல்ல ஆண்டுகள் பலவாக நடத்திக் கொண்டிருக்கும் தில்லி தமிழ்ச் சங்கத்துக்கும் என் பணிவான வணக்கங்கள்.


தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு வீ ரெங்கநாதன் அவர்களுக்கும், துணைத் தலைவர் திரு. குரு மூர்த்தி அவர்களுக்கும், பொதுச் செயலாளர் திரு கண்ணன் அவர்களுக்கும், இவ்விழாவின் நாயகரான திரு இமையம் அவர்களுக்கும், சிறப்பு விருந்தாளராக வந்திருக்கும் எழுத்தாளர், இந்திய அரசின் வெளியுறவுத் துறை இணைச் செயலாளர் திரு ஸ்றீதரன் மதுசூதனன் அவர்களுக்கும், திரு இமையம் அவர்களை வாழ்த்திப் பேச வந்திருக்கும் தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் திரு. அறவேந்தன் அவர்களுக்கும், தன் தொடர் இலக்கிய செயல்பாடுகளால் எனக்கு பல ஆச்சர்யங்களை, விவரங்களை தருபவராக நான் என்றென்றைக்கும் மதிக்கும், மூத்த பத்திரிக்கையாளரான திரு யதார்த்தா பென்னேஸ்வரன் அவர்களுக்கும், மற்றும் எப்போதும் எந்த சூழ்நிலையில் தில்லி தமிழ்ச் சங்கம் கூட்டம் நடத்தினாலும் தவறாது கலந்து கொண்டு கூட்டத்தைச் சிறப்பிக்கும் உங்கள் அனைவருக்கும் என் பணிவான மாலை வணக்கங்கள்.


தில்லித் தமிழ்ச் சங்கத்தின் இந்த இனிய விழாவில் திரு இமையம் அவர்களின் செல்லாத பணம் நூலை உங்களுக்கு அறிமுகம் செய்து பேசுவதில் மட்டற்ற மகிழ்ச்சிக்குரியவனாக இங்கே நான் நிற்கிறேன்.

தான் வசிக்கும் வட தமிழ்நாட்டு வட்டார மொழியில் தன் படைப்புகளை எழுதும் திரு இமையம் அவர்கள், அவ்வட்டார மக்கள் பிரச்சினைகளை மட்டுமே எழுதாமல், ஒட்டு மொத்தத் தமிழ்ச் சமுகத்தின் பிரச்சினைகளை, தமிழ் சமூக மக்களின் உளவியலை தன் படைப்புகளின் வழி எழுதுபவர். ஒரு பயிலரங்கில் இமையம் அவர்கள் “எனது கதைகளை நான் எழுதவில்லை. இந்தச் சமூகம் தான் என் மூலமாக தன் கதைகளை எழுதிக் கொண்டிருக்கிறது” என்று சொன்னது போல, அவரது அத்தனைப் படைப்புகளும் தமிழ்ச் சமுக மக்களின் கதைகளே.


திரு இமையம் அவர்களின் ஒரு சிறுகதையையோ, ஒரு நெடுங்கதையையோ, அல்லது ஒரு நாவலையோ நீங்கள் வாசிக்கிறீர்கள் என்றால், உங்களுக்கு நீங்களே, நாம் இப்போது வாசிப்பது ஒரு புனைவே, ஒரு புனை கதை மட்டுமே என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே வாசிக்க வேண்டும். இல்லையென்றால் அவருடைய எழுத்தின் வீச்சும் அவர் கதை சொல்லும் விதமும் உங்களுக்கு உங்கள் முன் ஒரு வாழ்க்கை கண்முன்னால் காட்சிகளாக தெரியும் வண்ணம் நீங்களும் அந்த வாழ்க்கையின் ஒரு அங்கமாக வாழும் வண்ணம் அக்கதை மாந்தர்களில் ஒருவர் அழும் போது நீங்களும் அழுது, ஒரு கதை மாந்தர் சிரிக்கும் போது நீங்களும் சிரித்து என ஒரு உணர்ச்சிக் குவியலாக உங்களை நீங்கள் உணர முடியும். “உங்களை எந்த எழுத்து அழ வைக்கிறதோ, உங்களை எந்த எழுத்து சிரிக்க வைக்கிறதோ, உங்களை எந்த எழுத்து “அய்யோ” என அடுத்தவரின் துக்கம் கண்டு இரங்க வைக்கிறதோ, எந்த எழுத்து உங்களை மனிதனாக உணர வைக்கிறதோ அந்த எழுத்து தானே இலக்கியம்” என்று அவர் சொல்கிறாரே, அது போல அவரது எழுத்துகள் உங்களை என்னை ஒரு உயிருள்ள மனிதனாக ஆக்கிவைக்கிற எழுத்து. அப்படி ஒரு உணர்ச்சி பூர்வமான எழுத்தில் சொல்லப்பட்ட கதை தான் செல்லாத பணம் எனும் இந்த நாவலும்.

ஒரு வாசகன் எந்த ஒரு படைப்பையும் ஒரு ப்ரீ-ஜட்ஜுமென்டல் மன நிலையில் அணுகுவானே ஆனால் அது அந்த படைப்புக்கு அவன் செய்யும் மிகப்பெரும் துரோகம்.


ஏற்கனவே நான் வாசித்திருந்த கோவேறு கழுதைகள், சாவுச் சோறு, கொலைச் சேவல், எங்கதெ, பெத்தவன் போன்ற இமையம் அவர்களின் படைப்புகள் எனக்குள் ஏற்படுத்தியிருந்த தாக்கங்கள் ஏராளமானவை. நான் அவற்றையெல்லாம் அவிழ்த்தெறிந்து விட்டு ஒரு நிர்வாண மன நிலையில் தான் நான் செல்லாத பணம் நாவலை வாசிக்க ஆரம்பித்திருந்தேன்.


செல்லாத பணம் ரேவதி என்ற ஒரு பெண்ணின் கதை.


இது ரேவதியின் கதை மட்டுமல்ல.. அவளைப் பெற்ற அம்மா அமராவதியின் கதை. அவளுடைய தந்தை நடேசனின் கதை. அவளுடன் பிறந்த அண்ணன் முருகனின் கதை. அவள் காதலித்து மணமுடித்த ரவியின் கதை. அவள் தீக்குளித்த கதை. அவள் தீக்காயங்களுக்காக சிகிச்சை பெற்று வந்த ஜிப்மர் ஆஸ்பத்திரியின் கதை. அங்கே தீவிர சிகிச்சை பிரிவில் பணிபுரிந்த நர்சுகளின் கதை. செக்யூரிட்டியின் கதை. ரேவதியுடன் சிகிச்சைப் பெற்றுக் கொண்டிருந்த மற்ற பதினேழு பெண்களின் கதை. அந்த பதினேழு பெண்களுக்காக வந்திருந்து அட்டெண்டர்களாக பாஸ் வைத்திருந்தவர்களின் கதை. வாக்குமூலம் வாங்க வந்த ஏட்டய்யா கணேசனின் கதை. ஏட்டு கணேசனுடன் வந்திருந்த உதவிக் காவலர் ஆனந்தகுமாரின் கதை. இது என்னுடைய கதை. உங்களுடைய கதை.


இந்த செல்லாத பணம் நாவ


லை நான்கு பகுதிகளாகப் பிரித்து எழுதியிருக்கிறார் இமையம் அவர்கள்.


பகுதி - 1



ரவியுடனான ரேவதியின் காதல் அவளின் பெற்றோருக்கு தெரிந்த தினத்தில் துவங்குகிறது நாவல். ரேவதியின் அம்மா அமராவதியும் சரி, ரேவதியின் அண்ணன் முருகனின் காதலியும் ரேவதியின் கல்லூரித் தோழியுமான அருண்மொழியும் சரி அவளை அந்தக் காதலை கைவிடுமாறு கூறுகிறார்கள். படிக்காமல் ஆட்டோ ஓட்டிக்கொண்டு ஊரெல்லாம் சண்டையிட்டு திரியும் ஒரு ரவுடியை யாரவது காதலிப்பார்களா என்று கேட்கிறார்கள். அருண்மொழி ரேவதியிடம் ரவியை உனக்கு ஏன் பிடித்திருக்கிறதென்பதற்கு ஒரு உருப்படியான காரணத்தையாவது சொல் என்கிறாள். ரேவதியிடம் அப்படி எந்த ஒரு காரணமும் இல்லை. ஆனாலும் ரேவதி பிடிவாதமாக ரவியையே மணப்பது என்று இருக்கிறாள்.


ரேவதியின் காதல் தெரிந்ததும் அவளிடம் பேசாமலேயே இருந்த அவளது தந்தை நடேசன் இரண்டொரு வாரத்திற்குப் பிறகு மகளை அழைத்து அவளது காதலை ஒரு கெட்ட கனவாக நினைத்து மறந்து விடும் படியும், ரவியின் குடும்பத்தை விட நல்ல குடும்பமாக, ரவியை விட நல்ல பையனாக, படித்த பையனாக, நல்ல உத்தியோகத்தில் இருக்கும் பையனாக, தங்களது சாதியிலேயே உள்ள பையனாக வேறு மாப்பிள்ளை பார்க்கலாம் என்றும் கூறுகிறார். எதற்கும் அசைந்து கொடுப்பவளாய் இல்லை ரேவதி. அவர் அவளுக்காக வேறு மாபிள்ளை பார்க்கும் நேரங்களில் எல்லாம் அவள் தற்கொலைக்கு முயல்கிறாள்.


மெட்ராஸில் டிசிஎஸ்ஸில் வேலை பார்க்கும் முருகன் ரேவதியின் பேச்சை எடுத்தாலே கோபப்படுகிறான். தன் அம்மா அமராவதியிடம் தன் கோவத்தைக் காட்டுபவன் தன் தங்கையிடம் கோபப்படவோ அவளைக் கண்டிக்கவோ இல்லாமல் ஏன் அவளிடம் பேசக் கூட செய்யாமல் இருந்து விடுகிறான்.

கதையின் முதல் பகுதி இங்கே முடிகிறது.


பகுதி - 2

ரேவதி தீக்குளித்துவிட்டாள் என்ற தொலைபேசிச் செய்தியுடன் துவங்குகிறது இரண்டாம் பகுதி. ஆசை ஆசையாய் வளர்த்த ரேவதி இப்படி தீக்குளித்து விட்டாள் என்ற செய்தியை கேட்ட அமராவதியும் நடேசனும் துடியாய்த் துடிக்கிறார்கள். அமராவதியும் நடேசனும் ரேவதியை சேர்த்திருக்கும் ஜிப்மர் மருத்துவமனைக்கு வருகிறார்கள். அதற்குள் அவளுடைய தீக்காயங்களுக்கு கட்டுப் போட்டு ஐஸீயூவிற்கு உள்ளே அனுப்பிவிட்டர்கள்.



எந்த ஆஸ்பத்திரியும் ஐஸீயூவுக்கு உள்ளே இருக்கும் பேஷண்ட்டுகளை பார்க்க யாரையுமே விடுவதில்லை. அதிலும் ஃப்யர் வார்டு ஐஸீயூவில் இன்னும் கெடுபுடிகள் அதிகம். அமராவதியும் நடேசனும் அன்றைக்கு பூராவும் பாக்கவே ரேவதியை முடியவில்லை. வீட்டில் சமைக்கிறவங்களுக்கு சின்னதாக கடுகு வெடித்து எண்ணெய் தெறித்துவிட்டால் கூட நாம் எவ்வளவு துடித்து விடுகிறோம். அவர்களுடைய கையைப் பாத்து எவ்ளோ பெரிசுக்கு எண்ணெய் பட்டுருக்கு பர்னால் போடலாமா அப்படின்னு எல்லாம் பார்த்தப் பின்னாடி தான் நமக்குப் பதட்டம் தணிகிறது. உடல் பூராவும் எண்ணெயை ஊற்றி எரிந்து போன தங்கள் பெண்ணை பார்க்க முடியவில்லையேயெனப் பதறுகிறார்கள். எவ்ளோ காயமோ. முகத்துல காயம் பட்டிருக்கக்கூடாதே. ஆறுமோ ஆறாதோ. அய்யோக் கடவுளே என் பொண்ணு பொழைச்சு வந்திறனுமே என்று துடியா துடிக்கிறார்கள். அவர்கள் துடிப்பெல்லாம் பதற்றமெல்லாம் ரவியின் மீது கோபமாய் மாறுகிறது.


ஏண்டா எம்பொண்ணைக் கொளுத்தின தெருப் பொறுக்கி நாயே என்று ரவியைத் திட்டுகிறாள் அமராவதி. நடேசனுக்கோ ரவியை அப்பவே வெட்டிக் கொன்று போட்டுவிட வேண்டும் என்று ஆத்திரமாக வருகிறது. தகவல் தெரிந்து ரேவதியின் அண்ணன் முருகன் அவன் மனைவி அருண்மொழி எல்லாரும் வருகிறார்கள். எல்லாருக்கும் ரவி மீது ஆத்திரமும் கோவமும் வருகிறது.

அதற்குள் இரவாகிவிடுவதால், பார்வையாளர்கள் நேரம் முடிந்து எல்லாரையும் வெளியே போகச் சொல்கிறார்கள். அட்டெண்டர் பாஸ் வைத்திருப்பவர்களை மட்டும் தங்க அனுமதிக்கிறார்கள். அது பெண்களுக்கான ஃப்யர் வார்டு என்பதால் அமராவதி மட்டும் தங்குகிறாள். அவள் இரவெல்லாம் ரேவதியை ஒரு முறையாவது பார்த்து விட மாட்டோமா என ஒவ்வொரு முயற்சியாக எடுக்கிறாள். எந்த முயற்சியும் பலன் தரவில்லை.


அங்கே அவளை மாதிரி, மலர் எனும் இன்னொரு அம்மாவிடம் பேசுகிறாள் அமராவதி. மலர் கேட்கும் கேள்விகளுக்கு அமராவதி சொல்லும் பதில்களாக ரேவதிக்கும் ரவிக்கும் கல்யாணமான கதை நமக்கும் சொல்லப்படுகிறது. “அம்மா அப்பா அண்ணன் சொந்தம் சாதி எல்லாம் வேண்டாம்ன்னு போற. இனிமே இங்கே வரக்கூடாது. எங்களையெல்லாம் பாக்கக் கூடாது” ன்னு சொல்லி ரேவதி ரவியின் கல்யாணத்தை நடேசன் நடத்தி வைத்தது, கல்யாணத்துக்குப் பிறகு ரவி ரேவதியை சந்தேகப் பட்டு வேலைக்கு அனுப்பாதது, ரேவதிக்கு கல்யாணம் ஆகி ஆறு வருடங்கள் ஆகிப்போனது, அந்த ஆறு வருடங்களில் ஒரு தரம் கூட நடேசனும், முருகனும் ரேவதியை பார்க்கப் போகாமலேயே இருந்தது, ரேவதி இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகி இருப்பது, ரேதியின் குடும்பச் செலவுகளுக்கு, ரவியின் ஆட்டோவுக்கு ட்யூ கட்ட என அவ்வப்போது பல முறை அமராவதி பணம் கொடுத்தது என எல்லாமே நமக்குத் தெரிய வருகிறது.


அதேபோல அடுத்த நாள் பகலில் இன்னொரு அட்டெண்டரான தங்கம்மாளிடம் அமராவதி பேசும் போது ரவி குடித்துவிட்டு வரும் நாளெல்லாம் ரேவதியை நாயடி பேயடி அடித்தது, அடி தங்காமல் ரேவதி நடு ரோட்டில் மயக்கம் போட்டு விழுந்து கிடந்தது, சில நாட்களில் ரவிக்குப் பயந்து அக்கம் பக்கத்து வீடுகளில் ரேவதி ஒளிந்திருந்தது என எல்லாம் சொல்லும் போது நம்மைப் போலவே நடேசனும் முருகேசனும் புதிதாய் கேட்கிறார்கள்.


காலையில் டாக்டரை சந்திக்கும் நடேசன் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என் மகளைக் காப்பாற்றுங்கள். லெட்ச லெட்சமாக பணம் கையில் உள்ள பையில் வைத்திருக்கிறேன். என் மகள் எனக்கு உயிரோடு வேண்டும் என்கிறார்.


பணம் செல்லாத இடங்கள் என்று சில இடங்கள் சில சமயங்கள் இருக்கின்றன. இந்த நேரம் உங்கள் கையில் கோடானு கோடி ரூபாய் பணம் இருந்தாலும் அது செல்லாத பணமே என்று டாக்டர் அமைதியாக சொல்கிறார்.


இதற்கிடையில் நடேசனை, முருகனை, அருண்மொழியை பார்ப்பவர்கள் ரேவதியின் நிலமைக்காக வருத்தப் படுபவர்கள் எல்லாருமே ரவியின் மீது போலீஸ் கேஸ் கொடுக்கச் சொல்கிறார்கள். ரவியை வரதட்சிணை கொடுமை கேஸில் ஜெயிலில் தள்ளுங்கள் என்று சொல்கிறார்கள். இவர்களுக்கும் அதைத் தான் செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது. ரேவதி தீக்காயங்களுடன் வந்திருப்பதால் அது ஏற்கனவே கெவர்மெண்ட் கேஸாக பதிவாகி விடுகிறது.


விசாரிக்க வருகிற ஹெட் கான்ஸ்டபிள் கணேசனும், அவருக்கு துணையாக வரும் ஆனந்தகுமாரும் “பொண்ணு பொழைச்சிரும்ன்னா கேஸ் போடாதீங்க. செத்துரும்ன்னா கேஸ் போடாம விட்டுறாதீங்க. கேஸ் நிக்கனும்ன்னா, ரவியைத் தூக்கி உள்ளே போடனும்ன்னா நீங்க யார் கொடுக்குற வாக்குமூலமும் செல்லாது. அந்தப் பொண்ணு நீங்க சொல்ற மாதிரியே சொல்லனும். எங்க கிட்ட சொன்னா மாதிரியே ஜட்ஜ் வருவாரு அவர்கிட்டேயும் சொல்லனும். அப்பதான் முடியும்” என்று சொல்கிறார்கள்.


“ரேவதி நாங்க சொல்றா மாதிரி தான் சொல்லுவா. அவங்கூட அவ அவ்ளோ கஷ்டப்பட்டிருக்கா” என இவர்கள் மூவரும் சொல்லுகிறார்கள்.


பகுதி-3


ரேவதி வாக்கு மூலம் கொடுத்துவிட்டாள்.. ஆனால் இவர்கள் எதிர்பார்த்த மாதிரி இல்லை. தானா தற்செயலா நடந்த விபத்து என்று சொல்லிவிட்டாள்.


ரேவதி நம்மளையெல்லாம் திரும்பயும் ஏமாத்திட்டா ன்னு எல்லாரும் ரொம்ப வருத்தப்படுகிறார்கள். சாகும் நிலைமையிலும் அவள் ரவியின் பக்கமாய் நிற்பதை இவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. “அவ செத்தாத்தான் நம்மளை நிம்மதியா இருக்க விடுவா போல” என்று புலம்புகிறார்கள். ரவியை மேலும் வெறுக்கிறார்கள். அவன் இவர்களிடம் பேச வரும் போதெல்லாம் அவனை வெரட்டுகிறார்கள்.


ஒரு கட்டத்தில் அருண்மொழி மட்டும் அவனிடம் பேசுகிறாள்.


நீங்கள் எல்லாரும் ரேவதியை ஒதுக்கிவிட்டீர்கள். அதனால் தான் அவள் தீக்குளித்தாள். நீங்கள் அவளை ஒரு ஆட்டோக் காரன் பொண்டாட்டியாகப் பார்த்தீர்கள். அதனால் தான் அவள் தீக்குளித்தாள். நீங்கள் படித்தவர்கள். ஆனால் படித்தவர்களைப் போல் நடந்து கொள்ளவில்லை. அதனால் தான் அவள் தீக்குளித்தாள். நீங்கள் அவளுக்கு கொஞம் கொஞ்சமாக பணம் தந்தீர்கள். மொத்தமாய் கொடுத்து அவள் வாழ்க்கையையும் உயர்த்தியிருக்க முடியும். ஆனால் நீங்கள் அதைச் செய்யவில்லை. என்னை உங்களில் ஒருத்தனாய் நீங்கள் ஏற்கவே


இல்லை. அதனால் தான் அவள் தீக்குளித்தாள். இனி அவளுக்கு உங்களிடமிருந்து விடுதலை. உங்கள் புறக்கணிப்பிலிருந்து விடுதலை. உங்கள் கர்வங்களிலிருந்து விடுதலை. உங்களிடம் கையேந்தி நிறப்திலிருந்து விடுதலை. என்றெல்லாம் ரவி சொல்கிறான். அருண்மொழிக்கு அப்போது தான் தன் காதலை ஏன் அமராவதியும் நடேசனும் ஏற்றுக் கொண்டார்கள் என்பது புரிவது போல இருந்தது.


பகுதி-4


நடேசனின் வீடு விருத்தாச்சலத்தில் இருப்பதால் தினப்படி அவர் இரவானதும் தன் வீட்டுக்கு வந்து விடுகிறார். நாலாவது நாள் காலையில அவருக்கு முருகன் போன் செய்து ரேவதி செத்துப் போய் விட்டாள் என்று சொல்கிறான். தான் எதிர்பார்த்தது நடந்தாற்போல முடிஞ்சிருச்சா தம்பின்னு கேட்கிறார். அந்தச் செய்தியைக் கேட்டபோது அவரிடம் அழுகையில்லை. தன் ஒட்டு மொத்த அழுகையை எல்லாம் கடந்த மூன்று நாட்களில் அவர் அழுது தீர்த்துவிட்டார்.


போலீஸை கூட்டிக்கொண்டு வந்தால் மட்டும் தான் பாடியை வாங்க முடியும் என்று போலீஸ் ஸ்டேசன் போகிறார். போலீஸ் ஸ்டெசனில் அவரடமே ஒரு கொயர் பேப்பர் வாங்கிவரச் சொல்வது, கார்பன் பேப்பர்கள் வாங்கச் சொல்வது, ஐயாயிரம் ரூபாய் வாங்கி கொள்வது, அதன் பின்பும் அவரைக் காத்திருக்கச் சொல்வது, நகரச் செயலாளராக இருக்கும் நடேசனிடம் படித்த இரண்டு மாணவர்கள் வந்தவுடனே அவங்களுக்காக இவரது வேலைகளைச் செய்வது என அங்கே நடக்கும் சம்பவமெல்லாம் வெகு எதார்த்தம்.


கடைசியில் மார்ச்சுவரியில ரேவதியின் பாடியை வாங்கி அதையும் ரவிகிட்டேயேக் கொடுத்து விடுகிறார்கள். அப்போது அங்கே ஒரு ஆம்புலன்ஸில் இன்னோரு பெண் தீக்குளீத்த காயங்களுடன் ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு வரும்போது கதை முடிகிறது.


இந்த நாவலை வாசிக்கும் போதும் சரி, வாசித்து முடித்த போதும் சரி, இதை உங்களுக்கு எப்படி அறிமுகப் படுத்துவது என்பதைப் பற்றி வெகு நேரம் யோசித்த


வண்ணம் இருந்தேன். நானிருந்த மன நிலையை எப்படிச் சொல்லுவது. கடந்த வாரம் முழுவதும் நான் ஒரு வித பித்து நிலையில் தான் உலவிக் கொண்டிருந்தேன். நான் என்னை இதிலுள்ள அத்தனைக் கதாப் பாத்திரங்களாகவும் உணர்ந்தேன்.


ஒரு மகளைப் பெற்றவனாக, என் மகள் மீது எப்போதுமே ஒரு பொஸஸிவ்நெஸ்ஸுடன் இருப்பவனாக இருப்பதால் நான் ஒரு நடேசனாகவும், அமராவதியாகவும் இருக்கிறேன். ஒரு தங்கையின் அண்ணனாக முருகனாகவும் இருக்கிறேன். ஒரு கணவனாக ரவியாகவும் உணர்கிறேன். இதையெல்லாம் தாண்டி, முழுக்க முழுக்க ரேவதியாக அவளது தீப்புண்களின் எரிச்சலை நான் இன்னமும் சுமந்து திரிகிறேன். அவள் மீது எரிந்த தீ என் மீது இன்னமும் எரிந்து கொண்டு


தான் இருக்கிறது. என்னைச் சுற்றி அவள் மீது எரிந்த தீயின் வெப்பமும் அந்த தீ என்னைக் கருக்கும் வாசமும் வீசிக் கொண்டே இருக்கிறது.


ரேவதி. ஒரு பெண்ணின் மன வலிமைக்கு முன் மற்ற எதுவுமே ஒன்றுமே இல்லை என்பதை ரேவதி தன் ஒவ்வொரு செயலிலும் கதை முழுக்க நிறுவிக் கொண்டே இருக்கிறாள். தன் பெற்றோரிடம் ரவியைத் தான் திருமணம் முடிப்பேன் என்று பிடிவாதம் பிடிப்பதிலும் சரி, திருமணத்திற்குப் பின்னான நாட்களில் ரவி அவளை அடித்துத் துன்புறுத்திய போதும் சரி, தெருவில் மயங்கி கிடக்கும் நிலைமயை, அவனது அடி உதை தாங்க முடியாத நாட்களில் அடுத்த வீட்டில் ஓளிந்து கொள்ளும் நிலைமையை எல்லாம் சந்தித்திருந்தாலும், தீயில் கருகி தன்னுடல் எண்பத்தொம்பது சதவீதம் எரிந்து கருகிவிட்ட நிலமையிலும் கணவனுக்கெதிராக வாக்குமூலம் தராமல் அது தானாய் நிகழ்ந்த விபத்து என்று சொல்லும் போதும் சரி எத்தனை மன உறுதி இருந்திருக்கும் அந்தப் பெண்ணுக்கு.


தாங்கள் பெற்ற பெண்ணை ஆசை ஆசையாய் வளர்த்த, அவளுக்குப் பிடித்த உணவைச் செய்து தந்த, அவளுக்குப் பிடித்த படிப்பை படிக்க வைத்த, அவளுக்கு பிடித்த எல்லாவற்றையும் வாங்கித் தந்த அமராவதியும் நடேசனும் ஏன் அவளுக்குப் பிடித்த ரவியை மட்டும் ஏற்றுக்கொள்ளவே இல்லை. அங்கே மட்டும் ஏன் சாதி அந்தஸ்து எல்லாம் ஏன் வந்தது. அப்படி பிடிக்க வில்லையென்றாலும் கூட ஏன் ஆறு வருடமாய் அவளை ஒதுக்கியே வைத்திருக்க வேண்டும். ரவி தன் பெண்ணை அடிக்கிறான் உதைக்கிறான் என்று தெரிய வந்த போதெல்லாம் ஒன்றுமே ஏன் செய்யவில்லை. ஏதாகிலும் செய்து பெண்ணைக் காப்பாற்றியிருக்க வேண்டாமா. அப்போதெல்லாம் விட்டுவிட்டு அவள் மொத்தமாய் தீயில் கருகி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும்போது மட்டும் பத்து லெட்சம் ரூபாய் கக்கத்தில் தூக்கிக் கொண்டு அலைந்தால் மட்டும் போதுமா?


அப்படி இருந்தால் உங்கள் கையில் இருக்கும் அந்த பணம் மட்டும் செல்லாத பணமல்ல. உங்கள் படிப்பு கூட செல்லாத படிப்பு தான். உங்கள் அறிவுகூட செல்லாத அறிவு தான். உங்கள் மானம் மரியாதை கூட செலாத ஒன்று தான் என்று ஆணித்தரமாக தன் செல்லாத பணம் நாவல் மூலம் சொல்லியிருக்கிறார் இமையம்.


அவருக்கு என் பணிவான வணக்கங்கள்.


வாய்ப்பளித்த தமிழ்ச் சங்கத்திற்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

CONTACT

Tel: 9810488582| Tel: 7011144631 | sureshbarathan@gmail.com

Sign Up for Stay Connected

Thanks for submitting!

Follow me:

  • Black Facebook Icon
  • Black Twitter Icon

© 2022 by Suresh Barathan

bottom of page