சரணாலயம் சிறுகதை
- Suresh Barathan
- Dec 24, 2023
- 2 min read
என்னுடைய எழுத்துக்கு என்றென்றும் முதல் வாசகராக இருக்கிற தலைவியாரிடம் நான் எழுதிய சரணாலயம் எனும் சிறுகதையைக் வாசிக்கக் காண்பித்த பொழுது ஏன் ஒரு நாவலுக்கான கதையை சிறுகதையாக எழுதி வைத்திருக்கிறாய் என்று தான் கேட்டார். அத்தனை ஸ்பேஸ் இருக்கிற கதை சரணாலயம்.
நான் வசித்த இராஐஸ்தானில் இரண்டு புலிகள் சராணலயம் உண்டு. ஒன்று இரத்தம்போர், இரண்டாவது சரிஸ்கா. இரத்தம்போர் சவாய் மாதோப்போர் மாவட்டத்தில். சரிஸ்கா அல்வரில்.
இந்த இரண்டு சரணாலயங்களின் அருகில் உள்ள கிராமங்களில் புலி நகங்கள், புலிப் பற்கள், புலித்தோல் போன்றவை சம்பந்தப்பட்ட நிழல் வியாபாரங்கள் அதிமுண்டு. அந்நிழல் வியாபாரங்கள் கோடிகளில் நிகழ்பவை. அந்த வியாபாரங்கள் தொடர்பாக பல விஷயங்களைப் பேச எழுத இடமிருந்த சரணாலயம் கதையில் நான் ஓரிரு வாக்கியங்கள் மட்டும் எழுதியிருந்தேன். அதனால் தான் அந்தக் கதை ஒரு நாவலாய் வர வேண்டும் என விரும்பியிருக்கலாம்.
அப்படியான ஒரு நாவலுக்கு நிறைய உழைப்பு தேவை. அவ்வுழைப்பை தர நிறைய கால அவகாசமும் வேண்டும். இவ்விரண்டையும் இப்போது பார்க்கும் பணியிடையே செலவழிப்பது இயலாத காரியம் அதானாலேயே அதனை சிறுகதையாகவே முடித்துக் கொண்டேன்.
அச்சிறுகதையில் நாயகனாக வரும் மதுரைகார மாதவன் நிஐம். அவனைச் சுற்றி நிகழும் சம்பவங்கள் கற்பனை. கதையில் முதன்முதலாக வட இந்தியப் பயணம் மேற்கொள்ளும் மாதவன் சந்திக்கும் சின்னச் சின்ன சவால்கள் எல்லாம் நான் என் இராஜஸ்தான் வாழ்க்கையில் சந்தித்தவை.
கிட்டத்தட்ட புனைவும் அபுனைவும் நெருக்கித்தில் வருமாறு எழுதப்பட்ட சரணாலயம் சிறுகதையை என்னுடைய சந்நதம் தொகுப்பிலும் வாசிக்கலாம். வாசகசாலையின் இணைய தளத்திலும் வாசிக்கலாம்.
கதையில் வரும் சின்னக் கற்பனை பகுதி
//
ஆமடா. ஊரு உலகத்துல வேற ஆம்பிளையே இல்லைன்னு தானே தேடித்தேடி இந்தாளை மாப்பிள்ளையாக்கி எனக்குக் கட்டி வைச்சதோட நிக்காம தலையில வேற தூக்கி வச்சிகிட்டு ஆடினீங்க எல்லாரும். அதான் அந்தாளு இப்ப ஓந்தலைமேலே ஏறி உக்காந்துகிட்டு அதக் கொண்டா இதக் கொண்டாங்கறான்.
அதுக்காக ஒரு வரமுறையில்லையா இப்படித்தான் இல்லீகல் மேட்டரில் எல்லாம் தலைய குடுத்துட்டு நிக்கிறதா. எடுத்துச் சொல்றதுக்கென்ன..
நாஞ்சொல்றதையெல்லாம் அந்தாளு உடனே தன் கோவணத்துல முடிஞ்சுகிடுவாம் பாரு. எடுத்துச் சொல்றதுக்கு. அது கிறுக்கு முத்திப் போய் அலையுது. மொதத்தரம் புல்லட்டுக்கு வந்து நின்னப்பயே செவுளு செவுளா அறைஞ்சு அனுப்பியிருந்தீங்கன்னா இப்ப இங்க வந்து நிக்க விட்டிருக்குமா. வீட்டு மாப்பிள்ளையைக் குலதெய்வமா வச்சுக் கும்பிட்டா இப்படித்தான் ஆடிக்கொரு கொடையும் ஐப்பசிக்கொரு கொடையும் கேக்கும். கேட்டதெல்லாம் சுளுவா கிடைக்கும்ன்னு தெரிஞ்ச ஆம்பிளை பொஞ்சாதியைத் தொரத்தி விடறதையே தொழிலா வச்சுருக்கு.
//
அபுனைவாக ஒரு பகுதி
//
மாதவனுக்கு இன்னும் இந்தியின் நம்பர்கள் அத்துப்படி ஆகவில்லை. இந்த நம்பர்களையெல்லாம் அவன் முன்பே எழுதியிருந்த மூன்று இந்திப் பரீட்சைகளிலும் படித்திருந்தானெனினும் அவன் அவற்றை அடிக்கடி உபயோகப் படுத்தாததினால் அவன் மறந்தே போய்விட்டானென்றே சொல்ல வேண்டும்.
இப்படித்தான் அவன் இந்த ஊருக்கு வந்த முதல் நாள் அவனுக்கு பாத்ரூமிற்கெனத் தனியே ஒரு இரப்பர் செருப்பிருந்தால் நல்லதெனத் தோன்றவே, தெருவோரம் தள்ளு வண்டியில் செருப்புகளை விற்றுக் கொண்டிருந்த ஒருவனிடம் போய் செருப்பு விலை கேட்டான். செருப்பு விற்பவன் அதன் விலையை முதலில் மார்வாரி மொழியில் கூறினான். அதைக் கேட்டு மாதவன் முழித்த முழியிலேயே அவனுக்குப் புரியவில்லை என்று வியாபாரிக்குத் தெரிந்து போயிற்று. உடனே அவ்வியாபாரி இந்தியில் செருப்பின் விலையை பேன்தீஸ் (முப்பத்தைந்து) எனக் கூற, அதுவும் சத்தியமாய் மாதவனுக்குப் புரியவில்லை.
புரியாததை வெளியில் காட்டிக் கொள்ள விரும்பாத மாதவன் செருப்பை முன்னும் பின்னுமாய் மீண்டும் மீண்டும் திருப்பிப் பார்த்துவிட்டு, நீண்ட யோசனைக்குப் பின் ஃபார்ட்டி ஒன்லி என்று ஆங்கிலத்தில் கூறினான்.
வியாபாரி அவனை மேலும் கீழுமாய் ஒரு விநோத ஜந்துவைப் பார்ப்பது போல பார்த்தான். மாதவனுக்கோ அப்படியென்னடா நாம் தப்பாய்க் கூறிவிட்டோமென்றாகிவிட்டது. உடனே வியாபாரி தர்ட்டி ஃபைவ் என்றான். மாதவனுக்கோ அசிங்கம் அசிங்கமாய் போய்விட்டது.
//
Comments