top of page

சுரேஷ் பரதன் எழுத்தில் உருவான சந்நதம் சிறுகதைத் தொகுப்பு குறித்த கோமதி சங்கர் தோழரின் நூல்விமர்சனம்


வெளியீடு : சுவடு பதிப்பகம்

பக்கங்கள் : 108 விலை : 120 ரூபாய்கள்



எங்கள் வீட்டில் கன்னிக்கு வைத்துக் கும்பிடுவது என்று ரொம்ப வருடம் நடத்தி வந்தார்கள்.. பாட்டிக்குப் பெரியம்மா ஒருத்தி திருமணம் முடியும் முன்னே நோய்வாய்ப்பட்டு இறந்ததாகவும் அவளுக்கு சேலை எடுத்து வைத்து படையலிட்டு வருடம் ஒருநாள் வணங்குதல் என்பதும் நடந்து கொண்டிருந்தது.. எனக்குத் திருமணம் ஆனபிறகு, என் பாட்டியும் இறந்த பிறகு அந்த வழக்கம் நின்று போனது.. என் சின்னத் தம்பி லாரி ஓட்டுநராக இருந்தவன், ஒருநாள், என் மனைவியிடம் வந்து 'மதனி, நம்ம வீட்டுக் கன்னி நான் போற இடமெல்லாம் என் கூட வாரா... லாரிக்கு முன்னால வந்து நின்னு பசிக்கிச் சோறு போடுன்னு கேக்கிறா.. அவள நீங்க வச்சுக் கும்புடணும்' என்றான்.. என் மனைவியும் செய்ய ஆரம்பித்து பத்து வருடம் போல கும்பிட்டாள்.. இப்போ செய்வதை நிறுத்தியாச்சு.. இப்போ அவள் என்னானாள்..? ஏன் வரவில்லை..? தெரியாது...


சுரேஷ் பரதன் எழுதியிருக்கும் இந்த சிறுகதைத் தொகுப்பின் தலைப்புக் கதை 'சந்நதம்'. பழைய நினைவுகளைக் கொண்டு வந்து, அந்தக் 'கன்னி' போல நிறுத்தி விட்டது..

நூலின் அட்டைப் படம் அத்தனை சிறந்த வடிவமைப்பு..கதையைக் கண்முன் நிறுத்துகிற ஓவியம்..! மிக நேர்த்தியாக ஆரம்பமாகி அதே நேர்த்தியுடன் முடிகிற கச்சிதமான சிறுகதை.. அடிக்கடி 'சாமி'வந்து விடும் பெரியம்மாவுக்கு.. அன்றும் வந்து விட்டது.. வழக்கமாக அவளுக்கு வரும் 'சாமி' இன்று வரவில்லை என்பது ஆச்சிக்கு தெரிந்து விட்டது. பதிமூன்று வயதில் மஞ்சக் காமாலையால் 20 வருசத்திற்கு முன்னால் இறந்து போன ராஜாத்தி அக்கா வந்து நிற்கிறாள்.. அக்காவை நினைவுப் படுத்தும் உத ட்டுக் கடிப்போடு பெரியம்மாவிடம் இறங்கி இருக்கிறாள்.. தனக்குப் பசிக்கிறது.. பழைய பாவாடை கிழிந்து விட்டது.. 'சிறியதாகி விட்டது' என்று வரிசையாக கேட்கிற பெரிய அக்காவுக்கு தருவதாக வாக்களிக்கிறார்கள்..

வீட்டில் கல்யாணமாகாமல் இருக்கும் ரமணிக்கு விரைவில் கல்யாணம் நடக்கும் என்று வந்திருக்கும் அக்கா வாக்கு தருகிறாள்.. இவள் வந்தவுடன் அழுது கொண்டே வெளியே போய் விட்ட அப்பாவைத் தேடுகிறாள்.. அவரை கதைசொல்லி அழைத்து வந்ததும், 'இனிமேல் ஒம்மேல சத்தியமா குடிக்க மாட்டேன்' என்று அப்பாவிடம் வாக்கு வாங்கிக் கொண்டு ராஜாத்தி அக்கா பெரியம்மாவை விட்டுப் போகிறாள்..

வந்த காரியம் முடிந்து விட்டதா..? வீட்டில் இருக்கும் கடைக்குட்டி பார்வையில் (இறங்கியிருக்கும் அக்காவுக்கு தம்பியா தங்கையா..? ) கதை சொல்லப் படுவதும் அந்தப் பார்வைக்கு இயைந்த வரம்பில் கதையாடல் இருப்பதும் கதாசிரியரின் திறமையை வாசகரிடம் கடத்தி விடுகிறது. பெண்களிடம் தானே பெரும்பாலும் சாமி வருகிறது..! சாமி கேட்பதும் ஆசாமிகளிடத்தில் தானே..! எத்தனை திருகல் முறுகலுடன் வாக்குக் கொடுப்பதும் வாக்கு வாங்குவதும் நடந்து முடிகிறது.. இதே பெரியம்மா 'சாமி'யாகி விட்ட அக்காவாக மாறாமல் கேட்டால் அப்பா வாக்கு கொடுத்திருப்பாரா..? 'சாமி' வந்தால் நல்லது தானோ..!


இந்தத் தலைப்புக் கதை, தொகுப்புக்கு மிக நல்ல தொடக்கத்தை தந்து வாசகரை மிகுந்த எதிர்பார்ப்போடு நூலுக்குள் இழுத்துக் கொண்டு விடுகிறது..

சுரேஷ் பரதனின் கதைகள் எப்போது நடந்திருக்கும்.. சமகாலத்திலா..? பத்திருபது வருடங்கள் முன்னாலா..? எப்போதோ நடந்திருக்கும் என்றும் இப்போதும் நடக்கக்கூடும் என்பதான கதைகளுக்குள் கதாசிரியர் நாசுக்காக காலத்தைச் செருகியிருப்பதை உணர முடிகிறது. 'சந்நதம்' கதை எப்போதோ நடந்திருக்கும்.. 'ஒருவாய்ச் சோறு' எப்போதும் நடக்க முடியும்.. 'ரோஜாத் தோட்டம்' கதையில் சாரதா மதினி அப்போது நடந்து கொண்டதைப் போல எப்போதும் நடந்து கொண்டிருக்க மாட்டாள். அப்படி ஒரு தருணம் அவளோ சரவணனோ எதிர்பார்க்காத நிலையில் வந்து நின்றது. 'மரணம் என்றொரு புள்ளியில்' என்ற கதை மட்டும் பத்தாண்டுகள் முன்னால் நடந்திருக்க வாய்ப்புண்டு.


ஆனால் கதை சொல்லும் பாணியில் பொதுவாகத் தொண்ணுறுகளைத் தான் பார்க்கிறேன்.. திருநெல்வேலிக் காரரான கதைசொல்லியின் கதையாடலில் வட்டார வழக்கு தேவைப் பட்டாலன்றி வரவில்லை.. வாசகனைத் திடுக்கிட வைக்கும் உத்திகள் ஏதுமில்லாமல் கதை தனக்குத் தேவையான உத்தியில் அமைந்து கொண்டிருப்பதை அவதானிக்க முடிந்தது. கதைகள் மத்தியதர வர்க்க குடும்பங்களில் நாம் பார்த்திருக்கும் பெண்களின் கதைகள். கதைகளைப் பெண்களும் சொல்கிறார்கள்.. ஆண்களும் சொல்கிறார்கள்.. ஒன்றிரண்டை கதைசொல்லியே சொல்கிறார்.. ஆனால் கதைகளில் பெண்கள் மையத்தில் இருக்கிறார்கள்.. குடும்பம் என்ற அமைப்பின் வரம்பிற்குள் வருகிற பெண்கள்.. அவர்கள் பேசுகிற சந்தர்ப்பங்களே கதைகளாகி இருப்பது போல பிரமை தட்டுகிறது.


சந்நதம் வந்த பெரியம்மாவுக்கு ரமணியின் கல்யாணம் முக்கியம்.. கொழுந்தன் குடிக்கிறான் என்று கவலை.. அவளிடம் ராஜாத்தியக்காள் கூடு பாய்ந்து பேசுகிறாள்..


'புன்னகையைத் தொலைத்த' பாரதியின் கதையை கதாசிரியர் கேட்க பாரதி சொல்கிறாள்.. ஆனால் பாரதி கங்கம்மாவின் கதையைக் கூறுகிறாள்.. கதையில் ஒருவன் சுவாதீனமற்ற கங்கம்மாவிடம் பாலியல் அத்துமீறலைச் செய்ய முயல்வதை பாரதி தடுக்கிறாள்.. ஆனால் அவனைத் தண்டிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை.. ஏன்.. அப்படியான முயற்சி, கங்கம்மாவின் அண்ணனான மிட்டாய்க் கடைக் காரனுக்கும் அவன் குடும்பத்திற்கும் மேலும் பிரச்சினையைத் தரக்கூடும். அதனால் பாரதி 'புன்னகையைத் தொலைத்தவள்' ஆகிவிட்டாள்.. பேசா மடந்தையாகவும்தான். பாரதி புன்னகையை தொலைத்தததைப் போலவே நாமும் குற்றவாளிகளாகி விடுகிறோம்..


இந்தக் கதை இப்படியே தொடங்காமல் கூண்டில் சிறகு வெட்டப்பட்டுக் கிடக்கும் கிளி பேசாததைச் பாரதி சொல்வதில் தொடங்குகிறது.. கிளி பறந்தால் அல்லவா மகிழ்ச்சியோடு பேசும்..? கல்யாண்ஜியின் புகழ் பெற்ற கவிதை ஒன்று மனதில் வந்து விட்டுப் போனது. பாரதி நட்பு பாராட்டி பேசி மகிழ்ந்த மரம் வெட்டப் பட்டுப் போனதைச் சொல்கிறாள்.. காற்றில் ஆடிக்கொண்டும் மலர்களைச் சிந்தியும் இலைகளை உதிர்த்தும் பாரதியிடம் பேசியிருந்த மரத்தை பாரதி இல்லாத ஒருநாளில் வெட்டிவிட்டார்கள். கதை முடிந்ததும், பாரதியார் படங்களில் அவரும் புன்னகைக்காது இருப்பது மனதில் வந்தது.. அவருக்கு எத்தனை குற்ற உணர்ச்சி இருந்திருக்குமோ..? கதை நாயகியின் பெயரைப் பாரதியாக இல்லாமல் 'கோமதி'யாகவும் வைத்தும் பார்த்துக் கொண்டேன்.


'அப்பாவின் காதல் கதை' என்கிற கதை இந்தத் தொகுப்பில் எனக்குப் பிடித்திருந்தது.. காதல் கைகூடாத காதலனோ காதலியோ காதலை மறந்து விடுவதில்லை.. அல்லது மறக்கலாகாது என்பதற்காக மெனக்கெடுகிறார்கள்.. ஏதேதோ செய்து நினைத்துக் கொள்கிறார்கள். நமக்குத் தெரிந்த பழைய காரைக்கால் அம்மையார் கதையில், தனது மனைவி தெய்வாம்சம் பொருந்தியவள் என்று துறந்து வந்து வேறு வாழ்க்கை தேடிக் கொண்ட கணவன் தன் பெண்ணுக்கு 'புனிதவதி' என்று பெயரிட்டு அந்த நினைவைப் பத்திரப் படுத்திக் கொண்டான் அல்லவா.. அவள் அந்த நினைவை உதறப் பேயாகினாள்.. இருந்தாலும், 'கொங்கை திரங்கி' என்று குமுறலை அடக்க முடியாமல் முதல் பாட்டிலேயே வந்து விட்டது அல்லவா..? இந்தக் கதையில் வரும் அப்பா தன் மகளுக்கு தன் காதலியின் பெயரை வைத்துச் சீராட்டுகிறார்..பாராட்டுகிறார்.. கதை சொல்லும் அழகு..கோர்வை..ரசனை.. அப்பாவின் காதலை மகள் சொல்கிறாள்.. தனக்கு மட்டுமே தெரியும் என்கிறாள்.. அம்மாவுக்கும் தெரியாமலா இருக்கும் என்று வாசகனாகிய நான் கேட்டுக் கொண்டேன்.. கதையில் அம்மாவின் நிலையும் காதலியின் நிலையும் சொல்லப் படவில்லை.. நமக்கு மூக்கு விடைத்து வியர்க்கிறது.

இப்படித்தான் இந்தத் தொகுப்பில் வரும் கதைகளின் மற்றொரு பக்கத்தைப் பார்க்கும் ஆவலை கதாசாரியர் நம்மிடம் தூண்டுகிறார்.. இல்லை.. அது அவ்வாறு இயல்பாக நமக்குள் வந்து இம்சிக்கிறது என்று சொல்வேன்.


'செக் மேட்' என்று ஒரு கதை.. படைப்பிலக்கியத்தின் சிகரத்தைத் தொட்டிருக்கிற கதையாடல்.. செஸ் விளையாட்டு கதையில் வந்து போகிறது.. செஸ் விளையாட்டுக்கும் கதைக்கும் சம்பந்தமில்லைதான். ஆனால் 'கோமா' வின் பித்து நிலைக்கு நடுவேயும் அவன் விழித்துக் கொண்டிருக்கிறான் என்பதை சொல்ல அவனது செஸ் ஆட்டத் திறமை கதையில் அழகாகப் பொருந்திக் கொள்கிறது. பித்து நிலை கூடிவிட்டால் மணிக்கணக்கில் அசையாது நின்றுவிடும் கோமாவை அசையச் செய்தல் மிகக் கடினம். இப்போதோ அவன் கையில் தடி வேறு இருக்கிறது.. கிட்டே போனால் அடித்து விடுவானோ என்று பயம். தம்பி வரதன் அவனிடம் தொடர்ந்து பேச்சுக் கொடுக்கிறான்.. அண்ணன் கோமா இப்படி ஆகிவிட்டதால் அண்ணனுக்கு பேசியிருந்த அத்தை மகள் அகிலா வரதனின் மனைவியான கதை, அண்ணன் கோமாவின் செஸ் விளையாட்டுத் திறன் எல்லாம் கதையில் வருகிறது.. அகிலா அண்ணனை நேசித்திருப்பாளோ என்ற வரதனின் உள்மனக் குமைச்சலும் இடையில் ஆகச் சிறந்த கதை வெளிப்பாட்டுடன் வாசகன் மத்தியில் வந்து விழுகிறது. அண்ணனை விழிப்பு நிலைக்குக் கொண்டு வர செஸ் போர்டை விரித்து காய்களை ஏதோ ஒரு வகையில் அடுக்கி 'வொய்ட் மூவ்' என்கிறான் வரதன். அண்ணனிடம் அசைவில்லை.. தனக்கு குழந்தை பிறக்கப் போகிறது. 'நீ பெரியப்பா ஆகப் போகிறாய்' என்று சொல்கிறான்.

இப்படி ஒரு தருணத்தில் அதை முதன் முதலாக எல்லாருக்கும் அறிவிக்கும் வரதனின் நிலை மேல் நமக்கு இரக்கம் பிறக்கிறது. இதற்கு அண்ணன் அசைந்து விடுவான் என்று இவன் உள்மனம் கூறியது போலும்..

அவன் அசைந்தது மட்டுமின்றி தம்பி தலையில் தடியால் அடித்து விட்ட வேகத்தில், கட்டியிருந்த லுங்கி அவிழ்ந்து நிர்வாணமானதை உணராமல் நிற்கிறான். அப்போது தான் உள்ளே நுழைந்த அகிலா தயக்கமின்றி அவன் லுங்கியைக் கட்டி விடும் செயல் மனிதாபிமானத்தின் உச்சத்தைத் தொட்டு விடுகிறது.. அம்மா, அப்பா, கணவன், கொழுந்தன் எல்லோருக்கும் உறுத்தாத அவனது நிர்வாணம் அவளை உறுத்தியதில் அவள் குடும்பத்தின் மூன்றாம் மனுஷி ஆகி விடுகிறாள்.. இத்தனை நிகழ்ச்சிகளின் வேகத்தில் கதை பறக்கிறது! அகிலாவின் செயலில் முழுதாக விழிப்பில் வந்த கோமா,' வொய்ட் மூவ் என்றா சொன்னாய் வரதா?. அப்போ அடுத்த மூன்று மூவ்களில் 'செக் மேட்' என்கிறான்.. வாவ்..! இவன் எப்போது விழித்துக் கொண்டான்.?


பொதுவாக விமர்சனங்களில் கதை சொல்லாத வழக்கத்தை மீறி என்னை மறந்து கதை சொல்ல வைத்து விட்டார் சுரேஷ் பரதன்.

மொத்தம் 12 கதைகள்.. (பொருளடக்கத்தில் 11 தான் காட்டப் பட்டுள்ளது) அத்தனையும் வெவ்வேறு உணர்வுகளைத் தரவல்லவை..

புத்தகம் வாங்கிப் படித்துக் கொள்ளுங்கள்.. இப்போதே நீண்டு விட்டது.. இன்னும் விட்டால் சொல்லிக் கொண்டே போவேன்.. அத்தனை செறிவான கதைகள்..!

சுவடு பதிப்பகம் இந்த ஆண்டு வெளியிட்ட சிறுகதைத் தொகுப்புகளில் மிகுந்த கவனம் செலுத்தியது என்று நான் மிக நன்றாக அறிவேன்.. இந்தத் தொகுப்பு அதை மெய்ப்பித்திருப்பதில் சுவடு குடும்பத்தின் சார்பில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்...


 
 
 

Opmerkingen

Beoordeeld met 0 uit 5 sterren.
Nog geen beoordelingen

Voeg een beoordeling toe

CONTACT

Tel: 9810488582| Tel: 7011144631 | sureshbarathan@gmail.com

Sign Up for Stay Connected

Thanks for submitting!

Follow me:

  • Black Facebook Icon
  • Black Twitter Icon

© 2022 by Suresh Barathan

bottom of page