சந்நதம் நூல் குறித்து வாசகர் விமர்சனம் -3
- Suresh Barathan
- Jul 24, 2023
- 1 min read
#சந்நதம்
சுவடு பதிப்பகம்
தொகுப்பின் முதல் சிறுகதையான சந்நதத்தில் துவங்கி, புன்னகையைத் தொலைத்தவள், ரோஜாத் தோட்டம், ஒரு வாய் சோறு, அப்பாவின் காதல் கதை, பறத்தலும் பறத்தல் நிமித்தமும், வெற்றிடம், மரணம் என்றொரு புள்ளியில், செக் மேட் (check mate), நிசியிலெழும் பசி, சரணாலயம் என பதினோரு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு. அட்டை, முன்னுரை போன்ற சடங்குகளைத் தவிர்த்துவிட்டு மீதம் தொண்ணூற்றி நான்கு பக்கங்களில் பதினோரு கதைகளையும் எழுதியிருக்கிறார். எல்லாம் எளிமையான மொழிகள். அதேபோல கதையின் எல்லா மாந்தர்களும் நம்மில் அநேகம் பேருக்குப் பழக்கமுள்ள எளியவர்கள். எல்லாம் இருந்தும் ஏதோ ஒன்று இல்லாதவர்கள். பெரும்பாலும் பெண்கள்.
அகிலா, பவித்ரா, சாரதா மதினி, ரஞ்சனி, கதையில் நேரடியாக வராவிட்டாலும் நொடிநேர மின்னலாக வரும் செம்பகம்… எல்லாரும் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் பெண்களையும், அவர்கள் மூலமாக அநேக ஆண்களையும் பிரதிபலிக்கிறார்கள். எதிலும் ஒரு ஜஸ்டிஃபிகேஷனைத் தேடுவது வாசகனுக்கோ, இதனால் சகலமானவர்களுக்கும் என்பது எழுத்தாளனுக்கோ தேவையற்றது.
Lust என்பதைப் பெரிய இழிவாக நினைத்துக்கொண்டிருந்த வயது ஒன்றிருந்தது. இன்னமும் நிறைய பேர் அப்படி நினைத்துக்கொண்டும் இருக்கலாம். சரி தவறு எல்லாம் யார் சொல்வது. சூழல், தேவை, அதற்கான வாய்ப்புகள், தைரியம் என நிறைய இருக்கிறது. ஆனால் எல்லோருக்குள்ளும் ஒரு குறுகுறுப்பு இல்லாமலா போகும். எல்லோருக்கும் என்பது தவறு ஆயின் பெரும்பாலும் எனக் கொள்க. இரண்டு பேருக்கும் பொதுவாக இருந்தாலும் அதைப் பெண்கள் மூலமாகச் சொல்வதுதான் எளிதாக இருக்கிறது அல்லது அதில்தான் கலைத்தன்மை இருப்பதாக நம்பப் படுகிறது. சுரேஷ் சார் அதை அழகாகவே சொல்லியிருக்கிறார்.
வாழ்த்துகள் சுரேஷ் சார்
வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் துணை இயக்குனராகப் பணிபுரியும் தொழில்நுட்ப வல்லுனர் திரு Esakkiappan Barathan என்கிற சுரேஷ் பரதன். எனக்கு மாம்ஸ். கவிதைகள், சிறுகதைகள், இசை, ஒளிப்படம் என கலந்து கட்டி அடிக்கும் சகலகலா வல்லவர்.
எழுதியவர்: திரு சுவாமிநாதன் இராஜாமணி.
Comments