சந்நம் நூல் குறித்த வாசகர் விமர்சனம்.
- Suresh Barathan
- Jul 6, 2023
- 2 min read
நூல்: சந்நதம்
ஆசிரியர்: சுரேஷ் பரதன்
பக்கங்கள்: 108
வெளியீடு: சுவடு வெளியீடு
இந்த நூலின் விமர்சனத்தை கோமதி சார் எழுதும்போதே அதன் தலைப்பும், அட்டைப்படமும் என்னை வெகுவாக ஈர்த்தன. அதுவே, என்னை என் பால்ய கால நினைவுக்குக் கொண்டு சென்றது..
ஆசிரியர் சுரேஷ் பரதன் எங்க ஊர்க்காரர் - அவர் சொல்லும் கதைகள் எங்க ஊர்க் கதைகள், அவர் எழுதும் கதாபாத்திரங்கள் எங்கள் வீட்டுப் பெண்கள், அவர் விவரிக்கும் கதைக்களம் எங்கள் ஊரில் நான் கண்ட காட்சிகள் - இப்படி, எல்லாத்தையும் சேத்துக் கூட்டிப் படிக்கும்போது, இந்தப் புத்தகத்தோட நான் திருநேலிக்கே போயிட்டேன்.
📒 எங்கள் வீட்டில் உள்ள ஒரு பெண் தெய்வத்திற்கும் (சிறுவயதில் இறந்து போன ஒரு பெண்) இதே போல தை மற்றும் ஆவணி மாதங்களில் புதிய சேலை வைத்துக் கும்பிடும் வழக்கம் இருந்தது. சந்நதம் கதையில் வரும் பெரியம்மையைப் போல கண்மூடி சந்நதம் ஆடும் எங்க ஆச்சி, திருநாத்து மரவைய கையில இருத்திப் புடிச்சுக்கிட்டு, கோவமா, சோகமா, பாசமா, உரிமையா, எல்லாருக்கும் ஆசி வழங்குவார். எங்க வீட்டு பட்டாசலைத் திரும்பிப் பார்த்த உணர்வு தந்தது - சந்நதம் சிறுகதை என்ற பெரும்பதிவு.
📒 புன்னகையைத் தொலைத்த(வள்) பாரதியின் வீட்டில் உள்ள பூவரசுவைப் போல, எங்கள் வீட்டிலும் ஒரு பூவரசு இருந்தது, பூ விடுத்தது, நிழல் தந்தது, விளையாடக் கிளை தந்தது, பீப்பி செய்ய இலை தந்தது. இறுதியில், என் கண்முன்னேயே வெட்டப்பட்டது. அவ்வாறான ஒரு நண்பனை நான் நினைத்தேனா, மறந்தேனா எனக் கேள்வி கேட்கிறது இக்கதை.
📒 கல்யாணம் எனும் இன்ஸ்டிட்யூசனில் ஒருவரது தவறோ, சஞ்சலமோ அதனைக் கெடுத்து விடக்கூடாது என்பதற்காக சேர்ந்து வாழும் பிரமு அண்ணனும், ரோஜாத் தோட்டத்தில் இருந்து ஒரு பூவைக் கூடத் தன் தலையில் சூடிக்கொள்ளாத மதினியும் நினைவில் நிற்கின்றனர்.
📒 ஒரு வாய் சோறு போட்டாலும் அன்போடு செய்தால் மட்டுமே அதன் ருசியை உணர முடியும், திட்டிக் கொண்டே செய்தால், சாப்பாட்டில் ருசியை எப்படி தேடுவது என்ற மனநிலை - வேதனையையும் சேர்த்துப் பிசைந்து பரிமாறுகிறது, ஒரு வாய் நல்ல சொற்றுக்காக தான் அத்தையைப் பார்க்கச் செல்லும் சீத்தாராமனின் கதை.
📒 அப்பாவின் காதலை மிக கண்ணியமாகப் புரிந்து கொண்ட மகளின் விவரணை, அந்த அப்பாவின் மீது பெரும் மரியாதையை ஏற்படுத்தியது மட்டுமின்றி, கதையின் போக்கும் களமும் வெகு எதார்த்தமாக செந்தூர் முதல் தில்லி வரை பயணித்து, மீண்டும் செந்தூரிலேயே முடிவுறுகிறது.
📒 பரத்தலும் பரத்தல் நிமித்தமும்மில் இருந்த மேகக் கூட்டம் சேகரிப்பவனும், மரணம் என்னும் புள்ளியில் கதையைத் தொடங்கும் பீப்பி என்ற பக்தவச்சலம் பவித்ராவும் மரணத்தை ஒரு புதிய தளத்தில் அணுகுகிறார்கள்.
📒 அதற்கு நேரெதிரே பூரண பொற்கொடி, புவனா இருவரும் பிறப்பை புதிய பரிமாணத்தில் பார்க்கிறார்கள்.
📒 இத்தொகுப்பின் முத்தாய்ப்பாக, ஒரு திரில்லர் அனுபவத்தை வாசகருக்குத் தெளிவாகக் கடத்தி, படிக்கும்போது, அதன் தலைப்பிற்கேற்றார் போல, சற்றே அதிர வைத்த கதை, உண்மையில் செக் மேட் தான்..
📒 நேரடியாகவின்றி, மிக நேர்தியாகச் சொல்லப்பட்ட கதை நிசியிலெழும் பசியைக் கொண்டு ஒரு வாழ்வாதாரத்தையே பேசுகிறது.
📒 சரணாலயம் சொல்லும் குலசாமி, ஆடிக்கொரு கொடையும், ஐப்பசிக்கொரு கொடையும் கேட்க, மதுரை டூ ராஜஸ்தான் பயணமும் காய்ந்த ரொட்டியும், தொண்டையை வரளச் செய்கிறது - கூடவே, அங்கெல்லாம் நேரில் சென்று சுற்றிப்பார்த்து காய்ந்து விட்டு வந்தது போல.
இவ்வாறாக, எளிய மக்களையும், புதுமையான களங்களையும் கூர்தீட்டிக் கதைகள் புனைந்த ஆசிரியருக்கு மீண்டும் வாழ்த்துக்கள். இவரின் அடுத்த படைப்புக்களை எதிர்நோக்கி..!!
Sankar.T.A.B,
Chennai. — with Gomathisankar Gosar and Nallu R Lingam.
Comentários