சந்நதம் - புத்தக மதிப்புரை
- Suresh Barathan
- Aug 22, 2024
- 2 min read
புத்தக மதிப்புரை:
புத்தகம் : சந்நதம் | சுரேஷ் பரதன் |
சிறுகதை | பக்கங்கள் :108 | விலை : 120

சந்நதம், 2024 புத்தக கண்காட்சியில் சுவடு பதிப்பகத்தில் அதிகம் பேசப்பட்ட ஒரு சிறுகதை தொகுப்பு. மருத்துவர் நந்தினி அம்மா மற்றும் எழுத்தாளர் அருள்குமரன் இருவரும் இந்த புத்தகத்தை எனக்குப் பரிந்துரை செய்தனர். பெயர் காரணம் சற்று குழப்பமாக தான் இருந்தது, அதன் முதல் சிறுகதையை படிக்கும் வரையில், பின்பு அதுவும் புலப்பட்டது. அருமையான அந்த "சந்நதம்" சிறுகதை எங்கள் ஊரில் சாமி வந்து ஆடும் பலரை நினைவுபடுத்தியது.
"புன்னகையை தொலைத்தவள்" சிறுகதை படித்த முடித்த பின்னர் சிறிது நேரம் கனத்த இதயத்தோடு இருக்க வைத்தது. இன்றைய சூழலில் சாலையில் செல்லும் பெண்கள், அலுவலக வேலை செய்யும் பெண்கள், தனிமையில் இருக்கும் பெண்கள் என அனைவருக்கும் அனுதினமும் நடக்கும் பாலியல் சீண்டல்கள் என செய்தி இல்லாமல் ஒரு நாளை நாம் கடப்பது அரிது. அப்படி இருக்க மனநிலை குன்றிய அந்த பெண்ணுக்கு நடக்கும் கொடுமையை இன்னொரு பெண் விளக்குவது போன்ற இந்த கதை பெண்களின் வாழ்வில் நடக்கும் இது போன்ற அவலங்களை எடுத்துரைக்கிறது.
"ரோஜாத் தோட்டம்" சிறுகதை சற்று வித்தியாசமானது. ஆண்-பெண் என இருவர் தரப்பிலும், குடும்பம், திருமணம் போன்ற கட்டாய சடங்குகளால் அவர்கள் எப்படி பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என்பதை விளக்குகிறது இது. கட்டாய திருமணம் செய்தாலும் தாம்பத்தியம் என்ற ஒன்றை காட்டாயப்படுத்த முடியாது என்பதை இந்த சிறுகதை ஆணித்தரமான சொல்லுகிறது.
யாராலும் தனது முதல் காதலை, காதலியை, காதலனை மறக்க முடியாது. அவர்களின் பெயரை எங்கு கேட்டாலும் எளிதில் கடந்து செல்ல முடியாது. அந்த அளவுக்கு மனதில் நின்ற தன் காதலியின் பெயரை தன் மகளுக்கே வைத்து தன் காதலுக்கு வாழ்நாள் முழுவதும் மரியாதை செய்யும் ஒரு அப்பா, அந்த மகளுக்கு சொன்ன கதையை அவர் மகளே செல்லுவதை திரைப்படம் போல காட்டுகிறது "அப்பாவின் காதல் கதை".
பெண் என்பவள் இந்த சமூகத்தில் எப்போது ஒரு ஆணை சார்ந்து மட்டுமே இருக்க வேண்டும் என்பதை தீவிரமாக வற்புறுத்துகிறது. அப்பா, அண்ணன், தம்பி, கணவன் என எல்லோருக்கும் அவளை விட அவளது உடல் பற்றியே அதிகம் கவலை கொள்கின்றனர். இதனை தாண்டி ஒரு பெண் நல்ல வேலை, நல்ல சம்பளம் என ஒரு தனிப்பட்ட வாழ்கையை வாழ முயன்றால் எந்தவொரு ஆணும் அவளை அங்கீகரிப்பது கிடையாது. மரணம் வரையிலும் அவள் இந்த ஆண் சமூகத்திடம் சிக்கித் தவிக்கும் நிலை தான் இங்கு அதிகம் உள்ளது. அவளது பணம், சொத்து மட்டுமல்லாமல் அவளது உடலையும் அபகரிக்க ஒரு ஆண் கூட்டம் எப்போதும் அவளை சுற்றிக் கொண்டே தான் இருக்கும் என்பதையும் "மரணம் என்றொரு புள்ளியில்" சிறுகதை விளக்குகிறது.
வறுமை எவ்வளவு கொடியது என்பதை அனுபவிக்காத யாராலும் விளக்க முடியாத ஒரு வித உணர்வு, அது ஆண்-பெண் என பாகுபாடு பார்க்காது. அப்படி அதன் பிடியில் சிக்கொண்ட மாற்றுத்திறனாளி ஆணும், உறவு என சொல்லிக்கொள்ள யாரும் இல்லாத ஒரு பெண்ணும் தங்கள் வறுமையை எதிர்கொள்ள நடுராத்திரியில் தங்களையே பகடை காயாய் பணயம் வைத்து வருமையோடும் வாழ்க்கையோடும் பரமபதம் விளையாடுகிறார்கள் என "நிசியிலெழும் பசி" சிறுகதை சொல்லுகிறது.
வேண்டும் என்ற நேரத்தில் கிடைக்காத ஒன்று நமக்கு வேண்டாம் எனும் பொழுது நிறையவே கிடைக்கும். இது இயற்கையின் ஒரு விளையாட்டு. கல்யாணம் ஆகி மூன்று குழந்தைகள் பெற்ற நாத்தனரும், குழந்தை பாக்கியம் இல்லாத அண்ணியும் பேசிக்கொள்ளும் வார்த்தைகளை, வலிகளை வரிகளாக விவரிக்கிறது "பூரண பொற்கொடி" சிறுகதை.
மொத்தம் 12 சிறுகதைகள் அடங்கிய இந்த தொகுப்பு எளிய நடையில் பெண்ணியம் பேசும் ஒரு சிறுகதை தொகுப்பாக இருக்கிறது. அனைத்து கதையின் கதாநாயகிகள் ஒவ்வொருவரும் குடும்பம், சமூக சூழ்நிலை, வறுமை, காதல் தோல்வி, வரதட்சணை கொடுமை, குடிகார கணவன் என் ஏதேனும் ஒரு வகையில் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களின் மனநிலையை அப்படியே விவரித்துள்ளார் ஆசிரியர் சுரேஷ் பரதன் அவர்கள். வாழ்த்துக்கள் அய்யா!
நிச்சயம் வாசிக்க வேண்டிய சிறுகதை தொகுப்பு!
-------------------------------------------
தமிழ்செல்வன் இரத்தினம்,
சென்னை,
31/07/2024.
Comments