பார்த்தீனியம்
- Suresh Barathan
- Sep 6, 2024
- 2 min read

நாவல் வெளியான காலத்தில் அனைவராலும் பாராட்டப்பட எழுத்தாளர் தமிழ்நதியின் பார்த்தீனியம் நாவலை சமீபத்தில் தான் ஆன்லைனில் வாங்கினேன். கூடவே சோளகர் தொட்டியும், நீர்வழிப்படூஉமும். முதலில் வாசிக்க ஆரம்பித்தது பார்த்தீனியத்தைத் தான்.
வானதி-பரணி காதல் கதையினைச் சொல்லுவதின் வாயிலாக, பல்முனைத் தாக்குதல்களுக்கு நடுவே இலங்கையில் நம் ஒட்டுமொத்த தமிழின மக்களுமே சிக்கி, சின்னாபின்னாமாகி சீரழிந்த கதையினை, நாவலாக்கியிருக்கிறார் தமிழ்நதி.
சிங்கள அரசு மற்றும் இராணுவத்தினாலும், பத்திற்கும் மேற்பட்ட ஈழ விடுதலை இயக்கங்களினாலும், எல்லாவற்றிற்கும் மேலாக, அமைதியை நிலைநாட்டச் சென்ற இந்திய இராணுவத்தினாலும் இலங்கைத் தமிழர்கள், எத்தனை எத்தனை இன்னல்கள் அனுபவித்தனர், எத்தனை எத்தனை இளைஞர்கள் உயிரிழந்தனர், எத்தனையெத்தனை தமிழ்ச் சகோதரிகள் மானபங்கப்படுத்தப்பட்டனர் என்பதையெல்லாம் (இந்நாவல் தவிர்த்து) இணையங்களில் கொட்டிக் கிடக்கும் தகவல்களையெல்லாம் தேடித் தேடி படிக்கத் தூண்டியது பார்த்தீனியம்.
இந்நாவலை நான் வாசிக்க ஆரம்பித்த நாளிலிருந்து, ஈழப்போரைக் குறித்து நான் வாசித்தறிந்த விசயங்கள் ஏராளம். கூடவே இணையங்களில் கிடைக்கும் வெறும் தகவல்களை மட்டுமல்லாது, போர்நிகழ் காலத்தில் தமிழர்களின் வாழ்வியலை அறிந்து கொள்ள விரும்பி, ஈழப் போர் குறித்த, அல்லது ஈழப்போரை மையமாகக் கொண்ட நாவல்களை வாசிக்க விரும்பினேன். கட்டுரை ஆசிரியர்களால் உணர்வுப் பூர்வமாக ஒரு சமூக்கத்தின் வாழ்வை தங்கள் படைப்புகளில் எழுதிவிட முடியாது என்று நான் நம்பினேன். கட்டுரைகள் உண்மையின் அடிப்படையில் எழுதப்படுபவை. நாவல்களோ உணர்வின் அடிப்படையில் எழுதப்படுபவை. அவற்றின் மூலம் தான் உணர்வுசார் வாழ்வியலை அறியமுடியும் என்பதுவும் என் தீர்மானமாக இருந்தபடியினாலேயே, இம்முடிவை நானெடுத்தேன்.
எனக்கு உடனடியாக கிடைக்கப்பெற்ற புத்தகங்களான, (எனக்குக் வாசிக்கக் கிடைத்த வரிசைப் படிக்கு) ஜெயமோகனின் உலோகம், வாசுமுருகவேலின் ஜெஃப்னா பேக்கரி, வாஸந்தியின் நிற்க நிழல் வேண்டும் போன்ற புதினங்களையும், மருதனின் விடுதலைப் புலிகள் (இதில் எத்தனை சதவீதம் கற்பனை எத்தனை சதவீதம் உண்மை என்று பிரித்துணர நிறையவே சிரமப்பட வேண்டியிருந்தது.) என்ற புத்தகத்தையும் இப்போது வரை வாசித்திருக்கிறேன். இந்த அட்டவணை என்னுடைய வாசிப்பின் அளவை பெருமை பீற்றிக் கொள்ள சொன்ன அட்டவணையல்ல. பார்த்தீனியம் நாவல் என்னை இவற்றையெல்லாம் தேடித்தேடி வாசிக்கத் தூண்டியது என்பதற்காகவே சொல்லியிருக்கிறேன்.

மேலும், வாசிப்பை நேசப்போம் குழுமத்தில் ஈழப்போர் குறித்த நாவல்களைப் பரிந்துரைக்கச் சொல்லி கேட்டபொழுது, அக்குழும உறுப்பினர்கள் எனக்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களின் அட்டவணையை தந்தார்கள். இனி ஒவ்வொரு புத்தகமாக வாசிக்க வேண்டியது தான்.
மேலே நான் வாசித்துவிட்டதாக்க் கூறிய மூன்று நாவல்களின் மூலமாக, என்னால் ஈழத் தமிழரின் வாழ்வியலுக்கு பக்கத்தில் என்ன பக்கத்தில், தூரத்தில் கூட போக முடியவில்லை. பார்த்தீனியம் வடக்கு மாகாணம், மற்றும் வடகிழக்கு மாகாணங்களின் நிலப்பரப்பை, பூகோள அடையாளங்களை, அந்நிலப்பரப்பில் வாழ்ந்த மனிதர்களை, அவர்களின் அன்றாட அல்லல்களை என எல்லாவற்றையும் உள்ளங்கையில் எடுத்துக் காட்டியது என்று சொன்னால் அது அதீதமன்று. கதையைப் படித்துக்கொண்டே இருக்கும் போதே, இலங்கை நாட்டின் பூகோள வரைபடத்தை கூகுள் மேப் மூலமாக பார்த்துக் கொண்டே படித்தேன்.
வானதி யாழ்நகரிலிருந்து பரணியை பார்ப்பதற்காக வவுனியா செல்லும் ஒவ்வொரு முறையும் நானும் அவளுடன் அந்த A9 பிரதான சாலையில் பயணித்தேன். வானதி படிப்பிற்காக தங்கியிருந்த “திருநெவேலி”யில் நானும் தங்கியிருந்தேன். அவள் அலைந்து திரிந்த அத்தனை நிலப்பரப்புகளிலும் என் கண்கள் கூகுள் மேப் வழியாக அலைந்தன. அந்த அளவுக்கு என்னை பாதித்திருந்தது பார்த்தீனியம்.
இன்னொன்றை கண்டிப்பாகச் சொல்லவேண்டும்.
நாவல் முழுவதும் தமிழ்நதி பயன்படுத்தியிருக்கும் அவர்களின் வட்டார மொழியின் சொல்லாடல்கள். பார்த்தீனியத்திற்கும், (நான் மேற்சொன்ன) மற்ற நாவல்களுக்குமுள்ள மிகப் பெரிய வித்தியாசமே, அவ்வட்டார மொழி இந்நாவலில் துருத்தாமலிருப்பது. நிற்க நிழல் வேண்டும், உலோகம் போன்றவற்றை எழுதியவர்கள் இவ்வட்டார மொழியை உபயோகிக்காதவர்கள். ஆனால் வாசு முருகவேலின் ஜெஃப்னா வட்டார்மொழிக்கும் பார்த்தீனியத்தின் வட்டார மொழிக்குமே நிறைய வித்தியாசங்களை காண முடிந்தது.
ஒட்டு மொத்தமாக, பார்த்தீனியம் நாவல், “எல்லாம் ஒரு நாளில் சரியாகும்” என்ற நம்பிக்கையை விதைக்கிறது. நாவல் முழுக்க போரும் அதன் அவலங்களும் நிறைந்து கிடக்கின்ற சூழலிலும் தமிழ்நதியின் எந்தவொரு பாத்திரமும் நம்பிக்கையை இழக்காமல் இருந்ததோடு மட்டுமல்லாமல், அத்தகைய சூழலில் ஒரு சாதாரண மனிதனுக்கு உண்டாகும் சக மனித துவேஷம், அது ஏதுமில்லாமல் படைக்கப்பட்டிருக்கிறதையும் கண்டிப்பாக குறிப்பிட்டாக வேண்டும்.
இது பார்த்தீனியம் நாவல் விமரிசனமா என்று கேட்டால் இல்லை. பரிந்துரையா என்றாலும் இல்லை. எப்படி பார்த்தீனியம் நாவல் என்னை பல விசயங்களைத் தேடித் தேடி படிக்கத் தூண்டியதோ அப்படியே இதை எழுதவும் அந்நாவல் தான் தூண்டியது.
இப்படிப்பட்ட நாவலைத் தந்த எழுத்தாளர் தமிழ்நதிக்கு என் வணக்கங்கள். இந்நாவல் குறித்து அவரிடம் கேட்பதற்கு சில கேள்விகள் இருக்கின்றன. எப்பொழுதாகிலும் அவரை நான் சந்திக்க நேர்ந்தால், அப்போது கேட்டுக் கொள்கிறேன்.
Comments