Merry Christmas to Every Loved ones...
- Suresh Barathan
- Dec 25, 2022
- 1 min read
எல்லாருக்கும் என் பிரியங்கலந்த வணக்கங்கள்.
இரண்டொரு மாதங்களுக்கு முன்னர் மெஸெஞ்சரில் எனக்கு நீண்டதொரு தனிச்செய்தி வந்தது. அந்த செய்தியின் சாராம்சம் இதுதான்.
செய்தி அனுப்பியவருக்கு பாடமெடுக்கும் ஒரு வாத்தியாராக அன்றைய தினத்தின் முந்தைய இரவுத் தூக்கத்தினிடையில் அவரது கனவில் நான் வந்திருந்தேனாம்.
இத்தனைக்கும் அவரை நானோ அல்லது என்னை அவரோ நேரில் சந்தித்ததில்லை. இருவருக்குமிடையில் ஒருமுறை கூட அலைபேசி உரையாடல் நிகழ்ந்ததுமில்லை. எனக்கும் அவருக்குமிடையில் எந்தவொரு உறவுமில்லை. இருவருக்கும் இடையில் ஊடாடிக் கிடந்தது முகநூலில் நானெழுதிவரும் பதிவுகள் மட்டுமே.
என்னுடைய எழுத்துக்கள் அவருக்கு அவருடைய துயருறு காலங்களில் கைகொடுத்ததாகவும் அவை அவருக்கு ஒரு ஸ்ட்ரெஸ் பஸ்டராக உதவியதாகவும் நான் அவரிடம் தொடர்ந்து மெஸெஞ்சரிலேயே உரையாடித் தெரிந்து கொண்டேன்.
என் எழுத்துக்கள் ஒருவரின் துயர் துடைக்க ஆறுதல் கரம் நீட்டியிருக்கிறது என்பதை அறிந்த அன்று முழுவதும் நான் இருந்த மனநிலையை அத்தனை எளிதில் என்னால் எழுத்துக்களில் சொல்லி விட முடியாது. அத்தனை உணர்ச்சிவயப்பட்டவனாக இருந்தேன்.
எத்தனை பெரிய பொறுப்பை அவர் என் மீது ஏற்றிவைத்துவிட்டார் என்பதை நான் அன்று உணர்ந்தேன்.
அதைவிட இன்னொன்றையும் அன்று நான் மிகத் தெளிவாகப் புரிந்து கொண்டேன். எழுதினால் மட்டும் போதாது. அதைச் சரியாக ஆவணப்படுத்தவும் வேண்டும் என்கது தான் அது.
என் எழுத்துக்களை நான் எப்படி ஆவணப்படுத்துவது. எப்படி அவரைப் போன்ற மற்றவருக்கும் அவற்றை எடுத்துச் செல்வது என்றெல்லாம் இடைவிடாது யோசித்ததின் விளைவே இந்த இணைய தளமும் வலைப்பூ தளமும்.
இங்கே நான் எனக்குள் எழுந்த இடைவிடாத சிந்தனைகளை பதிந்து வைக்கப் போகிறேன்.
இதனை வெறும் வலைப்பூக்களின் பக்கமாக மட்டுமில்லாமல் என்னுடைய கதைகளை கவிதைகளை வாசிக்க உதவும் ஒரு தளமாகவும், கூடவே என்னுடைய புத்தகங்களை வாங்க உதவும் தளமாகவும் இதனை நான் வடிவமைத்திருக்கறேன்.
மொத்தத்தில் இந்த இணைய தளம் என்னுடைய ஒழுங்கமைக்கப்பட்ட ஒழுங்கின்மைகளை (My Organized Chaos ) தாங்கி நிற்கப் போகிறது. அதனாலேயே வனிதாரெஜி இந்தத் தளத்திற்கு அதையே பெயராக்கிக் கொள்ளுமாறு பரிந்துரைத்தார். ஆயினும் ஆங்கிலத்தில் பெயரிட எனக்கு விருப்பமில்லாததால், அவர் பரிந்துரைத்த இன்னெரு பெயரான ‘அகப்புறம்’ எனும் பெயரில் இந்த இணைய தளத்தை உங்கள் முன் வைக்கிறேன்.
என்னுடைய அகமும் புறமும் என்றென்றைக்கும் உங்கள் அன்பினாலே கனிந்து இருக்கிறது. இந்த அகப்புறமும் உங்கள் ஆதரவினால் சிறந்து நிற்கும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.
எல்லாருக்கும் என் பிரியங்கள்..
Comments