மார்கழிக் கோலங்கள்.
- Suresh Barathan
- Jan 7, 2023
- 2 min read
மனிதன் ஆதிகாலத்திலிருந்தே குளிருக்குப் பயந்தவனாகவே இருந்திருக்கிறான். போதிய வெளிச்சமில்லாமல் இருப்பது, குளிர் தாங்காமல் வாடியது, வேட்டையாட முடியாமல் இருந்தது, வாட்டும் குளிரில், பசியில், சக மனிதர்களை இறப்பில் இழந்தது என மனிதன் குளிருக்குப் பயந்ததிற்குக் காரணங்கள் பலவாக இருந்திருக்கலாம். அதனால் தான் பண்டிகைக் காலங்களில் ஒருவருக்கொருவர் வார்ம் விஷஸ்களை பறிமாறிக் கொள்ள துவங்கினார்கள்.
குளிருக்குப் பயந்து மனிதன் தனித்தொதுங்கிவிடக் கூடாது என்பதினாலும் உலகெங்கும் பண்டிகைகள் குளிர்காலங்களில் கொண்டாடப்படுகின்றன. கொண்டாட்டங்களில் மனிதன் கூட்டமாய் கூடுவானல்லவா.
பண்டிகைகள் தெய்வங்களை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டன. அதனால் குளிர்காலங்களைப் பற்றிய தெய்வக் கதைகள் தனித்து உருவாகின. அல்லது தெய்வங்கள் குளிர் காலத்தைப் பற்றி பேசின. மனிதன் குளிர்காலத்தைக் கண்டு பயந்தனால்லவா.. அதனால் தெய்வம் குளிர்காலத்தை உயர்த்திச் சொல்லத்துவங்கின.
பூமியை பூமத்திய ரேகையை அடிப்படையாக்க்கொண்டு வட அரைக்கோளம், தென் அரைக்கோளம் (Northern Hemisphere, Southern Hemisphere) என இரண்டாகப் பிரிக்கிறார்கள். பூமியின் பெரும்பாலான நிலப்பகுதி வட அரைக்கோளத்தில் தான் இருக்கிறது. தென் அரைக்கோளத்தில் நிலப்பகுதி குறைவாகவும் நீர்ப்பகுதி(கடல்கள்) அதிகமாகவும் இருக்கின்றன.

அடுத்ததாக 23.439281 டிகிரியில் அமைந்த பூமியின் சாய்வு அச்சு.(Axial Tilt). (சாய்வு அச்சு என்பது பொருளின் சுழலக்கூடிய அச்சு மற்றும் அதன் சுழல் தட அச்சு இரண்டிற்குமடையே உள்ள கோணம். Source: Wikipedia). இந்த சாய்வு அச்சின்படி வட அரைக்கோளத்தின் குளிர்காலம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 21 முதல் துவங்குகிறது. (December Solstice). கிட்டத்தட்ட மார்கழி மாதத்தின் ஆரம்ப தேதிகள்.
இந்தியாவும் வட அரைகோளத்தில் தான் இருக்கிறது. அதனால் தான் இங்கே தெய்வம் மாதங்களில் நான் மார்கழியாய் இருக்கிறேன் என்றது. அங்கே மேற்கத்திய நாட்டில் தெய்வம் டிசம்பர் 25ல் பிறக்கிறது. இப்படியாக மார்கழிக்கு அல்லது குளிர்காலத்துக்கு முக்கியத்துவம் துவங்குகிறது.
திருப்பாவை பாடிய ஆண்டளோ தன்னை மார்கழி நாயகியாகவே வரித்துக் கொண்டு மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளாம் என்று தன் திருப்பாவை பாடலைத் துவங்குகிறாள்.
இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த மார்கழியை தமிழ்ப் பெண்கள் அழகழகாய் கோலமிட்டு வரவேற்கிறார்கள். பூசணிப்பூ வைப்பதெல்லாம் அதிகப்படியான வரவேற்பேயன்றி வேறெதுவுமில்லை.
மார்கழியில் நம் பெண்கள் போடும் கோலங்கள் சாதாரணமாக இரட்டைப் பரிமாணத்தை மட்டும் கணக்கில் கொண்டு போடப்படுபவை. மூன்றாவது பரிணாமம் சாத்தியமே இல்லாவிடினும் அதனை ஒரு யோசனையாய் ஒரு வடிவமாய் கொண்டுவர முடியும்.
வேறொரு சமாச்சாரத்தை கொண்டு இதை விளக்க முயல்கிறேன்.

போட்டோக்ராபியில் DoF என்றொரு விசயம் உண்டு. டெப்த் ஆஃப் ஃபீல்ட். (Depth of Field). காமிராவின் மூலம் பிடிக்கப்பட்ட படத்தில் காமிராவுக்குப் பக்கத்திலுள்ள துல்லியமாகத் தெரியும் பொருட்களுக்கும் தூரத்திலுள்ள பொருட்களுக்கும் இடையே உள்ள தூரம் தான் இந்த டெப்த் ஆஃப் ஃபீல்டு.
இந்த டெப்த் எப்போதுமே மூன்றாவது பரிமாணம் தான்.
புகைப்படத்தில் அல்லது கோலத்தில் மூன்றாவது பரிமாணத்தை கொண்டு வருவது என்பது இப்படி டெப்த்தை அன்ஃபோகஸ்ட்டாக காட்டுவதால் மட்டுமே முடியும்.
அப்படி ஒரு மார்கழி கோலத்தை தான் கண்ணம்மா போட்டிருக்கிறார்.

கண்ணம்மா போடும் மார்கழி கோலங்கள் அவரது நட்பு வட்டத்தில் மிகப்பிரசித்தி பெற்றவை. குறிப்பாக அவர் வரைந்த சொந்த ப்ரொஃபைல் பிக்சர், அவதார் உருவங்கள், மயில்பெண், பின்பக்கம் திரும்பி நிற்கும் மணப்பெண், கொத்தவே தெரியாத மக்காய் அமர்ந்திருந்த மீன்கொத்தி போன்றவை எனக்குப் பிடித்த கோலங்கள். இவற்றில் மீன் கொத்தி கோலம் டெப்த் ஆஃப் பீல்டை கொண்டிருந்தது ஆச்சர்யமான ஒன்று.
Comments