பாலகுமாரனின் இரும்பு குதிரைகளை முன் வைத்து
- Suresh Barathan
- Jan 5, 2023
- 2 min read

எழுத்துச் சித்தர் பாலகுமாரன் தன் நாவல்களனைத்திலும் அதன் காதாபாத்தி்ரங்கள் மூலம் வாழ்க்கையின் கற்பிதங்களை சரி, தவறு என இடதும் வலதுமாக நின்று பேசி இருபக்க நியாயங்களைச் சொல்வதின் மூலம் வாசகனை அவனாக ஒரு முடிவுக்கு கொண்டு போக முயற்சி செய்து கொண்டே இருந்தார். நாம் எவையெல்லாம் சரியென கொண்டிருக்கிறோமோ அவற்றையெல்லாம் தவறு எனச் சொல்லும் ஒரு பாத்திரம். இல்லையில்லை அவையெல்லாம் சரியே என வாதிடும் இன்னொன்று. வாசித்து முடிக்கையில் எது சரி எது தவறு என்பதை நாமாக முடிவிற்கொண்டால் உண்டு. 1984ல் வெளியான இரும்பு குதிரைகள் நாவலும் அதையே தான் செய்தது.
நாயகனான விஸ்வநாதனை அறிமுகம் செய்கையில் அவன் ஒரு கனவு காண்பான். அதில் உப்புக் கயிறொன்று அவனைக் கட்டிப்போட்டிருக்கும். அதை அவன் அறுத்து எறிய முடியாமல் தவிப்பான். கனவிலிருந்து அவன் விழிக்கையில் அவன் மனைவி தாரிணியின் கரங்கள் அவன் கழுத்தைச் சுற்றி படர்ந்திருக்கும். அவனை அவன் இல்லறமே அழுத்துவதாக அவன் நினைக்கிறான். பொதுவாக இல்லறத்தில் இருக்கும் எல்லா ஆண்களுக்கும் அது ஒரு கனமான உப்புக் கயிறாகவே இருக்கிறது. அறுத்தெறிய முடியக் கூடிய கயிறு தான். ஆனாலும் அறுக்கவொண்ணாது இறுக்கிக் கட்டிய கயிறாகவே இல்லறம் அமைகிறது. அது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான கயிறு. நாவல் வெளியாகி முப்பத்தெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்றைக்கும் இது தான் சமூக நிலை. கவிதை எழுதுபவன், சினிமா மோகம் உள்ளவன், மற்றைய ஆண்களிடமிருந்து தான் வேறானவன் என எண்ணுபவன் குடும்பத்தை உதற முடியாமல் தவிப்பதாக இருப்பவன் என பல குணாதிசியங்கள் அவனுக்கு. கவிதை எழுதுபவன் எண்பதுகளில் குறைவாக இருந்ததனால் விஸ்வநாதன் வித்தியாசமானவனாகிப் போனான் பாலகுமாரனுக்கு. இன்றைய தேதியில் கவிதை எழுதுபவன் சராசரியாக போய்விட எழுதாதவன் தான் வித்தியாசப்பட்டு நிற்கிறான்.
நாவலின் இன்னொரு பாத்திரம் காயத்ரி. நாணு ஐயர் மகள். தன்னைச் சுற்றி நிகழ்பவற்றை சதா கேள்விகள் கேட்டு கேட்டு புரிந்து கொள்ள முயல்பவள். கேள்விகளாலும் தர்க்கங்களாலுமே சுதந்திரத்தை அடைய நினைப்பவள் காய்த்ரி. தன்னைச் சுற்றி நடப்பவையெல்லாம் கட்டமைக்கப்பட்ட பொய்களாக இருப்பதாக உணர்கிறாள். எல்லாவற்றையும் கட்டுடைக்க விரும்புகிறாள். ஒரு கட்டத்தில் அவளுக்கு எல்லாவற்றையும் கற்றும் தரும் தகப்பனின் பாதுகாப்பு அரண் கூட அவளுக்கு சிறையாக இருக்கிறது. இப்படியொரு பெண்ணை முக்கிய பாத்திரமாக படைப்பது அந்தக் காலத்திய கிளிஷேவாக இருக்கலாம் என்று எண்ண வைக்கிற ஒரு பாத்திரம். பாலச்சந்தரும் இப்படிப்பட்ட பல பெண் பாத்திரங்களை தன் திரைப்படங்களில் உலவ விட்டிருக்கிறார். ஆனால் பாலச்சந்தரின் பெண்கள் ஒரு உடலுறவுக்குப் பின் சாதாரண குடும்ப அமைப்பை நோக்கி நகர்பவர்களாக இருந்தார்கள். பாலகுமாரனின் காயத்ரியோ தனக்கு குடும்பம் வேண்டாம். ஆனால் ஒரு குழந்தை வேண்டுமென்கிறாள். அந்தக் குழந்தை வளர்ப்பே பின்னால் ஒரு சிறையாக மாறாதா என்ன. அந்தக் குழந்தையை அவள் விஸ்வனாதனிடம் கேட்பது அவனையும் அவனது தாத்பரியத்தையும் உடைப்பதற்காகவா. எனக்கும் கேள்விகள் எழுகின்றன. எனக்குத் தெரிந்த திருமண பந்தம் முறிந்த பெண் ஒருத்தி, தொண்ணூறுகளில், என் நண்பனிடம் தனக்கொரு குழந்தை தருமாறு கேட்டாள். நண்பன் தலைதெறிக்க ஓடிவிட்டான்.
நாவலின் மற்றொரு பாத்திரமான நாணு ஐயர் மூலம் பாலகுமாரன் முன்வைக்கும் இன்னொரு முக்கிய விசயம் கூட்டுக் குடும்பம் உடைந்த மாதிரி குடும்பம் என்ற அமைப்பும் கட்டாயம் உடையும் என்பது. முப்பத்தெட்டு ஆண்டுகளுக்குப்பின் அது ஐம்பது சதவீதம் உண்மையாகியிருக்கிறது. எத்தனையோ குடும்பங்கள் உடைந்துவிட்டன. விவாகரத்துகள் பெருகிவிட்டன. தனித்து வாழ்பவர்கள் அதிகரித்துவிட்டார்கள். அதையும் தாண்டி குடும்பம் என்ற கமிட்மெண்ட் இல்லாமல் வாழ்பவர்களும்(லிவ்-இன்) நிறைய இருக்கிறார்கள். நிறைய குடும்பங்களில் கணவனும் மனைவியும் மணவாழ்க்கையின் விளிம்பில் தான் குடித்தனம் செய்கிறார்கள்.
இதையெல்லாம் தவிர நாவல் காட்டும் இரண்டு முக்கிய பெண் பாத்திரங்கள் வசந்தாவும் கௌசல்யாவும். இருவரும் உடலை விற்று வாழ்பவர்கள். கௌசல்யா செல்லதம்பியை கணவனாக வரித்து கொண்டு வாழத் துவங்குகிறாள். வசந்தாவோ தன் தொழிலை விஸ்தரித்துக் கொண்டு வாழ்கிறாள். இருவருக்கும் அவரவர் பக்க நியாயங்கள் இருப்பதாகச் சொல்கிறார் பாலகுமாரன்.
அதுவும் சரிதான்.
உலகின் அனைத்து சரிகளும் தவறுகளும் அவரவர் நியாய தர்மங்களைப் பொறுத்து தானே அமைகிறது.
Comments