பட்டர்ஸ்காட்ச் லட்டும் இளையராஜாவின் இசையும்.
- Suresh Barathan
- Jan 11, 2023
- 2 min read
நேற்றைக்கு ஒரு சந்தோசமான தருணத்திற்காக நான் அலுவலகத்தில் அத்தனை பேருக்கும் இனிப்பு (மிட்டாய்) வாங்கிக் கொடுக்க வேண்டியிருந்தது.
தில்லி லக்ஷ்மி நகரில் பிரபல்யமான மிட்டாய் கடையான ஹீரா ஸ்வீட்ஸ் அலுவலகத்துக்குப் பக்கத்தில் இருக்கிறது. அறுவது எழுவது வருட பாரம்பரியம் கொண்ட கடை. சுவையும் தரமும் நிரம்பிய மிட்டாய்கள் கிடைக்குமிடம்.
இந்தக் கடையைப் பற்றி முதன்முதலில் நான் கேள்விப்பட்டது காபூலில். இப்போது இழுத்து மூடப்பட்டிருக்கும் இந்திய எம்பஸியில், அது திறந்திருந்த காலகட்டத்தில், சந்தித்த ரவீந்திரனின் மூலம். ரவீந்திரனுக்கு ஆப்கானின் அலுவலக மொழிகளான பெர்ஷியன் தாரி மொழியும், பஷ்தூ மொழியும் நன்றாக எழுதவும், சரளமாகப் பேசவும் தெரியும். அதனாலேயே அங்கே நீண்ட நாட்களுக்கு வேலை செய்தார். நான் காபூல் சென்றிருந்த போது, தினமும் இரவுச் சாப்பாட்டுக்குப் பின் “அஞ்சிர்க்கீ சிக்கி” எனும் ஒரு மிட்டாய் தருவார். அழகான கண்ணாடித் தாளில் சுற்றிய கோவில்பட்டி கடலைமிட்டாய் சைஸில் இருக்கின்ற, எத்தனை நாளானாலும் கெட்டுப்போகவே போகாத ஒரு இனிப்புப் பலகாரம் அது.
அஞ்சீர் என்றால் தமிழில் அத்திப்பழம். (Fig Fruit). இந்த அத்திப் பழங்கள் நடுநீலக் கடல் பகுதியிலிருந்து (Mediterranean Basin) விளையத் துவங்கி இன்று உலகெங்கும் விளைவிக்கப் படுகின்றன. அத்திப்பழ ஜாமுடன் (Jam) சில Nuts and Crackers-ஐச் சேர்த்து செய்யப்படுமொரு தித்திப்பான மிட்டாய் இந்த அஞ்சீர் மிட்டாய். அந்தச் சுவையில் மயங்கி இந்த ஹீரா ஸ்வீட்ஸ் கடையைப் பற்றித் தெரிந்து கொண்டபின் பெரும்பாலும் எந்தவொரு சந்தோசத்தருணத்திற்கும் அங்கிருந்தே மிட்டாய்களை வாங்குவதான பழக்கம் தொற்றிக் கொண்டுவிட்டது.

நேற்றும் லக்ஷ்மிநகரிலிருந்து அலுவலகம் வரும் பையனொருவனிடம் மிட்டாய் வாங்கி வரச் சொல்லியிருந்தேன். அவன் நேற்று பட்டரஸ்காட்ச் லட்டு வாங்கி வந்திருந்தான். அதிலும் ஏராளமான ட்ரை ஃப்ரூட்டுகள் (முந்திரி, பாதாம், வால்நட்டுகள்) அத்திப்பழ ஜாமுடன் கலந்திருந்தது. கூடவே பட்டர்ஸ்காட்ஸும்.
அலுவலகத்தில் என்னுடைய சீனியரும் மென்ட்டாரும், மதுரைக்காரருமான கிறிஸ்டோஃபர் சார் நேற்று வந்திருந்தார். சாரிடம் ஒரு ரெனால்ட் டஸ்டர் எஸ்யூவி இருக்கிறது. அதில் சோனி மியூஸக் சிஸ்டம் உண்டு. காரின் கியர் கம்பிக்குப் பக்கத்தில் சின்னதாய் மூடி போட்ட ப்ளாஸ்டிக் டம்ளர் ஒன்றை வைத்திருப்பார். அதில் இரண்டு பென்ட்ரைவ்கள் இருக்கும். ஒரு பென் ட்ரைவில் முழுக்க முழுக்க எம்எஸ்வி, இளையராஜா, ஏ ஆர் ரகுமான் இசையில் எஸ்பிபி தனிக்குரலிலோ அல்லது இணைகுரலோடோ பாடிய பாடல்கள் நிறைந்தவை . அத்தனையும் பொறுக்கியெடுத்த முத்துக்கள் போன்ற பாடல்கள். நானும் சாரும் அந்த டஸ்டரில் போகும்போது இந்த பென்ட்ரைவைத் தான் ஒலிக்கவிடுவார்.
இன்னொரு பென்ட்ரைவை தன் மனைவியோடு போகும் போது ஒலிக்கவிடுவதற்காகவே வைத்திருப்பதாகச் சொல்லும் கிறிஸ்டோபர் சார், அது முழுக்கமுழுக்க கிறித்துவ துதிப் பாடல்களால் நிறைந்ததென்றும் சொல்லியிருக்கிறார். அதை நான் கேட்டதேயில்லை.
அந்த முதல் பென்ட்ரவை சாருக்குத் தெரிந்தே “ஆட்டையைப் போடும்” எண்ணம் எனக்கு வெகு நாட்களாக இருக்கிறது. அதைக் கிறிஸ்டோபர் சாரும் நன்கு அறிவார்.
நேற்று இந்த பட்டர்ஸ்காட்ச் லட்டை சாப்பிட்ட கிறிஸ்டோபர் சார் சொன்னார்.
இந்த மிட்டாயைச் செய்த ஹல்வாயியும் (இனிப்புகள் மட்டுமே செய்யக் கூடிய chefக்கான இந்தி வார்த்தை) இளையராஜாவும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான திறமை கொண்டவர்கள். மேற்கத்திய பாணி இசையை /இனிப்பை சுவை மாறாமல் இந்திய பாணி இசையுடன் / இனிப்புடன், இரண்டும் திரிபில்லாமல், செம்மையாய் கலந்து விருந்து படைப்பதில் வல்லவர்கள் இருவரும்.
அது நூறு சதவீதம் உண்மை.
Comentarios