சந்நதம், ஈரூசற்தண்டவம் புத்தகங்கள் வெளியீடு
- Suresh Barathan
- Dec 24, 2023
- 2 min read
ஐந்து வருடங்களுக்கு முன்பாக, சென்னைப் புத்தகத் திருவிழா ஆரம்பத் தேதியில் (11 ஜனவரி் 2018) ஊர் நடுவே ஒரு வன தேவதை கவிதைத் தொகுப்பை, நிறைய நண்பர்கள் மத்தியில் ஒரு விழாவாக டிஸ்கவரி புத்தக நிலைய அரங்கில் வெளியிட்டோம்.
இந்த வருடம், சென்னைப் புத்தகத் திருவிழா கிட்டத்தட்ட முடிவடைய இன்னும் இரண்டு தினங்கள் மட்டுமே உள்ள நிலையில் இன்றைக்கு மீண்டும் ஒரு கவிதைத் தொகுப்பு (ஈரூசற்தண்டவம்) மற்றும் முதல் சிறுகதைத் தொகுப்பு (சந்நதம்) என என்னுடைய இரண்டு புத்தகங்களை புத்தகத் திருவிழாவுக்குள்ளேயே நண்பர்கள் ஒன்று கூடி வெளியிட்டிருக்கிறாரகள்.
நேற்றைய முந்தைய தினம் தொலைபேசியில் அழைத்த நந்தன்ஶ்ரீதரன் அண்ணன் புத்தக வெளியீடு எதுவும் இல்லையா.. நீ வரவில்லையா என விசாரித்தார்கள். இந்த நேரம் சென்னைக்கு வர முடியாத படிக்கு அலுவலக வேலைகள் கட்டிப் போட்டிருப்பதைச் சொன்னதும் அண்ணன் ஒரு ஐந்தாறு நண்பர்கள் ஒரே நேரத்தில் முகநூலில் புத்தகங்களின் முகப்போவியத்தைப் பதிவிட்டு அதையே ஒரு வெளியீட்டு விழாக செய்யலாமே என்று அருமையான ஒரு யோசனையையும் சொன்னார்கள். அட! புதுமையான விசயமாக இருக்கிறதே என அண்ணனிடம் அப்படியே செய்யலாம் எனச் சொல்லியிருந்தேன்.
ஆனால் நல்லு இரா லிங்கம் ( சுவடு பதிப்பத்தின் உரிமையாளர்) இரண்டு புத்தகங்களையும் நண்பர்களைக் கொண்டு புத்தக அரங்குக்கு முன்னாலேயே, ஒரு பாரம்பரிய வெளியீட்டு விழாவை நிகழ்த்தி என்னை ஆச்சர்யப்படுத்திவிட்டார். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
செந்தில்குமார் தீனதயாளன், ஜான்ஸி ராணி, இனியன் ராமமூர்த்தி, திரு பாக்கியம் சங்கர், மகேஸ்வரன் நாச்சிமுத்து, ஹேமாவதி இன்னும் பல நண்பர்கள் மூலமாக இன்றைக்கு மாலை நான்கு மணியளவில் சந்நதமும், ஈரூசற் தாண்டவமும் வெளியிடப்பட்டன. அத்தனை நண்பர்களுக்கும் என் அன்பும், நன்றியும்.
புத்தகங்கள் வெளியிடப்பட்ட அதே சமயத்தில் இன்றைக்கெனப் பார்த்து, அலுவலகத்தில் மிக மிக முக்கியமானதொரு என் வேலை கழுத்தை நெறித்துக் கொண்டிருந்தது. ஆகையினால் உடனுக்குடன் புத்தகங்களை வெளியிட்ட நண்பர்களுடன் அலைபேசியலாவது உரையாடி என் நன்றிகளைத் தெரிவிக்க முடியாதபடிக்கு ஆகிப்போயிற்று. அந்த வேலை முடிவடிகையில் கிட்டத்தட்ட மணி ஆறு தாண்டிவிட்டது. அதன்பின் தில்லி நகரத்தின் போக்குவரத்தில் இப்போது தான் வீடடைந்து இந்தப் பதிவை எழுத முடிந்தது.
புத்தகத் திருவிழா ஆரம்பத்திலிருந்தே நிறைய நண்பர்கள் உங்கள் புத்தகங்கள் எங்கே கிடைக்கும் என என்னிடம் விசாரித்துக் கொண்டே இருந்தார்கள். குறிப்பாக நண்பர் வன்னியப்பனும், தங்கவேல் இராஜேந்திரனும் சுவடு மன்சூரிடம் மீண்டும் மீண்டும் கேட்டுவிட்டு வந்ததாகச் சொன்னார்கள்.
இன்னும் இரண்டு நாட்களுக்கு புத்தகத் திருவிழா அரங்கு எண் 209ல் புத்தகங்கள் கிடைக்கும். அதற்குப் பின் நீங்கள் நல்லு இரா லிங்கத்தை, வாடசப்பிலோ அல்லது அலை பேசியலோ (9551065500) தொடர்பு கொண்டீர்களெனில் புத்தகங்கள் உங்களைத் தேடி வரும்.
என்னுடைய அகப்புறம் டாட் காம் மூலமாகமும் என்னுடைய புத்தகங்களை பெறச் செய்வதற்கான ஆயத்தப் பணிகளை, நான் துவங்கிவிட்டேன். இன்னும் ஓரிரு நாட்களில் அல்லது ஒரு வாரத்திற்குள் அந்த வேலைகள் முடிந்து விட்டால் அகம்புறம் இணையதளம் மூலமாகவும் புத்தங்களை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

அனைவருக்கும் என் அன்பு.
Comentarios