கறிவேப்பிலையாய் வாழ்தல்.
- Suresh Barathan
- Dec 24, 2023
- 2 min read
ஊரில் உள்ள எல்லோரும் உன்னை ஒரு கறிவேப்பிலையைப் போல உபயோகிக்கிறார்கள். தேவைப்படும்போது வருவதும் வேலை முடிந்தவுடன் உன்னை மறப்பதுமாக இருக்கிறார்கள் என சமீபத்தில் ஒரு நிகழ்வில் என்னைப் பார்த்து ஒருவர் சொன்னார்.

காசு பணம் சம்பாதிக்கிறாயோ இல்லையோ உனக்காக நான்கு மனிதர்களையாவது சம்பாதித்துக் கொள் என்பது என் அப்பா எனக்கு அடிக்கடி சொல்லும் விசயம். அந்த விசயத்தில் நான் என் அப்பாவை மாதிரியே.
அப்பாவுக்கு நிறைய பேர் பழக்கம். பழக்கம் என நான் சொல்வது வெறும் பழக்கத்தைத் தாண்டிய ஒன்று. உறவு நட்பு என்பதற்கும் இந்த பழக்கம் என்பதற்கும் இடையே சின்னதாய் ஒரு மெல்லிய கோட்டளவு வேறுபாடு இருக்கும். ஆனால் அந்த பழக்கத்தின் மூலம் ஒருவருக்கொ
ருவர் உதவிகளை செய்து கொள்வதாகட்டும் பெற்றுக் கொள்வதாகட்டும் அப்பாவும் அவருடன் பழகியவர்களும் திரும்பத்திரும்ப செய்து கொண்டார்கள். உதவி எனச் சொல்வது பொருள் சார்ந்த விசயமில்லை. ஒத்தாசையாய் இருப்பது என்றொரு சொல் உண்டு. அது தான் இது.
உதாரணமாய், அப்பாவுக்குத் தெரிந்த ஒருவர் அவருக்கு முன்பின் தெரியாத ஒரு இடத்துக்கு அல்லது ஊருக்கு செல்கிறார் என்றால் அப்பா அவரிடம் அந்த இடத்தில் அல்லது ஊரில் இன்னார் இன்னார் என்று ஒருவர் (அவரும் அப்பாவுடன் பழகியவராய் இருப்பார்) இருக்கிறார். அவரைப் போய்ப் பாருங்கள். அவர் உங்களுக்கு இந்த காரியத்தில் உதவி செய்வார் என்று சொல்லி அனுப்புவார். அதே மாதிரி அந்த இன்னார் இவருக்கு உதவிகள் செய்வார். அதே போல அப்பாவும் வேறு யாரிடமாவது இம்மாதிரி உதவிகளை பெற்றிருப்பார்.
இந்த விசயத்தை நான் மிகச்சரியாக கைக்கொண்டு வருகிறேன்.
முதன்முதலில் இரண்டாயிரமாம் ஆண்டு நான் தில்லிக்கு தனியாய் வந்த நாட்களில் எனக்கு தில்லி என்பது மிகமிக புதிய நகரம். எனக்கு என் பள்ளிக்கூட நண்பன் உதவி செய்தான். அவனுடைய தம்பி அப்போது தில்லியில் இருந்தான். அவன் என்னை தில்லி இரயில் நிலையத்துக்கே வந்து அழைத்து போனான். தன்னுடைய அறையிலேயே தங்க வைத்துக் கொண்டான். பின் என் வேலை முடிந்ததும் மீண்டும் இரயில் நிலையத்தில் வந்து ரயிலேற்றி விட்டான்.
அதைப் போலவே நானும் பல பேரை தில்லி இரயில் நிலையத்திலிருந்து, விமான நிலையத்திலிருந்து என் வீட்டுக்கு அழைத்து வந்து அவர்கள் செல்லுமிடத்துக்கு அழைத்துச் சென்று பின் மீண்டும் அவர்களை இரயில் நிலையத்திலேயோ விமான நிலையத்திலேயோ கொண்டு போய் இறக்கிவிட்டு வந்திருக்கிறேன்.
இதெல்லாம் ஒருவருக்கொருவர் செய்யும் சிறுசிறு உதவிகள். எந்தவித பலனையும் எதிர்பாராமல் செய்யப்படுவன.
இப்படித்தான் கூட வேலை பார்த்துக் கொண்டிருந்த நண்பனொருவனுக்கு அப்போது பார்த்துக் கொண்டிருந்த வேலை பிடிக்கவில்லை. வேறு எங்காவது வேலை கிடைத்தால் நல்லதென அவன் எண்ணிய நேரம் நான் அவனை என்னுடைய நண்பர் ஒருவர் வேலை பார்ககும் வெளியூரிலிருந்த கல்லூரிக்கு சென்று அவரை பார்க்கும்படி கூற அவனும் போனான். அவன் போன வேளையில் அங்கே வேக்கன்ஸி இருக்க இவனும் இன்டர்வ்யூவில் பாஸாக அவனுக்கு அங்கே வேலை கிடைத்தது. அவனுக்கு அந்த வேலை கிடைத்ததில் என்னுடைய பங்கென எதுவுமில்லை. சும்மா சொல்லி அனுப்பினேன். அதற்காக அவனுக்கு நான் தான் வேலை வாங்கிக் கொடுத்தேன் எனச் சொல்வது சரியான விசயமன்று.
பதிலுக்கு அவன் வேறு யாருக்காவது வேறு எங்காவது வேறு சமயத்தில் வேலை வாங்கிக் கொடுத்தருப்பானாய் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்.
சமீபத்தில் ஒருவருக்கு ஒரு உதவி வேண்டும் என என்னிடம் வந்தார். நான் இன்னொருவருக்கு போன் செய்து சொன்னேன். அவர் எனக்குத் தெரியாத இன்னொருவரிடம் சொல்லி அந்த வேலை அவருக்கு முடிந்து விட்டது.
இதில் என்றவென்றால் யாருக்கு வேலையாக வேண்டுமோ அவர் என்னிடம் வந்து தன் வேலை முடிந்துவிட்டது எனக் கூறவே இல்லை. இப்படி அவர் தன் வேலை முடிந்த விசயத்தை என்னிடம் கூறவில்லை எனத் தெரிந்த எங்கள் இருவருக்கும் பொதுவான ஒருத்தர் பார்த்தீர்களா.. அவர் உங்களை ஒரு கறிவேப்பிலையப் போல உபயோகப் படுத்திவிட்டு பின்னர் எறிந்துவிட்டார் எனச் சொன்னார்.
அவர் என்னிடம் வந்து வேலை முடிந்துவிட்டது என சொல்ல வேண்டும் என எதிர்பார்க்கவே இல்லை. வேலை ஆகவில்லை என்றால் மட்டும் தான் நான் அவர் என்னிடம் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பேன்.. ஒரு வேளை நான் முயற்சித்த வழியில் வேலை ஆகவில்லை என்றால் வேறொரு வழியில் அந்த வேலையை நான் அவருக்கு முடித்துத்தரலாம். இல்லையேல் யாரிடம் கூறினோமோ அவர்களுக்கு மீண்டும் அந்த வேலை குறித்து ஞாபகப்படுத்தலாம். அவ்வளவு தான். அவர் சொல்லாமல் விட்டதால் அவர் என்னை கறிவேப்பிலையாக உபயோகப்படுத்திவிட்டார் என நினைக்கவே இல்லை.
மற்றபடி அந்த பொதுவான நபர் சொல்லிய மாதிரி அவர் என்னை உபயோகப்படுத்தி இருந்தால் கூடத்தான் என்ன.. எனக்கொன்றும்்குறைவில்லையே.
சிலருக்காக நாம் கறிவேப்பிலையாகத் தான் வாழ்ந்துவிட்டு தான் போவேமே.
வாழும் வரை மணப்போம் அல்லவா.
Comments