அழகு ஆயிரம்
- Suresh Barathan
- Dec 24, 2023
- 1 min read

Pic. courtesy : Twitter
அந்த அலுவலர் காலையில் வருவார். தன்னுடைய வெள்ளைக் கைக்குட்டையால் ஒரு முகமூடி போல தன் முகத்தை மறைத்தபடி காரிடாரில் உள்ள சிறு கதவைத் திறப்பார். உள்ளிருந்து விளக்குமார் ஒன்றையும் தரை துடைக்கும் துணி பிணைத்த நீண்ட கழி ஒன்றையும் சுத்தமான வாளி ஒன்றையும் வெளியிலெடுப்பார். நேராக வாஷ்ரூம் என நாம் நாகரீகமாக அழைக்கக் கூடிய, அல்லது நாம் வார்த்தையில் கூட சொல்ல துணியாத கக்கூசுக்குள் நுழைவார். குறைந்தது அரை மணி நேரம் பரபரவென சுத்தம் செய்வார். பளிச்சென மின்னும் கக்கூஸின் கிண்ணங்கள் எல்லாம்.
பின்னர் வெளி வந்து காரிடாரை, காரிடாரிலுள்ள அறைகளை பெருக்கி பின் தண்ணீர் நனைத்த துணியால் மெழுகி அவர் செய்வது துப்புரவுப் பணி. அத்தனை சுத்தமாக இருக்கும் அவர் வேலை செய்யும் விதம். அதற்காகத் தானே சம்பளம் வாங்குகிறார் என்று ஒரு சின்ன சால்ஜாப்பில் அவரை கடந்துவிடலாம் தான். அவரது பணி முடிந்த பின் அவர் செய்யும் காரியம் மீப்பெரிய அளவிலானது.
வேலைக்கு வரும் போது அவர் கொண்டு வரும் முதுகுப் பையில் தினமும் கால்கிலோ அல்லது அரைக்கிலோ அளவில் சிறுதானிய கலவை இருக்கும். அதையும், தன்னுடைய தண்ணீர் வாளியில் அரை வாளித் தண்ணீரையும் எடுத்துக் கொண்டு கீழே இருக்கும் வாகன நிறுத்தத்திற்கு போவார். அங்கே அலுவலகச் சுற்றுச் சுவருக்கருகே இருக்கும் கேட்கீப்பர் அறையின் மேல் தளத்தைச் சுத்தம் செய்வார். சுத்தம் செய்த பின், அவர் தினசரி கொண்டு வரும் தானியங்களை விசிறிவிடுவார். அங்கே ஒரு மண் கலயம்(இதுவும் அவர் வாங்கி வைத்த ஒன்று தான்.) இருக்கும்.அதில் நீரும் இருக்கும். பழைய தண்ணீரை கீழே இருக்கும் தொட்டிச் செடியில் ஊற்றிவிட்டு , சுத்தம் செய்து புதிய நீரால் நிரப்புவார்.
அத்தனையும் அங்கே பறத்து வரும் சிறு பறவைகளுக்காக. நாள் தவறினாலும் அவர் பறவைகளுக்குத் தானியங்களிடுவதும் புது நீர் இடுவதும் தவறியதே இல்லை. இந்த வேலைக்கு அவர் யாரிடம் சம்பளம் வாங்குகிறார்..?
ஒரு அரசு சாராத அமைப்பின் கட்டிடத்தில் பணிபுரியும் ஒரு துப்புரவுப் பணியாளருக்கு என்ன வருமானம் வந்துவிட முடியும். அந்தச் சின்ன வருமானத்திலும் கூட மற்ற உயிர்களின் பசியாற்ற நினைப்பவன் தானே சந்தோசமான மனிதன் இல்லையா. அட. நான் ஒன்றை. உங்களுக்குச் சொல்லவில்லையே. அவர் பெயர் கூட சந்தோஷ் தான். என்ன பொருத்தமான பெயர் இல்லையா.
அவரைப் பார்க்கும் ஓவ்வொரு முறையும் என் மனதுக்குள் ஒரு பாடலின் இரண்டு வரிகள் தான் மீண்டும் மீண்டும் ஒலிக்கும்.
சோலை எங்கும் காற்று.. காற்றில் எங்கும் வாசம்...
Comments