ஆறு பைசாக் கோழீயாக மாறிய AAP JAISA KOI
- Suresh Barathan
- Dec 24, 2023
- 2 min read
திருநெல்வேலியில் இயங்கிவரும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், கட்டபொம்மன் போக்குவரத்துக் கழகமாக இருந்த நாட்களில் அதைச் சார்ந்து இயங்கி வந்த அத்தனை தொழிலாளர் சங்கங்களும் கட்சி பேதமின்றி நடத்தும் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை விழாக்கள் அந்நாட்களில் திருநெல்வேலி வட்டாரங்களில் மிகவும் பிரசித்தி பெற்றவை.
ஆயுத பூஜை நாளில் மாலை ஏழெட்டு மணிக்குத் துவங்கும் விழாவானது, அடுத்த நாள் காலை வரை நிகழ்பவையாக இருந்தது. ஓவ்வொரு வருடமும் ஒவ்வொரு கலை நிகழ்வுகள் நடக்கும். ஒரு வருடம் மேடை நாடகம், ஒரு வருடம் 16MM ல் தமிழ்ச்சினிமா திரையிடல், ஒரு வருடம் ஏதாவது பிரபல மெல்லிசைக் குழுவினரின் பாட்டுக் கச்சேரி என மாறி மாறி கலை நிகழ்ச்சிகள் நிகழும்.
அப்படித்தான் அந்த வருடம் (1980 அல்லது 1981 என்று நினைவு) பாட்டுக் கச்சேரி ஏற்பாடாயிருந்தது. இசைக் குழுவினர் தமிழ்ச் சினிமா பாடல்கள் பலவற்றை பாடினாலும் அன்றைய கச்சேரியின் ஹைலைட்டாக இருந்தவை இரண்டு இந்திப் பாடல்கள் தான்.
இந்தி மொழியை அறவே அறியாத (விரும்பாத) போதிலுங்கூட அத்தனை இந்திய உதடுகளும் உச்சரித்த அல்லது உச்சரிக்க விரும்பிய அந்தத் திரைப்படத்தின் பெயர் குர்பானி. (Feroz Khan’s Qurbani.) படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தவை. இந்தியாவின் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்த பாடல் லைலா ஓ லைலா.
கல்யாண்ஜி - ஆனந்த்ஜி இரட்டை இசையமைப்பாளர்களின் இசையில் பாடலின் ஆரம்பத்தில் வரும் ஆரவாரமான ட்ரம்ஸ் இசைக்கோர்வை வயது வித்தியாசமில்லாமல் அத்தனை ரசிகர்களையும் எழுந்து ஆட்டம் போட வைத்தது.
அந்த ட்ரம்ஸ் இசையைத் தொடர்ந்து லைலா மே லைலா என பெப்பியாக ஒலிக்கும் குமாரி காஞ்சனின் (Kuamri Kanchan) குரலில் ஒட்டுமொத்த இளைஞர்களும் மயங்கிக் கிடந்தார்கள்.
குமாரி காஞ்சன், கல்யாண்ஜி ஆனந்தஜி இணையர்களின் இளைய தம்பி பாப்லா ஷாவின் மனைவி. இன்றளவும் கேட்டாலும் கேட்கவரின் மனசை ஒரு துள்ளல் நிலைக்குப் போகச் செய்துவிடக்கூடிய தன்மை காஞ்சனின் குரலில் ஒலித்த லைலா ஓ லைலா பாடலுக்கு உண்டு.
இந்தப் பாடலும் படமும் வந்து ஒரு ஆறு வருடங்களுக்குப் பிறகு தமிழில் பாலாஜியின் தயாரிப்பில் கே விஜயனின் இயக்கத்தில் ரஜினிகாந்த் விஷ்ணுவர்த்தன், சிவாஜி கணேசன் மாதவி ஆகியோரின் நடிப்பில் விடுதலை எனும் பெயரில் ரீமேக் செய்து லைலா ஓ லைலாவை ராஜாவே ராஜா என மாற்றி ஒரிஜினல் லைலா பாடலையும் அந்த பாடல் ரசிகர்களின் மனதையும் ஒட்டு மொத்தமாக கொலை செய்து வைத்தார்கள். அதிலும் தலையில் இரட்டைக் கொம்புகள் கொண்ட ஒரு எமதர்ம க்ரீடத்தை மாட்டிக் கொண்டு சிவாஜி ரூரூ குலுகுலுகுலூ.. ரூரூ லுகுலுகுலகூ வென தன் மூஞ்சியை அஷ்ட கோணலுக்கு உள்ளாக்கி நடித்ததெல்லாம் கர்ண கொடூரத்தின் உச்சங்கள். நல்லவேளை படம் சட்டென்று பெட்டிக்குள் சுருண்டு கொண்டது.
இந்த லைலா ஓ லைலா இந்திப் பாடல் அன்றைய கச்சேரியில் குறைந்தது ஐந்தாறு தடவை கச்சேரி ரசிகர்களால் மீண்டும் மீண்டும் பாடச்சொல்லி கேட்கப்பட்டது. மெல்லிசைக் குழுவினரும் கொஞ்சமும் சளைக்காது பாடினார்கள் .
இதைத்தவிர அதே குர்பானி படத்தின் ஆப் ஜேஸா கொயி பாடலும் கச்சேரியில் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க மறுபடி மறுபடி பாடப்பட்டது.
ஆப் ஜேஸா கொயி பாடலுக்கு இசை அமைத்தவர் கர்நாடகாவில் பிறந்த பிட்டு அப்பையா. ( Biddu Appaiah. ) இவர் ஒரு பிரிட்டிஷ் இந்திய பாடகர். பாடலாசிரியர். உலகெங்கும் உள்ள மியூஸிக் ரைட்டர்களுக்காக வழங்கப்படும் Ivor Novello விருதை 1977ஆம் ஆண்டில் Best Song Writerக்காக வாங்கியவர்.
பிட்டுவின் இசையமைப்பில் ஆப் ஜேஸா கொயி பாடலைப் பாடியவர் நஸியா ஹாஸன் ( Nazia Hassan). நஸியா ஒரு பாக்கிஸ்தானி பாடகர், பாடலாசிரியர், லாயர் மற்றும் சோஸியல் ஆக்டிவிஸ்ட் என பன்முகத் திறமையாளர். 1981ஆம் ஆண்டுக்கான சிறந்த பெண் பாடகர் விருது நஸியாவுக்கு ஃபில்ம்ஃபேரால் இந்தப் பாடலைப் பாடியதற்காக வழங்கப்பட்டபோது அவருக்கு வயது 15. இவர் நிறைய பாப் மற்றும் டிஸ்கோ பாடல்களை எழுதி பாடியிருக்கிறார். Dreamer Deewane இவரது மிகவும் புகழ்பெற்ற மியூஸிக் ஆல்பம். 2000ல் தன் முப்பத்தைந்தாவது வயதில் அவர் இறந்து போனது அவரது இசை ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி.
அப்படிப்பட்ட இசை முக்கியத்துவம் வாய்ந்த பாடலை அன்றைக்கு கச்சேரியில் கேட்ட பல திருநெல்வேலி பொடிசுகள் பாடல் வரிகளை லட்சியம் செய்யாமல் தப்பும் தவறுமாய் உளறியபடி பாடிக் கொண்டலைந்தனர். அந்த அளவிற்கு அந்தப் பாடல் மற்றும் இசை அமைந்திருந்தது.
அந்நாளில் தில்லியிலிருந்து வண்ணார்பேட்டைக்கு வந்திருந்த இந்தி நன்றாக பேசத் தெரிந்த ஒரு அண்ணன் முன் இந்த ஆப் ஜேஸா பாடலை ஒரு எட்டு வயசு பொடிசு பாடிக்காட்டியது.
எப்படி..
ஆறு பைசா கோழீ
மேரா ஆறு பைசா கோழீ.
ஓ பாத்து பன்னு ஜாயே..
ஓ பாத்து பன்னு ஜாயே..
அந்த அண்ணன் தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்தவர் தான். எழுந்திருக்கவே இல்லை. அதன்பின் அந்த ஒரிஜினல் பாடலை ஒரு டீக்கடையில் போய் கேட்டுவிட்டு வந்த பின்னரே ஓரளவு தெம்பாய் ஊருக்குள் நடமாடினார்.
Comments