top of page

7. Systematic Investing Plan.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள்.

7. Systematic Investing Plan.

SIP அப்படியென்றால் Systematic Investing Plan. அதாவது திட்டவட்டமான ஒழுங்குமுறைப் படுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டம்.

எல்லாரும் நினைப்பது மாதிரி SIP என்பதே ஃபண்ட் திட்டம் அல்ல. ஒரு ஃபண்டிலோ அல்லது பங்குச் சந்தையிலோ ஒரு குறிப்பிட்ட கால அளவுகளில் முன் திட்டமிட்ட அளவு பணத்தை முதலீடு செய்து வருவதே SIP.

நீங்கள் உங்களுக்கான ஒரு ஃபண்டை முதலீட்டுக்கென தெரிவு செய்து விட்டீர்கள். அதில் மாதாமாதம் ஆயிரம் ரூபாய் வீதம் மூன்றாண்டுகளுக்கு பணம் முதலீடு செய்ய திட்டமிடுகிறீர்கள். இதை எப்படி செய்வது. நீங்கள் ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு உகந்த தேதிகளில் நீங்களாகவே முதலீடு செய்யலாம். அல்லது அந்த ஃபண்ட் AMCக்கு நீங்கள் முப்பத்தாறு முன் தேதியிட்ட காசோலைகள் கொடுக்கலாம். இப்படி இரண்டாவதாக செய்வதே SIP. முன் தேதியிட்ட காசோலைகளுக்குப் பதிலாக Direct Debit / Standing Instruction ஃபாரம் பூர்த்தி செய்து கொடுத்து விட்டீர்களெனில் ஃபண்ட் AMC நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக் கொண்டு உங்கள் ஃபண்ட் அக்கவுண்ட்டில் யூனிட்டுகளாக வரவு வைத்து விடுவார்கள்.

வாராவாரம் (weekly) அல்லது பதினைந்து நாட்களுக்கு (Bi-Monthly) ஒருமுறை அல்லது மாதாமாதம் (Monthly) அல்லது மூன்று மாதங்களுக்கு (Quarterly) ஒரு முறையென இன்டர்வெல்களில் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒரு குறிப்பிட்ட ஃபண்டில் முதலீடு செய்வதே SIP. எந்த தேதிகளை நீங்கள் தெரிவு செய்திருக்கிறீர்களோ அன்றைய NAV மதிப்பில் அந்த ஃபண்டின் யூனிட்டுகள் உங்களுக்கென வாங்கப்பட்டுவிடும். பணம் வங்கியிலிருந்து எடுத்துக் கொள்வார்கள்.

இது எவ்வகைகளில் ரெகுலர் முதலீட்டை விட சிறந்தது.

1. Rupee-Cost Averaging.
பங்குச் சந்தையென்பது ஏற்ற இறக்கங்களைக் கொண்டதென நமக்குத் தெரியும். இதைத்தான் Volatility என்கிறார்கள். ஃபண்டில் இருக்கும் பங்குகளின் பங்குச் சந்தை விலையைப் பொறுத்து ஃபண்டின் NAVயும் ஏறும் இறங்கும். பங்குச்சந்தைகளில் குறியீடு இறங்க இறங்க நல்ல தரமான பங்குகளை வாங்குவது என்பது நல்ல முதலீடு என்றும் கூறலாம். அப்போது குறைந்த விலைக்கு நிறைய பங்குகளை வாங்கலாம் அல்லவா. அதேதான் மியூச்சுவல் ஃபண்டுக்கும் பொருந்தும். ஆனால் பங்குச் சந்தை எப்போது இறங்கும் எப்போது ஏறும் யாருக்குத் தெரியும். எனவே பங்குச் சந்தைகளின ஏற்ற இறக்கத்தை கணக்கில் கொள்ளாமல் தொடர்ச்சியாக வாங்கிக் கொண்டேயிருக்கும் பொழுது ஏற்றத்தில் இருக்கும் பட்சத்தில் குறைவான யூனிடடுகளும் இறக்கத்தின் போது அதிக யூனிட்டுகளும் வாங்கி விடலாம். அதனைச் சராசரி எடுத்துப் பார்த்தோமானால் நாம் முதலீடு செய்த பணத்திற்கு அதிகமான யூனிட்டுகள் நமக்கு கிடைத்திருக்கும். இதைத் தான் Cost-Rupee Averaging என்கிறார்கள்.

இரண்டாவது Power Of Compounding.
எவ்வளவு சீக்கிரம் நீங்கள் முதலீடு செய்ய ஆரம்பிக்கிறீர்களோ அவ்வளவுக்கு சீக்கிரம் உங்கள் முதலீடு அதிக அளவில் நல்ல பலனைத் தரும். கிடைக்கும் இலாபமும் மீண்டும் முதலீடு செய்யப் பட்டு இலாபத்திற்கும் இலாபம் கிட்டும்.

உதாரணமாய் நீங்கள் உங்கள் நாற்பதாம் வயதிலிருந்து மாதம் பத்தாயிரம் வீதம் இருபது வருடங்களுக்கு சேமிக்க ஆரம்பிக்கிறீர்கள். இருபது வருடங்களுக்கு சேமிக்கிறீர்கள். நீங்கள் 24 இலட்ச ரூபாய் சேமித்திருப்பீர்கள். அதற்கு சராசரியாக வருடத்திற்கு 7% வட்டி கிடைக்கிறதென்று கொண்டோமானால் இந்த சேமிப்பானது உங்களின் அறுபதாம் வயதில் 52.4 இலட்சங்களாக மாறியிருக்கும்.

இதுவே நீங்கள் உங்கள் முப்பதாம் வயதில் மாதம் பத்தாயிரம் ரூபாய் வீதம் முப்பது வருடங்களுக்கு 7% இலாபத்தில் சேமித்திருப்பீர்களெனில் அந்த சேமிப்பு உங்கள் அறுபதாம் வயதில் 1.22 கோடியாக மாறியிருக்கும்.
இதுதான் Compound interest ன் மஹிமை.
இதுதான் SIP யின் பலன்.

இவைபோக SIPயில் நீங்கள் சேமிக்கத் துவங்கும் பொழுது உங்கள் சேமிப்பு பழக்கத்தில் ஒரு Discipline உருவாகிறது. மாதாமாதம் கண்டிப்பாய் ஒரு தொகையை நீங்கள் ஒதுக்கியே ஆகவேண்டும். இது ஒன்று.
இரண்டாவதாக நீங்கள் எப்போது வேண்டுமானாலும் சேமிப்பதை நிறுத்தி கொள்ளலாம். அல்லது எப்போது வேண்டுமானாலும் நீங்கள் சேமிக்க உத்தேசித்திருக்கும் தொகையை அதிகரித்துக் கொள்ளலாம். இந்த Flexibility இதில் கிடைக்கிறது.
மூன்றாவதாக மேற்சொன்ன Rupee Cost Averaging மற்றும் Power of Compounding போன்றவற்றின் முலம் நீண்ட நாள் சேமிப்பின் மீது வருமானம் நிச்சயமாய் அதிகரிக்கும்.

மொத்தத்தில் SIP மூலம் சேமிப்பதென்பது நம்மைப் போன்ற சிறு முதலீட்டாளர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாகவே இருக்கும்.

CONTACT

Tel: 9810488582| Tel: 7011144631 | sureshbarathan@gmail.com

Sign Up for Stay Connected

Thanks for submitting!

Follow me:

  • Black Facebook Icon
  • Black Twitter Icon

© 2022 by Suresh Barathan

bottom of page