4. சிறு முதலீட்டாளர்களுக்கான முதலீடுகள்.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள்.

சிறு முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்யவே முடியாதா.. அவர்கள் பங்குச் சந்தையின் இலாப நட்டங்களை பகிர்ந்து கொண்டு சம்பாதிக்கவே முடியாதா.. இதற்கெல்லாம் வழியே இல்லையா.
ஏனில்லை. அதற்குத்தான் மியூச்சுவல் ஃபண்டுகள் இருக்கின்றனவே..
பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விரும்பும் ஆனால் அதற்கான நேரமின்மையோ அல்லது போதிய புரிதல் இல்லாமையோ கொண்டவர்களிடமிருந்து பெற்ற பணத்தை(Pooled Funds) சிறந்த ஃபண்ட் மேனேஜர் ஒருவரைக் கொண்டு, பங்குச் சந்தையில் முதலீடு செய்து இலாபம் ஈட்டி பணம் போட்டவர்களுக்கு பிரித்துக் கொடுப்பதுதான் மியூச்சுவல் ஃபண்ட். பொதுவாக இது ஒரு AMC (Asset management company)யால் நடத்தப்படுகிறது. ஒரு AMC பல ஃபண்ட் திட்டங்களை நடத்துகிறது. இப்படி ஏகப்பட்ட AMCகள் இருக்கின்றன.
மியூச்சுவல் ஃபண்டுகள் பல வகைப்படும். பங்குதாரர்களைச் சேர்ப்பதில் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். Closed Ended மற்றும் Open Ended. இதில் Closed Ended என்பது வாடிக்கையாளர்களை ஃபண்ட் தொடங்கப்பட்ட ஆரம்ப நிலையில் மட்டும் சேர்த்துக் கொள்வார்கள். அதாவது NFO எனப்படும் New Fund Offerல் மட்டும் வாடிக்கையாளர்கள் சேர்க்கை நடைபெறும். மூன்றாண்டுகளுக்கான ஃபண்ட் அல்லது ஐந்தாண்டுகளுக்கான ஃபண்ட் என ஆரம்பிக்கும் பொழுதே சொல்லிவிடுவார்கள்.அதுதான் ஃபண்டின் Maturity period. ஒரு குறிப்பிட்ட நாள் வரை முதலீடு செய்யலாம். அப்புறம் வாசலை சாத்திவிடுவார்கள். யாரும் உள்ளே செல்லவோ வெளியேறவோ முடியாது. சில Closed Ended fundகள் பங்குச் சந்தைகளில் வர்த்தகமாகும். அப்போது வேண்டுமானால் விற்றுக் கொள்ளலாம். ஆனால் இந்த வர்த்தகம் வெகு அரிதாகவே நடைபெறுகிறது. லாபமோ நட்டமோ மெச்சூரிட்டி நாள் வரை காத்திருக்க வேண்டியதுதான். இலாபமானால் பணம் தருவார்கள். நட்டமானால் கையை விரித்து விடுவார்கள். UTI US 64 இப்படியான ஒரு Closed Ended Scheme.
மாறாக Open Ended Scheme ஃபண்டுகளில் NFO காலம் முடிந்த பின்னர் சில காலம் கழித்து அதில் பண முதலீட்டுக்கான கதவை திறப்பார்கள். எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். எப்போது வேண்டுமானாலும் பணத்தைத் திரும்பப் பெறலாம். அதற்கான சிறு தொகையை வசூலித்துக் கொண்டு உங்கள் விருப்பப் படி உங்களை சேர்த்துக் கொள்வார்கள். இல்லை நீங்கள் கழண்டு கொள்ளலாம். இன்வெஸ்ட் செய்வதற்கு Entry Load வாங்கிக் கொண்டு சேர்த்துக் கொண்டிருந்தார்கள். இப்போது எந்த ஃபண்டுக்கும் Entry Load வாங்கக் கூடாதென SEBI சொல்லிவிட்டது. குறிப்பிட்ட காலத்திற்குள் வெளியேறினீர்கள் என்றால் இப்போதும் Exit Load செலுத்தியாக வேண்டும். சராசரியாக 1% என்றிருக்கிறது இப்போது. பொதுவாக open ended ஃபண்டுகளே சிறு முதலீட்டாளர்களுக்கு சிறந்தது. ஃபண்டின் செயல்படுதிறனை ஆராய்ந்த பின்னர் நன்றாக இருந்தால் சேர்ந்து கொள்ளலாம். ஆனால் அப்படி சேர்வதில் அதிகம் ப்ரீமியம் செலுத்த வேண்டியிருக்கும். எப்படி.
பொதுவாக மியூச்சுவல் பண்டுகள் Unitகளாக விற்கப்படுகின்றன. NFO காலத்தில் ஒரு யூனிட் என்பது பத்து ரூபாயாக நிர்ணயிக்கப்படுகிறது. நீங்கள் ஆயிரம் ரூபாய் NFOவில் முதலீடு செய்தீர்கள் எனில் உங்கள் கணக்கில் நூறு Unitகள் வரவு வைக்கப்படும். மொத்தம் பத்து பேர் தலா ஆயிரம் ரூபாய் முதலீடு செய்திருக்கிறார்கள் எனக் கொள்வோம். மொத்தம் பத்தாயிரம் ரூபாய் சேர்ந்து விட்டது. இது Pooled Fund. மொத்தம் 1000 யூனிட்டுகள். இதில் கொஞ்சம் பணத்தைக் கையிருப்பாய் வைத்துக் கொண்டு பங்குச் சந்தையில் மீதப் பணத்தை முதலீடு செய்வார் மேனேஜர்.
ஒன்பதினாயிரம் ரூபாய் முதலீடு செய்து பத்து நல்ல கம்பனிகளின் பங்குகளை வாங்குகிறார் என்று கொள்வோம். அன்றைய தினத்தில் பங்குச் சந்தை காளை வசமிருந்து மேனேஜர் முதலீடு செய்த பங்குகள் எல்லாம் விலையேறி முடிகிறது. நூறு ரூபாய் இலாபம் கிடைக்கிறது. இந்த நூறு ரூபாயை முதலீட்டில் உள்ள 1000 யூனிட்டுகளுக்கு சரி விகிதமாய்பிரித்து கொடுத்து விடுவார்கள். 100/ 1000=0.1. இப்போது யூனிட்டின் மதிப்பு 10.1ரூபாயாக மாறிவிட்டது. இப்படித்தான் ஒவ்வொரு நாளின் இலாபத்திற்கேற்ப யூனிட்டின் மதிப்பு ஏறிக்கொண்டை இருக்கும். நட்ட தினத்தில் யூனிட்டின் மதிப்பு குறையும். இதைத்தான் NAV என்கிறார்கள்.
NFO வில் முதலீடு செய்யாமல் பின் தேதிகளில் முதலீடு செய்பவர்களுக்கு பத்து ரூபாயில் யூனிட்டுகள் கிடைக்காது. Nav விலையில் தான் கிடைக்கும். நீங்கள் வாங்கப் போகும் பொழுது ஃபண்டின் NAV 12 ரூபாயெனில் நீங்கள் முதலீடு செய்யும் ஒவ்வொரு நூறு ரூபாய்க்கும் 83.3333 யூனிட்டுகள் உங்கள் கணக்கில் வைப்பார்கள். ஆம். மியூச்சுவல் ஃபண்டின் யூனிட்டுகள் தசம புள்ளிக்குப் பின் நான்கு இலக்கம் வரை கணக்கிடுகிறார்கள்.
இப்போது பாருங்கள். நீங்கள் ஆயிரம் ரூபாய் தான் முதலீடு செய்திருக்கிறீர்கள். அந்த ஆயிரம் ரூபாயைக் கொண்டு பங்குச் சந்தையில் ஒன்றோ இரண்டோ பங்குகள் தான் வாங்க முடியும். ஆனால் அந்த ஆயிரம் ரூபாயை மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்யும் பொழுது அது Pooled Fund உடன் இணந்து மொத்தமாய் வாங்கப்படும் பத்து கம்பனிகளின் பங்குகளை வாங்கப் பயன்பட்டு கிடைக்கும் இலாபம் NAV யில் சேர்க்கப் படுகிறது. NAV விலை உயர உயர உங்கள் முதலீடும் உயர்கறிது.
NAV 12 ரூபாயாக இருக்கும் பொழுது நீங்கள் செய்த ஆயிரம் ரூபாய் முதலீடானது (83.3333 யூனிட்டுகள்) பதினைந்து ரூபாயாக மாறும் பொழுது உங்கள் முதலீடு 1250 ரூபாயாக மாறுகிறது. இதுதான் இலாபம். ஆனால்12 ரூபாய் NAV 15 ரூபாயாக மாற குறைந்த பட்சம் மூன்றிலிருந்து நான்கு மாதங்கள் ஆகலாம். பங்குச் சந்தையும் விடாமல் ஏறு முகத்தில் இருக்க வேண்டும்.