மியூச்சுவல் ஃபண்டை எப்படித் தேர்ந்தெடுப்பது...?
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள்.

இதுவரை மியூச்சுவல் ஃபண்டுகளைப் பற்றிய அடிப்படை விசயங்களை பார்த்தோம். இப்போது அவற்றில் எப்படி முதலீடு செய்வது செய்த முதலீட்டை எவ்வாறு கண்காணிப்பது போன்ற விசயங்களைப் பார்க்கலாம்.
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய உங்களுக்கு வேண்டியதெல்லாம்
1. உங்கள் பெயரில் ஒரு பான் கார்டு.
2. உங்கள் பெயரில் ஒரு வங்கிக் கணக்கு.
3. உங்கள் முகவரிச் சான்று.
4.ஒரு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்.
இவை மட்டுமே போதுமானது. இவற்றைக் கொண்டு KYC application ஃபாரத்தை நிரப்பி விடலாம்.
Prevention of Money Laundering Act 2002ன்படி வங்கியில் கணக்கு வைத்திருப்பவருக்கு மற்றும் பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளுக்கு KYC என்றழைக்கப்படும் KNOW YOUR CUSTOMER என்பது மிக மிக அவசியமாகிறது.
ஒவ்வொரு மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டிற்கும் அந்தந்த ஃபண்டின் விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டியது அவசியம். ஒவ்வொரு ஃபண்டிற்கும் நீங்கள் விண்ணப்பிக்கும் போது ஒரு ஃபோலியோ எண் ஒதுக்குவார்கள். நீங்கள் இந்த ஃபண்டை வாங்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் செலுத்தும் பணத்திற்கு நிகரான யூனிட்டுகள் இந்த ஃபோலியோ எண்ணில் தான் வரவு வைக்கப்படும். ஓவ்வொரு முறை நீங்கள் சேமிப்பிலிருந்து பணத்தை வெளியே எடுக்கும் பொழுது பணத்திற்கு நிகரான யூனிட்டுகள் இந்த கணக்கிலிருந்து தான் கழிக்கப்படும். எனவே ஒவ்வொரு ஃபண்டிற்கும் ஒரு ஃபோலியோ எண் துவங்குவதற்கே இந்த விண்ணப்பம். ஒரே AMC யின் வெவ்வேறு ஃபண்டுகளை ஒரே ஃபோலியோவிலும் வாங்கும் வசதிகள் இருக்கின்றன.
கணக்கு துவங்க ஒரு விண்ணப்பம். அதிலேயே நீங்கள் மொத்த முதலீடா அல்லது மாதாமாதம் செலுத்தும் SIP முதலீடா என்ற கேள்வியும் இருக்கும். SIP என்றால் மாதாந்திரத் தொகை எவ்வளவு எந்த கால அளவுகளில் முதலீடு எந்தெந்த தேதிகளில் போன்ற விபரங்களை இந்த விண்ணப்பப் படிவத்திலேயே பூர்த்தி செய்து கொடுத்து விடலாம். SIP முறையிலான முதலீடு எனில் நீங்கள் முன்தேதியிட்ட காசோலைகள் தருகிறீர்களெனில் அதற்கான விபரங்கள் அல்லது வங்கியிலிருந்து நேரடியாக பணத்தை எடுத்துக் கொள்ள AUTO DEBIT ஃபாரம் மற்றும் வங்கிக்கு கொடுக்கவென STANDING INSTRUCTION ஃபாரம் போன்றவற்றை நிரப்பிக் கொடுக்க வேண்டியிருக்கும்.
எங்கே கொடுப்பது...
Direct Plan: 2013 ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்து எல்லா மியூச்சுவல் ஃபண்டின் AMC கள் Direct Plan என்றோரு திட்டத்தை அறிமுகப் படுத்தினார்கள். இந்த திட்டங்களில் இடைத்தரகர்கள் இல்லை. நேரடியாக AMCகளிலேயே முதலீடு செய்ய வசதி செய்யப்பட்டது. இதனால் ஃபண்டின் செலவீனங்கள் குறைந்தன. ஆனால் எல்லா நகரங்களிலும் இந்த வசதியில்லை.பெரு நகரங்களிலேயே இந்த வசதி இருக்கிறது.
Through Intermediaries: இடைநிலை தரகர்கள். இன்றைய தேதிகளில் நிறைய இடைநிலை தரகர்கள் இருக்கிறார்கள். முக்கிய அரசு வங்கிகள் (SBI போன்றவை), தனியார் வங்கிகள் (ICICI போன்றவை) எல்லாம் இந்த வேலையைச் செய்கிறார்கள். இவர்களைத் தவிர நிறைய தனியார் கம்பனிகள் (Indiabulls, Sharekhan, Reliance Money போன்றவை)கூட இருக்கின்றன. நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் எந்த தரகுக் கம்பனி குறைவான கமிஷனில் தரமான சேவை தருகின்றது என்று கண்டுபிடிப்பதே. கண்டுபிடித்து விட்டீர்களெனில் அவர்கள் மூலமாக முதலீடு செய்யலாம்.
Through Individual Financial Advisors: இவர்கள் மூலமாகவும் முதலீடு செய்யலாம். ஆனால் நீங்கள் செய்யவேண்டியது இவரின் கல்வித் தகுதி என்ன. இதற்கான முறையான லைசென்ஸ் வைத்திருக்கிறாரா என்றெல்லாம் பார்க்க வேண்டும். அது மட்டுமல்லாமல் இவர் சரியான ஃபண்டைத் தான் பரிந்துரைக்கிறாரா என்றெல்லாம் கூட பரிசோதித்து பார்த்தல் அவசியம். இவர் ஏதேனும் ஃபண்டு AMC க்கு முகவராய்கூட இருப்பார். அதற்கு அவருக்கு கமிஷன் அதிகம் கிடைக்கும். முகவரில்லாத ஃபண்டுக்கும் இவருக்கு கமிஷன் கிடைக்கும். ஆனால் தொகை குறைவாய் இருக்கும். (மியூச்சுவல் ஃபண்ட் முகவராய் தகுதி பெற AmfiIndia (Association of Mutual funds in India) என்றொரு அமைப்பு தேர்வெல்லாம் நடத்துகிறது. ARMFA தேர்வு. அதில் பரீட்சை எழுதி தேர்ச்சி பெற்றால் மட்டுமே முகவராய் ஆக முடியும். ஆனால் இப்படி தேர்ச்சி பெற்றவர்கள் தங்களுக்குக் கீழே தேர்ச்சி பெறாத வெறும் விற்பனை பிரதிநிதிகள் மூலம் ஃபண்டுகளை விற்கிறார்கள். அதனாலேயே சரியான பரிந்துரைகள் அறிவுரைகள் மக்களுக்கு போய் சேர்வதில்லை. www.amfiindia.com இணையதளத்தில் கொள்ளை கொள்ளையாய் தகவல்கள் இருக்கின்றன.)
மியூச்சுவல் ஃபண்டில் நீங்கள் முதலீடு செய்யும் பொழுது உங்கள் ஃபோலியோ எண் மற்றும் அவற்றில் உங்கள் யூனிட்டுகள் யாவுமே Demat ஃபார்மேட்டில் தான் வைக்கப் படுகின்றன. எனவே நீங்கள் முதன்முதலில் ஒரு டீமேட் மற்றும் ட்ரேடிங் அக்கவுண்ட் ஒன்று துவங்கி விட்டீர்களெனில அந்த ட்ரேடிங்க் அக்கவுண்ட் முலமாகவே உங்கள் முதலீடுகளை இலகுவாகச் செய்யலாம். அதாவது வாங்கலாம் விற்கலாம் இரண்டிற்குமே ஃபாரங்கள் நிரப்பத் தேவை இருக்காது.
இடைநிலை தரகர்கள் அனைவரும், கம்பனியாக இருந்தாலும் சரி அல்லது தனி நபராக இருந்தாலும் சரி , கட்டாயமாக AMFIINDIAவில் பதிவு பெற்ற நபராய் இருத்தல் அவசியம். இப்படி பதிவு செய்த கம்பனிகளின் இணையதளங்கள் மூலமாகவும் நீங்கள் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முலீடு செய்யலாம்.
இணைய தளங்கள் பலவற்றில் போர்ட்ஃபோலியோ மேனேஜர் என்றொரு சங்கதி வைத்திருக்கிறார்கள் அதில் நீங்கள் வாங்கிய ஃபண்டு திட்டங்களை பதிவு செய்து கொண்டீர்களெனில் அந்த ஃபண்டின் அப்டுடேட் NAVகளை தெரிந்து கொள்ளலாம். அது நீங்கள் முதலீடு செய்த தேதி மற்றும் பணத்தின் அளவைக் கொண்டு உங்கள் கணக்கில் எத்தனை யூனிட்டுகள் உள்ளன. அவற்றின் அன்றாட மதிப்பு எவ்வளவு இலாபத்தில இருக்கிறீர்களா நட்டத்தில் இருக்கிறீர்களா எத்தனை சதவிகிதம் இலாபம் அல்லது நட்டம் என்று அக்கு வேறு ஆணி வேறாய் பிரித்து மேய்ந்து இதில் மேலும் முதலீடு செய்யலாமா அல்லது அப்படியே ஹோல்டில் போடலாமா அல்லது விற்றுத் தொலைத்து விடலாமா என்றெல்லாம் யோசனைகள் கூட தருவனவாய் இருக்கின்றன. இதையெல்லாம் அந்த இணையதளங்கள் காசு வாங்காமல் ஓசியில் அளிக்கிறார்கள் என்பது கூடுதல் நல்ல தகவல். ஓசியிலேயே கடைசி வரை காலத்தை தள்ளலாம். அல்லது அவர்கள் கேட்கும் கட்டணங்களை கொடுத்தீர்களெனில் இன்னும் நிறைய சங்கதிகளெல்லாம் தருவார்கள். எந்த ஃபண்டில் அல்லது பங்கில் எப்போது முதலீடு செய்யலாம் எப்போது வெளியேறலாம் போன்ற அறிவுரைகளையும் வழங்குவார்கள்.
நீங்கள் அடுத்து செய்ய வேண்டியது நல்ல தரமான ஃமியூச்சுவல் ஃபண்டுகளைத் தெரிவு செய்வதே.
நல்ல ஃபண்டுகளை எப்படி தெரிவு செய்வது. இதற்கெல்லாம் ஏராளமான இணைய தளங்கள் இருக்கின்றன. அவற்றை பார்த்து படித்துக் கொண்டாலே போதும். நான் குறிப்பாக மூன்று இணையதளங்களை தருகிறேன்.
1. www.valueresearchinline.com
2. www.moneycontrol.com
இரண்டு தளங்களிலும் நீங்கள் உங்களுக்கென ஒரு லாகின் ஏற்படுத்திக் கொண்டீர்களெனில் (இலவசமாய்த் தருகின்கிறார்கள்) நிறைய நிறைய விசயங்கள் தருகிறார்கள். படியுங்கள் படியுங்கள் இவற்றைப் பற்றிய விவரங்களை சேகரியுங்கள்.
மாதம் ஐந்தாயிரம் ரூபாய் சேமிக்க உத்தேசித்திருக்கிறீர்களெனில் மூன்று அல்லது ஐந்து ஃபண்டுகளை தெரிவு செய்து கொள்ளுங்கள். இல்லை மாதம் மூவாயிரம் ரூபாய் வரை சேமிக்கிறீர்களெனில் இரண்டு அல்லது மூன்று ஃபண்டுகளை தெரிவு செய்து கொள்ளுங்கள். அளவுக்கு அதிமான எண்ணிக்கையில் ஃபண்டுகளை தெரிவு செய்வீர்களெனில் கண்காணிப்பது மேனேஜ் செய்வதெல்லாம் சிரமமாய் இருக்கும்.
எந்த முதலீடு செய்தாலும் சுய அறிவின் சிந்தனையின் பேரில் முதலீடு செய்யுங்கள். யாரேனும் சொன்னார்கள் அல்லது பரிந்துரை செய்தாரகள். அல்லது எனக்குத் தெரிந்த ஒருவர் இதிலேதான் முதலீடு செய்து நல்ல இலாபம் சம்பாதித்தார் அதனால் நானும் அதிலேயே முதலீடு செய்கிறேன் என்றெல்லாம் செய்யாதீர்கள்.
எதில் முதலீடு செய்ய இருக்கிறீர்களோ அதைப் பற்றி நன்கு அறிந்து கொண்டு முதலீடு செய்வது நல்லது.
ஏனெனில் நீங்கள் முதலீடு செய்வது உங்கள் கடின உழைப்பில் சம்பாதித்த பணம். அதைப் பாதுகாப்பது உங்கள் பொறுப்பு.
HAPPY INVESTING.