மனைவி வேலைக்குப் போய்விட்டாள் ... ( வேறு ஊருக்கு ... )
கவிதையும் சூழலும்

நான் அரசு வேலைக்கு போகக்கூடாது என்ற தீவிர கொள்கையில் இருந்தவன். காரணங்கள் பல உண்டு. அவற்றில் முக்கியமான ஒன்றாய் இருந்தது "அரசு ஊழியர்கள் ஒழுங்காய் வேலை செய்வதில்லை" என்ற பொதுவான மனநிலை. அப்படி ஒரு சூழ்நிலையில் என்னை ஒரு போதும் பொருத்திக் கொள்ளக் கூடாது என்று நினைத்திருந்தேன்.
தந்தை அரசு அலுவலகத்தில் அலுவலக/ஆய்வகப் பையன் என்றழைக்கப்பட்ட ப்யூன் வேலையில் இருந்தார். என் மனைவியின் தாய் அரசு பொதுப் பணித்துறையில் கிளார்க்காக இருந்தார். தங்கை கணவர் இரயில்வேயில் பணிபுரிகிறார். நான் ஒருவன் மட்டுமே தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். இரண்டாயிரத்தில் என்னுடைய மாத வருமானம் ரூபாய் மூவாயிரத்து ஐநூறாக மட்டுமே இருந்தது. என் மகள் பிறந்த சமயம் அது.
நான் உறவினர்களுக்கு மத்தியில் பெரியம்மா பிள்ளைகளான இரண்டு அக்காக்களுடனும் ஒரு அண்ணனுடனும் ஒன்றாய் வளர்ந்தவன். அவர்கள் அனைவரும் அரசு பணியில் இருப்பவர்கள்.
இந்தச் சூழலில்தான் என்னை எல்லாரும் வற்புறுத்தி அரசு வேலைக்கு விண்ணப்பிக்கச் சொன்னார்கள். தனியாரில் வேலை பார்த்த இந்த ஏழை சொல் அம்பலத்திலேறவில்லை. விண்ணபித்தேன். பரீட்சை எழுதினேன். தேர்ச்சியும் பெற்று விட்டேன். வேலையில் வந்து சேரும்படி ஓலை வந்த போதும் கூட மறுத்துப் பார்த்தேன். அதுவரை ஒன்றுமே சொல்லாத மனைவி கூட அரசு வேலை என்றால் நம் குழந்தையை நல்ல முறையில் படிக்கவைக்கலாம் என்று சொன்னபோது என்னால் மறுக்க முடியவில்லை.
இரண்டாயிரத்து ஒன்று அக்டோபரில்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் போஸ்டிங்க். எல்லாரும் குண்டுகட்டாய்த்தூக்கி என்னை இரயிலேற்றி விட்டுவிட்டார்கள்.
மனைவியைப் பிரிந்து ஒருவயது மகளைப் பிரிந்து எவ்வளவு நாள் மொழிதெரியாத சோறில்லாத ஊரில் வாழ்வது. நேராய் பதினைந்து நாட்களில் வீடுகூட பார்க்காமல் இருக்கும் ஒரு சிறு அறைக்கே இருவரையும் அழைத்து வந்துவிட்டேன்.
எட்டு வருடங்கள் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது.
இப்போது நம் தலைவி நானும் வேலைக்குப் போவேன் என்று கூற ஆரம்பித்தார். நான் என்ன சொல்ல.
மறுத்தேனென்றால் நான் ஆணாதிக்கவாதியாக கருதப்படுவேன். மறுக்கவில்லையானாலும் எனக்கு இஷ்டமில்லை என்று சொல்லிவந்தேன். அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று என்னால் என் மனைவியைப் பிரிந்திருக்க முடியவே முடியாது. இரண்டாவது காரணம் வீட்டில் ஒருவருக்கு அரசு உத்தியோகமிருக்கிறது. சுமாரான நிரந்தர வருமானம் வருகிறது. போதாதா என்ற கேள்வி சதா ஒலித்துக் கொண்டேயிருந்தது. ஆனாலும் தலைவி பல வேலைகளுக்கு விண்ணப்பித்தார். பல பரீட்சைகள் எழுதினார். அதிலொன்றாய் நான் வேலை பார்க்கும் NICக்கும் விண்டப்பித்து பரீட்சை எழுதியிருந்தார். அதிலேயே வேலையும் கிடைத்து விட்டது. அவர் வேலைக்கு அமர்த்தப்பட்ட இடம் நானிருக்கும் இடத்திலிருந்து அறுநூறு கி.மீ. தூரத்தில் இருந்த சம்பல் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்பட்ட, பூலான் தேவியால் பேரும் புகழுமடைந்த, பாதுகாப்பு என்ற வார்த்தைக்கு அர்த்தமோ இடமோ இல்லாத தோல்பூர் (ஆக்ராவிற்கு அருகில்) மாவட்டத்தில். இப்போதும் வேண்டாமென சொல்லி விடலாம் என்று கூறிப் பார்த்தேன்.
ம்ஹும்.
கிளம்பிவிட்டார். மூட்டை முடிச்சுகளுடனும் மகளுடனும்.
என் முப்பத்தெட்டாம் வயதில் முதன்முறையாய் தனித்து விடப்பட்டேன். அப்போது எழுதியது இந்தக் கவிதை.
எழுதியது இரண்டாயிரத்து பத்தாம் வருடம்.
உறவுகளின் அருகாமையின்மையும்
தொலைபேசியின் அழைப்பு மணியின்
நெடுங்கால மௌனமும்
அந்தகார பெருஞ்சுழிக்குள்
அழுத்திவிடுகின்றன ...
ட்விட்ஸ் இல்லாமல் கழிகின்றன
இருபத்தியொரு நாட்கள்... !
ஓட்டுக்குள் சுருங்கின
நத்தையாய் நகர்கின்றது
வாழ்க்கை ... !