வாழ்க்கை
கவிதையும் சூழலும்

திருநெல்வேலியில் தொண்ணூறுகளிலேயே எழுநூறு ஊழியர்களுடன் இயங்கி வந்த தனியார் நிறுவனமான எஸ்.ஜி.ஜெயராஜ் நாடார் குழுமம் சார்ந்த கம்ப்யூட்டர் அகடமியில் நான் தொண்ணூற்று நான்கில் கம்ப்யூட்டர் ஆசிரியனாக வேலைக்குச் சேர்ந்தேன். அதற்கு முன்னர் தான் நூலகம் சார்ந்து பத்திரிக்கை நடத்தியது, நிறைய வாசித்தது, கவிதைகள் எழுதியது எல்லாம்.
ஜெயராஜ நாடார் கம்பனி உத்தியோகம் என்றால் கையொப்பமிடாமல் கொடுத்த அடிமைச் சாசனம் என்றுதான் பொருள். தொண்ணுற்று நான்கு பிப்ரவரி மாதத்தில் இரண்டு சுற்று நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்று வேலை உறுதியாயிற்று. மாதம் எழுநுறு ரூபாய் சம்பளம். காலை எட்டு மணி முதல் மாலை ஐந்து மணி வரை வேலை. ஆனால் காலை ஆறு மணிக்கே ஆரம்பமாகிவிடும் வகுப்புகள் இரவில் பத்து மணி வரை நடக்கும். எனவே வீட்டிலிருந்து காலை ஐந்தரை மணிக்கு சைக்கிளில் கிளம்பினால் வீடு வந்தடைய இரவு பத்தரையாகிவிடும். இப்படி கம்பனியே கதியென வேலை பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் எங்கிருந்து வாசிக்க... எங்கிருந்து கவிதையெழுத... சதா கம்பனி நினைவில் சுற்றிக் கொண்டிருந்த கால கட்டம்.
அந்த பணியில் பசுமை நினைவுகளை அள்ளி அள்ளி தெளித்துக் கொண்டிருநத்ததெல்லாம் அங்கே படிக்க வந்த கல்லூரிப் பெண்கள் கூட்டம் ஒன்றுதான்.
திருநெல்வேலியில் மூன்று பெண்கள் கலைக் கல்லூரிகள் மற்றும் ஆணும் பெண்ணுமாய் சேர்ந்து படித்த அரசு பொறியியற்கல்லூரி என நான்கு கல்லூரியிலும் கம்ப்யூட்டர் படித்த அத்தனை பெண்களும் கிட்டத்தட்ட அத்தனை பெண்களும் இந்த அகடமியில் தான் படித்தார்கள். எத்தனையோ பெண்கள் வகுப்பிற்கு ஆசிரியராய் இருந்திருக்கிறேன். என்னிடம் படித்த அரசு பொறியியல் கல்லுரி மாணவிகளில் ஒருவர் ரஹ்மத்து நிஷா எனபவர் இப்போது நான் வேலை பார்க்கும் நேஷனல் இன்ஃபார்மெடிக்ஸ் சென்டரில் (NIC) என்னைவிட உயர் பதவியில் இருக்கிறார். ( நான் தாமதமாக அரசு பணியில் சேரந்தவன்). சாரதா கலைக்கலூரி மாணவி ஒருவரும் என்னுடைய அலுவலகத்தில் எனக்கு சமமான பதவியில் இருக்கிறார் (இவரைப் பற்றி இன்னொரு பதிவில்).
அந்த அகடமியில் என்னிடம் படித்த நிறைய மாணவிகளில் ஒருவர் இந்துமதி. அவரது வகுப்பில் ஓர்நாள் பாடம் சம்பந்தமில்லாமல் பொதுவான பொழுது போக்குகள் வாசிப்பனுபவங்கள் பற்றிய உரையாடல் ஒன்று நிகழ்ந்தது. அப்போது பேச்சு கவிதை பற்றி திரும்ப நான் என்னுடைய பழைய அனுபவங்களை கூறினேன். எழுதுவதை நிறுத்தி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது என்பதையும் அவ்வுரையாடலில் குறிப்பிட்டேன். மிகவும் உரிமையாய் நீங்கள் ஏன் மீண்டும் எழுதக் கூடாது என்று கேடட்டார். பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வாழ்க்கையாய் போனதை அவரிடம் கூறி கொஞ்சம் சிரமமே எனறேன். எனக்காக ஒரே ஒரு கவிதை எழுதுங்கள் என்றார். அவருடைய இடைவிடாத அன்பு வற்புறுத்துதலின் பேரில் எழுதியதுதான் வாழ்க்கை என்ற கவிதை.
வாழ்க்கை தன்
வழக்குகளால்
என் சிறகழிக்கும்...
உள்ளேற்றி வைத்த
அக்னிக் குஞ்சு
தன் பங்காய் என்னை
எரித்தொழிக்கும்....
இருப்பினும் ....
எரிந்து விழுந்த
என் சாம்பலிலிருந்தும்
மீண்டும் பிறக்கும்
ஃபீனிக்ஸ் பறவையாய்
என் கவிதை .....
இந்தகவிதையை நான் எழுதியது அந்த SGJ Academyயின் ஒரு வகுப்பறையில். அதுவும் இந்துமதிக்காக. எழுதிய அந்த கவிதைத்தாளை அவரிடமே தந்துவிட்டேன்.
இதெல்லாம் நடந்தது தொண்ணூற்று ஆறில். என் மகளுக்கு நான் கவிதையெல்லாம் எழுதியவன் என்று தெரியாத மூன்று வருடங்களுக்கு முன்னரே அவள் (ஆங்கிலத்தில்) எழுத ஆரம்பித்து, நிறைய எழுதி விட்டாள். அவள் எழுவதற்கு தேர்ந்தேடுத்துக் கொண்ட பெயர் ஃபீனிக்ஸ்.
வாழ்க்கை என்றுமே விசித்திரமான ஆச்சர்யங்களின் பக்கங்களால் ஆன புத்தகம்.