top of page

வலையில் சிக்காத மீன்கள் Copy

கவிதையும் சூழலும்

வலையில் சிக்காத மீன்கள் Copy

What is the psychology behind men staring at womens' breast. என்ற கேள்விக்கு Google Evolutionary psychology என பதில் சொல்கிறது. உலகெங்கிலும் ஆண்கள் பெண்களின் மார்பகங்களை வெறித்து பார்த்த படி இருக்கிறார்கள். அது தவறென உலக்தின் பெண்கள் முக்கால்வாசிக்கும் அதிகம் பேர் கூறுகின்றனர். கால்வாசிக்கும் குறைவான பெண்கள் தன் மார்பழகை எடுப்பாய்க் காட்ட முயற்சியும் செய்கிறார்கள். நமக்கு அக்கால்வாசிப் பேரைப் பற்றி கவலையோ அல்லது கருத்தோ இல்லை. வெகுவாக பெண்கள் தங்கள் மார்பகங்களை வெறித்துப் பார்க்கும் ஆண்களை விரும்புவதில்லை.

மாறாக, ஆண் ஒரு பெண்ணை முதலில் அவள் முக்தைப் பார்க்கிறான் பின் நேராக அவள் மார்பகங்களையே பார்க்கிறான். பின்னர் அது தவறென உணர்ந்தவன் பார்வையைச் சடுதியில் விலக்கிக் கொள்கிறான். உணராதவன் நிலை வேறு.

நான் பொருணை பாயும் திருநெல்வேலியில் பிறந்து வளர்ந்த காரணத்தினால் நதி நீராடல் எனபது தினசரி வாடிக்கை. வேலையில்லாமல் திரிந்த வேளைகளில் நான் பதினோரு மணியளவிலே நீராடச் செலவது வழக்கம். அவ்வேளைகளில் நதியில் நீராடுபவர்கள் மிகக் குறைவாய் இருப்பார்கள்.

அந்நேரத்தில் தான் மீன்பிடிப்பவர்கள் வருவார்கள். அவர்கள் தங்கள் வலையை கைககளில் பரப்பி வீசி எறிவது மிக அழகான காட்சி. பின் அதை மெதுவாக இழுப்பார்கள். இழுத்துக் கொண்டிருக்கும்போதே வலையின் இழுபட்ட பகுதியில் சிக்கிய ஓரளவு சுமாரான அளவில் பெரிய மீன்களை தன் தலை மேலிருக்கும் மூங்கில் கூடையில் போட்டுக் கொள்வார்கள். சிறு சிறு மீன்களை மீண்டும் ஆற்றிலேயே விட்டுவிடுவார்கள். நான் அப்போதெல்லாம் அவர்கள் பக்கத்திலேயே நின்று வேடிக்கை பார்ப்பது வழக்கமாய் கொண்டிருந்தேன்.

பார்த்ததும் சிரித்துக் கொள்ளும் அளவிற்கு தினசரி வரும் மீனகாரர் ஒருவருடன் சிநேகமாயிற்று. வலையை வீசியெறிய முடியாது அவ்வளவு தெம்பு கைகளுக்கு கிடையாது என்று தெரிந்ததினால் நீரினிலிருந்து இழுத்தாவது பார்த்துவிடவேண்டுமென ஆவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமிருந்தது. அதை நான் அவரிடம் கூற சரி இழுத்துத்தான் பாரேன் என கூறிவிட்டார். நல்லவேளை வலையின் நுனிப் பகுதியை அவர் தன் கையிலேயே வைத்திருந்தார். நான் இழுக்க முயற்சிக்கிறேன். ம்ஹும். முடியவேயில்லையே. அத்தனை கனம். இவ்வளவிற்கும் அந்த வலை வீச்சில் சிக்கிய மீன்களின் எண்ணிக்கை எப்போதும் சிக்கும் மீன்களை விட மிக மிகக்குறைவு. அப்போது புரிந்தது எத்தனை உரம் பாய்ந்த கைகள் அவருடையதென. அவர் ஒல்லியான தேகந்தான் எனினும் வைரம் பாய்ந்த கைகள். என் மீதே கழிவிரக்கம் உண்டான நாள் அது. எத்தனை பூஞ்சையானது என் உடம்பு.

தற்சமயம் வசிக்கும் தில்லி மாநகரிலும் யமுணை நதி ஓடுகிறது. அதில் குளிக்கவெல்லாம் முடியாது. ஆனால் அந்நதியில் மீன் பிடித்து விற்பவர்கள் ஏராளம் பேர். அதிலொரு பெண்மணி எங்கள் குடியிருப்புப் பகுதியில் மீன்கடை வைத்திருக்கிறார். சிறிய பெட்டிக்கடை போன்றதோர் மீன்கடை. அவர்தான் மீன் பிடிக்கிறாரா என்றெல்லாம் எனக்குத் தெரியாது. அவர் மீனறுப்பதற்காய் வைத்திருக்கும் கத்தி மிக்கூர்மையானது. அதை அவர் கையாளும் லாவகமும் அலாதியானது.
ஓர்நாள் அவர் கடையில் அவர் வேலை பார்த்துக் கொண்டிருந்த வேளையில் அவரது சற்றே திரந்திருந்த மார்பகங்களை வருவோரெல்லாம் வெறித்தபடியே மீன் வாங்கிச் சென்றனர். அது வருந்தத் தக்க நிகழ்வாய் மனதில் பதிய ஒரு வேளை அவரே அருகிலுள்ள குளத்தில் மீன் பிடிப்பவராய் இருந்து வலை வீசியிருப்பாராயின் அவரது கைகளுக்கு எவ்வளவு தெம்பிருக்கும். அத்தெம்பு இப்படி அவர் மார்பை வெறிப்பவரிடம் பலனற்று போனதே. என பலவாறு சிந்தனைகளோட பிறந்த கவிதை இது.

வலையில் சிக்காத மீன்கள்.
=======================
மீனறுத்து எடையிடுமவளின்
முந்தானை விலகலில் பார்வையை
நிலைகுத்தி நிற்கும் உன்
குறியறுத்துப்போடும் கூர்மையுண்டு
அவள் கத்திக்கு.
வறுமைக்கு வாழ்க்கைப்பட்ட
அவள் மௌனத்தின்
ஆங்காரமறியாத
பூஞ்சை வாடிக்கையாளன் நீ.
நடு குளத்தில்
தொடையளவு ஆழத்தில்
கைபரப்பி வீசியெறியும்
அவள் வலையிழுக்க
வலுவில்லாக் கைகளைக்
கொண்டவன் நீ.
வலையில் சிக்கிய
சிறுமீன் குஞ்சுகளை
மீண்டும் குளத்துக்குள் விட்டுவிட்டு
குறுநகை பூப்பவள் அவள்.
சுருட்டிக் கொண்டு போ
உன் வாலையும்
எச்சிலொழுக நீட்டிக் கொண்டிருக்கும்
உன் நாக்கையும்.

CONTACT

Tel: 9810488582| Tel: 7011144631 | sureshbarathan@gmail.com

Sign Up for Stay Connected

Thanks for submitting!

Follow me:

  • Black Facebook Icon
  • Black Twitter Icon

© 2022 by Suresh Barathan

bottom of page