வற்றாத ஜீவநதி
கவிதையும் சூழலும்

அது 92 அல்லது 93 ஆம் வருஷம்னு நினைக்கிறேன். வண்ணார் பேட்டை கிளை நூலகத்தில் இயங்கிய வாசகர் வட்டம் சார்பா எரிதழல் கையெழுத்து பத்திரிக்கை நடத்திக் கொண்டிருந்த சமயம்.
சென்ஸஸ் ஆபீஸ் வேலை முடிந்து விட்டது.தற்போது வேலையில்லை.
அப்போதான் கொஞ்சம் கொஞ்சமாய் எழுத ஆரம்பித்திருந்தேன். எழுதறதுக்காக நிறைய வாசிப்பேன். புத்தகங்கள் காசு கொடுத்தெல்லாம் வாங்க முடியாது. அதனால நூலகமே கதியாய்க் கிடப்பேன். நூலகர் வருமுன் நான் நூலக வாசலில் நிற்பேன். காலை ஏழரை மணிமுதல் மதியம் பதினொன்னரை வரைக்கும் மதியம் மூன்றரை முதல் இரவு ஏழரை வரை. நூலகரும் துணை நூலகரும் வீட்டிற்கு போன பின்னாடிதான் நான் போவேன்.
அப்படி என்ன உருப்படியா வாசிச்சேன்னு யோசிச்சுப் பார்த்தா ஒன்னும் ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது. துணை நூலகங்கிறதால நிறைய புத்தகமெல்லாம் இருக்காது . ஆனாலும் எல்லாம் வாசிப்பேன். சுஜாதா, பாலகுமாரன், ஞானக்கூத்தன், கல்யாண்ஜி, வண்ணநிலவன், நா பார்த்தசாரதி (இவர் கடைசி பையன் என்னுடன் செயிண்ட் சேவியர் உயர்நிலை பள்ளியில் உடன் படித்தான்), அப்துல் ரகுமான், மு மேத்தா என அங்கிருக்கும் எல்லா புத்தகங்களும் வாசிப்பேன்.
என்னுடன் நண்பர் ஆறுமுகம் உடன் இருப்பார். நாங்க இரண்டு பேரும் ஏழரை மணிக்கு நூலகம் மூடினதுக்கு அப்புறம் தாமிரபணி ஆற்றங்கரையில் இருக்கும் தீர்த்தவாரி மண்டபத்து படித்துறைக்கு போயிருவோம். அன்னிக்கு படிச்ச ஒரு கதையை அங்கே காலை மட்டும் தண்ணீரில் நனைய விட்டபடி பேசுவோம். அந்த கதையில் இப்படி இருந்தது அதையே வேற மாதிரி எழுதினா எப்படி இருக்கும்ன்னு எல்லாம் பேசுவோம்.
பின்னர் ஒரு ஒன்பதரை மணியளவில் வீட்டிற்கு வருவோம்.
எங்களுடைய பேச்சு பல திக்குகளில் பயணிக்கும். அப்போது நான எங்கள் தெருவின் கடைசி வீட்டிலிருந்த ஒரு பெண்ணை (நான் மட்டும்) காதலித்துக் கொணடிருந்தேன். அது குறித்தெல்லாம் நீண்ட விவாதங்கள் நடக்கும். கல்யாணம் பற்றியெல்லாம் பேச்சு நடக்கும். (வேலையே இல்லை..அந்த பொண்ணு காதலிக்கவேயில்லை.. இதுல கல்யாணம் வரைக்கும் கற்பனைக் குதிரைகளை தட்டிவிட்டு பறந்து கொண்டிருந்த காலமது.) வீட்டில் சொன்னால் முதுகுத் தோல் உரிந்து விடும் என்பது நிச்சயம். ஆனால் மனசு பித்தாய் அப்பெண்ணையே திருமணம் செய்ய வேண்டுமெனக் கூத்தாடிக் கொண்டிருந்தது. மூத்தோர் சம்மதியில் வதுவை முறைகள் செய்யவும் தயாரானது நெஞ்சம். இந்தச் சூழலில்தான் கவிதையை எழுதினேன்.
வற்றாத ஜீவநதி
காதலாய் காலம் செல்ல
குதிரையாய் மனசும் தாவி
காமமாய் காதல் பேசி
பூதமாய் பிரிவை நினைக்க
மாயமாய் பின்னர் உணர்த்தி
போர்வையாய் போன மரபை
சிறிதே விலக்கச் சொல்லி
ஜோதியாய் அறிவை மாற்றி
போதியாய் நகருது ஆறு.!