மகளதிகாரம்
கவிதையும் சூழலும்

சரியாக இருபத்திரண்டு வருடங்களுக்குப் பிறகு தொடர்ந்து கவிதை எழுத ஆரம்பித்தது 2016ல் தான். மனைவியின் இடையறாத முகநூல் வாசிப்புகளும் அவர் பின் தொடர்ந்த முகநூல் கவிதை பிரபலங்களின் எழுத்துக்களும் அவரை என்னையும் எழுதச் சொல்லி வற்புறுத்த காரணங்களாய் அமைந்திருந்தன.
நானும் அவரது வற்புறுத்தலுக்கு செவிமடுத்து முகநூலில் கவிதைகளை வாசிக்க ஆரம்பித்திருந்தேன். முதலில் நான் என்னை படைப்பு குழுமத்தில் இணைத்துக் கொண்டேன். அங்கே மாதாந்திர மின்னிதழ் வெளியிடுகிறார்கள். அதில் கவிதைகளை வாசிக்கத் துவங்கினேன்.
அந்நேரம் ஆன்டன்பெனியுடன் சேர்ந்து படைப்புக் குழுமம் மகளதிகாரம் என்றொரு கவிதைப் போட்டியை அறிவித்திருந்தனர். போட்டிக்கென கவிதை எழுதுவதா என ஒரு கேள்வி மனதில் எழுந்தது. போட்டிக்கென எழுதினால் உணர்வு பூர்வமாய் கவிதை வருமாவென யோசனை மனதில் இருந்த வண்ணமே இருந்தது.
மனைவி என் எண்ணத்தை மாற்றினார். எழுதுங்கள் என்றார்.
அதற்குள் நிறைய பேர் போட்டிக்கென கவாதைகள் பதிவிடத் துவங்கி விட்டார்கள். மகளதிகாரம் என்றவுடன் எல்லாருக்கும் சிறு மகளைப் பற்றியே கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தார்கள். எனவே நாங்கள் ஒரு பதினாறு வயதான மகளை எழுதுவது என்று முடிவெடுத்துக் கொண்டோம். ஏனெனில் எங்கள் மகளுக்கு பதினாறு வயது அப்போது தான் முடிந்திருந்தது.
பதினாறு வயதினிலும் என் மகள் தன் அலமாரியில் பொம்மைகளை வரிசையாக அலங்கரித்து வைத்திருப்பாள். அவளுக்கு அவளுடைய இரண்டு வயது முதல் கிடைத்த பொம்மைகளை பத்திரமாய் வைத்திருப்பவள் அவள். எல்லா பொம்மைகளையும் அலமாரியில் வைக்கவில்லை என்றாலும் அவள் மனதிற்கு நெருக்கமான பொம்மைகள் அவ்வலமாரியில் இருக்கின்றன.
ஒருபக்கம் பொம்மைகள் என்றால் மறுபக்கம் தடித்த புத்தகங்கள் பல இருக்கும்.
அந்த முரணிலிருந்தே கவிதையைத் துவங்கலாமென்று எண்ணினேன். அப்படியே தடித்த புத்தகங்கள் என்ற வார்த்தையோடே ஆரம்பித்தேன்.
ஆனால் போட்டிக்கான இன்னொரு விதிமுறையான இருபது வரிகளுக்கு மிகாமல் என்ற விதி அவ்வார்த்தையை எடுத்து விடும்படி செய்து விட்டது.
அவளது பதினைந்தாம் பிறந்த நாளை அவள் தன் தோழிகளுடன் தன் பள்ளியைச் சுற்றி மரக் கன்றுகள் நட்டு கொண்டாடினாள். என் தங்கை மகளிடமிருந்து அவள் இதைக் கற்றிருந்தாள். அதனால் அதையும் இக்கவிதையில் வைத்திருந்தேன்.
பதினாறு வயது மகளிடம் தந்தையிடமும் அன்னையிடமும் புரிய ஏராளமான தர்க்கங்கள் இருந்தன. அதையும் சேர்த்துதான் இக்கவிதையை எழுதினேன்.
எழுதி முடித்து பார்த்த போது இக்கவிதை நான் எதிர்பார்த்த மாதிரி பதினாறு வயது மகளதிகாரமாய் வந்ததென்று கூற இயலவில்லை. எனினும் கவிதை நன்றாய் வந்திருந்தது.
போட்டிக்கென படைப்புக் குழுமத்தில் பதிவிட்டிருந்தேன். அதற்குள் மனைவி அவர் எதிர்பார்த்த கவிதையாய் நானெழுதியது இல்லையென அவரும் அவரது முதல் கவிதையை போட்டிக்கென பதிவிட்டிருந்தார். அவரது கவிதை என் கவிதையை விட நன்றாக இருந்ததென்று என் எண்ணம்.
முடிவு அறிவிப்பிற்கென்று இருவரும் நகங்கடித்து தான் காத்திருந்தோம். அது ஞாயிற்றுக் கிழமை. வெகு நேரம் காத்திருந்து விட்டு மதிய உணவிற்கு பின்னர் ஞாயிற்றுக் கிழமை வழக்கமான மதிய உறக்கத்தில் ஆழ்ந்து விட்டேன். நண்பர் ராம் வசந்த் தான் அழைத்து விபரம் கூறினார். என்னுடைய கவிதை முதல் பரிசை வென்றிருந்தது.
மனைவியின் முதல் கவிதை ஆறுதல் பரிசை வென்றிருந்தது.
முகநூலில் என் மீது வெளிச்சம் பாய காரணமாய் இருந்த முதல் பரிசு பெற்ற அந்தக் கவிதை இதுதான்.
புத்தகங்களும் பொம்மைகளும்
கொண்ட உன் அலமாரிக்கருகில்
நீ நெருங்கும் ஒவ்வொருமுறையும்
எதையெடுப்பாயென
நகங்கடிக்கத் துவங்குகின்றன
பொம்மைகளும் புத்தகங்களும்.
வளர்ந்துவிட்டாயென
எண்ணும்போது
குதூகலிக்கிறது உன் குறும்புகள்.
குழந்தையென கொண்டபோது
தகர்க்கிறது உன் தர்க்கங்கள்.
பிறந்தநாள் பரிசாய்
நம்தெருவோரம் நடுவற்கு மரக்கன்றொன்றை
வாங்கித்தரக் கேட்போது
தெரிகிறது நீ எவ்வளவு
வளர்ந்து விட்டாயென.
எங்கள் மகளென்பது போய்
உந்தன் தாய்தந்தையென்பதை
எங்களடையாளமாய் மாற்றிவிட்டாய்
நீ உன் ஒவ்வொரு செயலிலும்.
இந்த கட்டுரைக்கு நான் உபயோகப்படுத்தியிருக்கும் முகப்புப் படம் ஆண்டன் பெனியின் கவிதை நூலான மகளதிகாரம் புத்தகத்தின் முகப்போவியமே..