நீயும் உன் காதலும்.
கவிதையும் சூழலும்

எங்கள் திருமணம் காதல் திருமணம். என் துணைவி புத்தகப் ப்ரியை. அவரது வாசிப்பு வகை தொகை அறியாதது. கணையாழி பத்திரிக்கையின் நிரந்தர வாசகி திருமணத்திற்கு முன்வரை. நாங்கள் காதலித்த காலங்களில் தினமும் நிகழும் எங்களுக்கிடையேயான தொலைபேசி உரையாடலில் ஏதாவது ஒரு கவிதை சொல்வார். அது கணையாழி கவிதையாகவோ அல்லது அவர் விரும்பி வாசிக்கும் தாகூரினுடையதோ அல்லது ஆங்கில கவிஞர்களுடையதாகவோ இருக்கும். அப்படிப்பட்ட அகன்ற வாசிப்பினை கொண்டிருந்து அவரது இளமைப் பருவம்.
இக்கவிதையில் குறிப்பிட்டிருக்கும் அத்தனை விசயங்களையும் தேடித்தேடி பயின்றவர். ஜப்பானிய மொழி ஸ்பானீஷ் இரண்டு மொழிகளையும் வாசிக்குமளவிற்கு தனக்குத்தானே போதித்துக் கொண்டவர். வீட்டிற்கு வேலைக்கு வரும் பெங்காலிப் பெண்ணிடம் உரையாடவென்றே அதையும் படித்தார் பேசும் அளவிற்கு.
புத்தகம் புத்தகம் புத்தகம் இது தான் அவரது தீராக்காதல்.
எனக்கு ஒன்றேயொன்றுதான் புரியவேயில்லை. இத்துணை வாசிப்பனுவமிக்க ஒரு பெண் என்மீது காதல் கொண்டதெங்கனம். புத்தகக்காதல் எத்துணை தீவரமோ அதனைவிட இருமடங்கு மும்மடங்கு என் மீது காதல் அவருக்கு.
நான் ஏதாகிலும் விளையாட்டாய் பொய் சொன்னேனென்றால் அப்படியே நம்பி விடுவார். அது உண்மை எனத் தெரிய புரிய அவருக்கு அரைநாளாவது கண்டிப்பாய் வேண்டும். அப்போது எங்கே போனது அவரது பரந்து பட்ட அறிவு.
காதலும் காதல் நிமித்தமும் என்னை சீர்தூக்கி பார்க்க விரும்பாத நம்பிக்கை.
இந்நம்பிக்கையை காப்பாற்ற நான் ஏது வேண்டினும் செய்யத் தயங்கேன்.
நீயும் உன் காதலும்.
_____________________
இன்றளவும் எங்கேனும் ஒரு
புத்தகக் கடையைக் கண்டால்
அங்கேயே நின்றுவிடுகிறாய் நீ.
உனது வாசிப்பு வகையறியாதது.
கல்கண்டு தொடங்கி
கணையாழி வரைக்கும்.
உன் வாசிப்பு
மொழி தாண்டியதாய் இருக்கிறது.
தாகூரும் ராபர்ட் ஃப்ராஸ்டும்
உன் ஒன்று விட்ட
கொள்ளுத் தாத்தாக்களாய்
இருக்கிறார்கள்.
மேன்மேலும் வாசிக்கிறாய்..
பெங்காலி படித்தாய்.
ஜப்பானிய மொழியறிந்தாய்.
தற்போது ஸ்பானிஷ்..
இடையிடையே அஸ்ட்ரானமி மற்றும்
அஸ்டராலஜியும் படித்தாய்.
இப்படி புத்தகங்களுடனான
உன்னுடைய காதலைச் சொல்லிமுடியாது.
ஆனால்
உன் கைபிடித்து விளையாட்டாய்
ரேகை பார்த்து பலன் சொல்வதாய் கூற
அது பொய்யெனத் தெரிந்தும்
முகமலர்ந்து என் காலடியில் அமர்ந்து
மடிமீது வலக்கை விரிக்கிறாய்.
என்மீது நீ கொண்ட பெருங்காதலில்
கற்றதையெல்லாம் விட்டுவிட்டு
கசிந்துருகி நிற்கின்றாய்.
என்றென்றும் மீராவாய் இருந்து
உன் காதலினாலேயே
என்னைக் கடவுளாக்கிக் கொண்டிருக்கிறாய்.