ஜாடி
கவிதையும் சூழலும்

அப்போது அப்பாவிற்கு என்னைப் பற்றி நிறைய கவலைகள் ஏற்பட்டிருந்தன. கம்ப்யூட்டர் சயின்ஸில் டிகிரி வாங்கி இப்படி வேலையில்லாமல் சுற்றிக் கொண்டிருந்தால் எந்த அப்பனுக்குத்தான் கவலையில்லாமல் இருக்கும். ஆனால் அதை ஒரு பொழுது கூட வெளிக்காட்டாமல் இருந்தார்.
வேலையில்லாமல் இருந்ததிற்கு பல காரணங்கள் உண்டு. அவ்வளவாய் கம்ப்யூட்டர்கள் புழக்கத்தில் இல்லை அப்போது. திருநெல்வேலியில் கணிணி உள்ள கம்பெனிகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். சங்கர் சிமெண்ட்ஸில் இருந்தது. ஆரெக்கிள் வைத்திருந்தார்கள் அப்போதே. பெரிய பெரிய டேப் ட்ரைவெல்லாம் வைத்திருந்தார்கள். நமக்கு அதெல்லாம் தெரியாது. கோர்ஸில் இல்லை. அப்பரெண்டிஸாகக்கூட சேர்க்க மறுத்து விட்டார்கள்.
எனவே சும்மா சுற்றிக் கொண்டு திரிந்தேன். கொஞ்சம் உறுத்தலோடு.
ஆனால் கல்லூரி முடித்த அடுத்த மாதமே வேலைக்குப் போனவன்தான் நானும். 1991ல் திருநெல்வேலியில் சென்ஸஸ் ஆப்பரேஷனின் ரீஜனல் டேப்யூலேஸன் ஆபீஸில் கம்பைலர் வேலை. ஆசிரியர்கள் எல்லாரும் வீடு வீடாய்ப் போய் குடும்ப உறுப்பினர்களின் பெயர் வயது படிப்பு இன்னும் பிற இத்தயாதி இத்தியாதிகளை குறிப்பெடுத்து வந்திருப்பார்கள். ஒரு குடும்பத்தில் ஐந்து நபர்களெனில் ஐந்து பக்கங்கள் நிரப்பபட்டிருக்கும். இதனை இண்டிவிஜூவல் ஸ்லிப் என்பார்கள். பின் ஒரு குடும்பத்தை சேர்ந்த அந்த ஐந்து உறுப்பினர்களின் விவரங்களையும் ஃபேமிலி பேஜ் இல் குறியீடாய் மாற்றியும் தந்திருப்பார்கள். நமக்கு வேலை இண்டிவிஜூவல் ஸ்லிப்பையும் ஃபேமிலி பேஜையும் சரி பார்த்தல். விபரங்களுக்கேர்ப்ப கோடிங்க் செய்தல். இப்படியான வேலை. இதில் தோராயமாக முன்னூற்றுக்கும் மேற்பட்ட ஆணையும் பெண்ணையுமாய் வேலைக்கு அமர்த்தியிருந்தது சென்ஸஸ் ஆபீஸ். முக்கால் வாசி பேர் அப்போதுதான் கல்லூரி முடித்தவர்கள். இல்லை முடிக்காதவர்கள். அந்த ஆபீஸில் அவர்களெல்லாம் வேலை பார்த்தார்களோ இல்லையோ நிறைய பேர் காதலித்தார்கள். ஜோடி ஜோடியாய்த் திரிந்தார்கள். இன்று அதில் பல பேர் கணவன் மனைவிகள். எனக்கும் அந்த அலுவலகத்தில் தான் வேலை கிடைத்திருந்தது. இந்த வேலையை 1991 ஜூன் முதல் 1992 டிசம்பர் வரை பார்த்தேன்.
அங்கே வேலை பார்த்த பல பெண்களில் ஒரே ஒரு பெண் மட்டும் என்னை அவ்வப்போது நிமிர்ந்து பார்த்த வண்ணம் இருப்பார். அந்தப் பெண் அப்படிப் பார்த்ததில் எனக்கு ஆசையோ காதலோ வரவில்லை. மாறாக கவிதை ஒன்று வந்தது. மாற்று சிந்தனையாக ஒரு வேளை அந்த காதல் தோத்து போயிருந்தா அப்படின்னு நினைச்சப்போ வந்த கவிதை.
அடியில் நீராய்
மனதில் ஆசை ..!
கண்கள் வீச்சில்
கற்கள் போட
காதல் பொங்கி
நிறைந்த வேளை
தாகம் தீர்ந்த
காகமாய் அவள்....
கண்ணீர் மிஞ்சிய
ஜாடியாய் நான்.
இப்படி இந்தக் கவிதையை அந்த சென்ஸஸ் ஆபீஸில் தான் எழுதினேன்.