top of page

சிதிலமடைந்த வீடு

கவிதையும் சூழலும்

சிதிலமடைந்த வீடு

திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் நான் வாழ்ந்த கம்பராமாயணத் தெருவில் அப்போது நாங்கள் உரிமையாய் அழைத்துக் கொண்ட மாமாக்களோ அத்தைகளோ சித்தி சித்தப்பா பெரியம்மா பெரியப்பாக்களோ அக்காக்களோ என்னை அண்ணேனென உருகி அழைத்த தங்கைகளோ இல்லை இப்போது. ஊரே அந்நியப் பட்டு நிற்கிறது.

கோமதியாச்சி வீட்டுத் தோட்டத்தில் இருந்து தெருக்கோடி மாணிக்கண்ணன் வீட்டுத் தோட்டம் முடிய ஒன்றாய் ஒரே தோட்டமாய் இருந்த இடங்கள் தான் எங்கள் விளையாட்டரங்கம். இந்த இரண்டு வீட்டு தோட்டங்களுக்கிடையில்தான் பெரிய வாத்தியார் வீட்டுத்தோட்டம்,சிதம்பரத்தக்கா வீட்டு தோட்டம், செல்லப்பா மாமா வீட்டுத்தோட்டம், நடுவீட்டு தோட்டம் அதற்கடுத்தாற்போல் பெரிய கல்யாணி அண்ணன் வீட்டுத் தோட்டம் கடைசியாய் மாணிக்கண்ணன் வீட்டு தோட்டம். இத்தனை தோட்டங்களும் ஒன்றாய் இணைந்திருக்கும். வயதிற்கேற்றார் போல குழு குழுவாய் நாங்கள் தெருவில் உள்ள பிள்ளைகளெல்லாம் விளையாடிக் கொண்டிருப்போம். பம்பரம் விடுதல், கோலியாடுதல்,ஏழுகல் அடுக்கி விளையாடும் எறிபந்து, கிட்டிப்புல் என ஒலிம்பிக் ரேஞ்சுக்கு விளையாடுவோம். இடையிடையில் அக்காக்களுடனும் தங்கைகளுடனும் தாயம், பாண்டி மற்றும் கழற்சிக்கல் என அவற்றையும் விடுவதில்லை. யார் வீட்டிலிருந்தாவது பிள்ளைகளைத் தேடிவரும் பெற்றோர் நேராய் இந்த தோட்டத்திற்குத்தான் வருவார்கள். தம் பிள்ளையை காதைத்திருகி அழைத்துக் கொண்டு போவார்கள்.

இப்போது ஊருக்குப் போனால் தோட்டமென்பதேயில்லை. செல்லப்பமாமா வீடு நடக்க இடமில்லாமல் சிறு சிறு வீடுகளாய் நடைபாதையெல்லாம் ஸ்கூட்டியும் பைக்குகளுமாய். செல்லப்பமாமா வீட்டை விற்று விட்டு போய்விட்டார். செல்லப்பமாமா மட்டுமல்லாமல் கோபதியாச்சி பேரன்களும் சிதம்பரத்தக்கா மகன்களும் நடுவீட்டு பிள்ளைகளும் என அத்தனை வீடுகளும் விற்கப்பட்டு பெயர் தெரியாத யார்யாராலோ வாங்கப் பட்டு புறாக்கூண்டுகள் போல அடுக்கடுக்காய் வாடகை வீடுகள் கட்டி குடித்தனக்கார்களுக்கு வாடகைக்கும் விட்டுவிட்டார்கள்.

இத்தனைக்கும் நடுவில் ஒரேயொரு வீடு மட்டும் இன்னும் யாருக்கும் விற்கப்படாமல் இருக்கிறதென்றால் அது
எதிர்வரிசையில் இருக்கும் பாக்கியத்தாச்சி வீடுதான். பூட்டியே கிடக்கிறது அவ்வீடு. பாக்கியத்தாச்சியின் உறவினர்களெல்லாம் வெளியூரில். யாரும் எப்போதும் எதற்காகவும் இங்கு வருவதேயில்லை. அவ்வீடுதான் இக்கவிதையின் நாயகி.

முற்றிலுமாய்ச் சிதிலமடைந்திருக்கிறது
அவ்வீடு.
தலைமுறைகள் பல கண்டதாய்
இருந்திருக்கும் தான்.
நீண்டு காரை பெயர்ந்து போயிருக்கும்
அத்திண்ணையில்
பூவேலைப்பாடு நிறைந்த
அந்நான்கு தூண்களில்
இன்னும் மெல்லமாய்
கேட்கின்றன
அவ்வீட்டு அல்லது அக்கம்பக்கக்
குழந்தைகளின் விளையாட்டு பாட்டொலிகள்.
உள்ளேயும் நிறைந்திருக்கலாம்
அங்கே வாழ்ந்தவர்களின்
சிரிப்பொலிகள்
கோபக் கூப்பாடுகள்
காதல் சரசத்தில் சிணுங்கிய கட்டிலின்
க்ரீச்சொலிகள்.
எத்தனை ஜனனங்கள் மற்றும் மரணங்கள் பார்த்தந்த வீடு யார் சொல்லக்கூடும்.
அத்தனைக்குமான அழுகையொலிகள்
இன்னும் எதிரொலித்துக் கொண்டிருக்கலாம்
அதன் சுவர்களுக்குள்.
அத்தனையையும் தன்
சிதிலமடையா நினைவுகளில்
பொதிந்த படி
காத்திருக்கிறது அவ்வீடு
தன்னை நிராதரவாய்
விட்டுப் போனவர்களின்
வம்சாவளியில் யாரேனும்
தன் கதவைத் திறக்கக்கூடுமோர்
நந்நாளுக்கென.

CONTACT

Tel: 9810488582| Tel: 7011144631 | sureshbarathan@gmail.com

Sign Up for Stay Connected

Thanks for submitting!

Follow me:

  • Black Facebook Icon
  • Black Twitter Icon

© 2022 by Suresh Barathan

bottom of page