சப்தமாய் ஒரு மௌனம்
கவிதையும் சூழலும்

மறுபடியும் ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்றி இரண்டுக்கு வருகிறேன். சென்ஸஸ் ஆபீஸ். இளைஞர்களும் யுவதிகளுமாய் முன்னூறுக்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்த அலுலகம். எங்கெங்கு நோக்கினும் காதல் நதி பெருக்கெடுத்து ஓடுகிறது. ஒருதலைக் காதல்களும் நிறைய இருந்தன. தன்னை ஏற்றுக்கொள்ளாத காதலிக்காய் ஒருவன் தன் கையை அறுத்துக் கொண்டான். இப்படி அலுவலகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் காதல்.
எந்த காதல் சிக்கல்களிலும் சிக்காமல் இருந்தவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு. நாங்கள் அதில் அடக்கம். நாங்கள் என்றால் எனது ஆண் நண்பர்கள் மூவர். பெண் சிநேகிதிகள் நால்வர். எங்கள் குழு எழுவர் குழு. அதில் திருமணமான ஒரு மூத்த அக்கா ஒருவருண்டு. எப்போதும் சிரிப்பும் கும்மாளமுமாய் திரிவோம்.
எங்கள் குழுவிலிருந்த பெண்களால் குழவில் இருந்த மூன்று ஆண்களுக்கும் அலுவலகத்திலிருந்த எல்லா பெண்களிடமும் நற்பெயர் பரவியிருந்தது. "நல்ல பசங்கப்பா மூனுபேரும். பேசிகிட்டே இருக்கும் போது லவ் லெட்டர் கொடுத்துறமாட்டாங்கப்பா" என சர்ட்டிபிகேட் கொடுத்து வைத்திருந்தார்கள். அதனாலேயே மற்ற எல்லா பெண்களும் நட்பாய் சிநேகமாய் ஆனார்கள். அலுவலகத்தின் எல்லா பெண்களிடமும் சகஜமாய் பேசித் திரிவோம். திரும்பவும் சொல்கிறேன் அது 1991ஆம் வருடம் . திருநெல்வேலி ஊர். ஆண் பெண் சிநேகமென்பதை ஏலியனைப் பார்ப்பது போன்று பார்த்த காலம். பார்த்த ஊர்.
அத்தனை பெண்களும் நண்பர்களாக சிநேகிதர்களாக இருந்த போதும் ஒரேயொரு பெண் மட்டும் எங்களிடம் நட்பு பாராட்டாமலிருந்தார். வலிய சென்று பேச்சுக் கொடுத்தாலும் பேசாமல் போய்விடுவார். நாங்களும் விட்டு விட்டோம். ஆனாலும் அவரது மௌனம் கொஞ்சம் கனமாகவே இருந்தது.
அலவலகத்தின் அலுவல்கள் எல்லாம் முடிந்த கடைசி நாள். பிரிவு நாளை சந்தோசமாகவே கொண்டாடினோம். தேடல் குழுவினர் (அலுவலகத்தில் அப்படி பெயருடன் வீதி நாடகம் நடத்தும் குழுவொன்று இருந்தது. அதைப் பற்றி விரிவாக இன்னொரு முறை எழுதுகிறேன்) ஐந்து நிமிட நாடகங்களென ஐந்தாறு அரங்கேற்றினர். திறமையானவர்கள் பாடல்கள் பாடினர். பொது அறிவு கேள்வி பதில் போட்டி நடத்தினர். கவிதைகள் வாசித்தனர். நானும் கவிதை வாசித்தேன். அது பேசாமலிருந்த அந்தத் தோழியைப் பற்றியதுதான்.
அது தான் இந்தக் கவிதை. இது காதல் கவிதையல்ல.
தற்செயலாய்
நீ எதிரே நிற்கிறாய்!
நான் எல்லாவற்றையும்
விசாரித்துவிட்டு
உன்னையும் மெல்ல
விசாரிக்கிறேன்.
நீ எப்போதும் போல
மௌனியாய் நிற்கிறாய்!
வார்த்தைகள் பேசாதவற்றை
மௌனம் பேசுமாம்.
எங்கோ படித்திருக்கிறேன்
இங்கே அனுபவிக்கிறேன்.
நீ
எல்லாம் சொல்கிறாய்
உன் ஒற்றை
மௌனத்தால்.
உன் மௌனம்
துரோணரின் சக்கர வியூகம்!
நான் சாதாரண அபிமன்யு!
உடைத்து உள்ளே போனவன்
மீண்டு வரமுடியாமல்..... !
உரக்கப் பேசியவர்கள்
பேச்சுடனே போய்விட
உன்னுடைய
உரத்த மௌனம் -
என்னை உலுக்கிவிட்டதடி !
~~~
இக்கவிதையை நான் வாசித்து இறங்கிய பின்னரும் அந்தப் பெண் என்னிடமோ எங்கள் நண்பர்களிடமோ வந்து பேசவேயில்லை.