top of page

எதிரெதிர் வாழ்க்கை

கவிதையும் சூழலும்

எதிரெதிர் வாழ்க்கை

அது 1993 ஆம் வருஷம். சென்ஸஸ் ஆபீஸ் வேலை முடிந்து விட்டது. தற்போது வேலையில்லை. ஆனால் எரிதழல் கையெழுத்து பத்திரிக்கையை இன்னும் விடாமல் நடத்திக் கொண்டு தான் இருந்தோம். அதை வேலையென்று சொல்வதற்கில்லை!

அப்போது நண்பன் கல்யாண சுந்தரம் என்கிற கல்யாணி ஏபிடி பார்சல் சர்வீஸில் ஜங்ஷன் கிளையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அவன் மூலமாக ப்ரூக் பாண்டு ஏஜென்சியில் கமிஷனுக்கு டீக்கடைகளுக்கு தேயிலை மற்றும் காபி பவுடர் விநியோகிக்கும் வேலை ஒன்றிற்கான வாய்ப்பு வந்தது. அதற்கு சிறு முதல் ( இன்வெஸ்ட்மெண்ட்) போட வேண்டியிருந்தது. அப்பாவிடம் கேட்டேன். சரியென்று சொல்லி தந்தார். நானும் கல்யாணியும் சேர்ந்து ஆளுக்கு இரண்டாயிரமென மொத்தம் நான்காயிரம் ரூபாய் முதலீட்டில் சிறு தொழிலெனத் தொடங்கி விட்டோம்.

காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து, சைக்கிள் கேரியரில் ஆளுக்கொன்றாய் ப்ரூக் பாண்டு டப்பா (தகரத்தாலானது) ஒன்றைக் கட்டிக் கொண்டு, பாளையங்கோட்டை மார்கெட், பாளை பஸ் ஸ்டாண்ட் மற்றும் ஹைகிரவுண்ட் மஹாராஜநகர் முதலிய பகுதிகளிலுள்ள டீக்கடைகளுக்கு தேயிலைத் தூள் விநியோகிக்கக் கிளம்பி விடுவோம். காலை ஏழு அல்லது ஏழரை மணிக்கு விநியோகம் முடித்து வீடு வந்தடைவோம். பின்னர் மாலை ஆறு மணிக்குக் கிளம்பி ஒவ்வொரு கடையாக பணம் வசூலித்து வருவோம். வசூலித்த பணத்தைக் கொண்டு அடுத்த நாளுக்கென ஏஜென்ஸியிடமிருந்து தேயிலை பாக்கெட்டுகள் வாங்கி வருவோம். நூறு ரூபாய்க்கு தேயிலை விற்றால் இரண்டு ரூபாய் கமிஷன் கிடைக்கும். அன்றன்றைக்கு வாங்கியதை அன்றன்றைக்கு விற்று விடுவோம். ஒரு நாளைக்கு எண்பது ரூபாய்க்கு வியாபாரம் ஆகிவிடும். ஆளுக்கு நாற்பது ரூபாய் வருமானம். அக்கவுண்டன்ஸி படித்து டீச்சர் ட்ரெயின்ங்க் முடித்து எம்ப்ளாய்மெண்ட் ஆபீசில் பதிந்து வைத்து வேலைக்குக் காத்திருந்த தங்கைக்கு கணக்கெழுதும் வேலை கொடுத்தோம். அவரும் கணக்குகளைச் சரியாகவே (நாங்கள் அவருக்கு சம்பளமெல்லாம் கொடுக்காவிட்டாலும் கூட) பார்த்து வந்தார்.

சரியாக ஒரு வருடம் இந்தத் தொழிலைப் பார்த்து வந்தோம். நடுவில் தீபாவளித் திருநாளையொட்டி என்னுடன் சென்ஸஸ் ஆபீசில் வேலை பார்த்த நைனார் அண்ணனையும் சேர்த்துக் கொண்டு திருப்பூரிலிருந்து டீ சர்ட்டுகள், பனியன்கள் மற்றும் நைட்டிகள் என்று மொத்த விலைக்கு வாங்கி வந்து அதையும் டீக்கடைகளில் வேலை பார்ப்பவர்களிடம் விற்றோம். அது நல்ல லாபமாய் இருந்தது.

படித்த படிப்பிற்கான வேலைதான் பார்ப்பேன் என்று அடம் பிடிக்காமல், சோம்பிக்கிடக்காமல் பையன் ஏதாகிலும் செய்து சமபாதிக்கிறானே என்று அப்பாவிற்கோ ரொம்ப சந்தோசம். ஆனால் அம்மாவிற்கு வருத்தமானால் வருத்தம். “இப்படி கம்ப்யூட்டர் படிச்சுட்டு காப்பி வித்துட்டுத் திரியுதே ஏம்புள்ள” அப்படின்னு பலமுறை சொல்லிக் கொண்டிருந்தார். எனக்கும் அவ்வப்போது அது மனக் கவலையைக் கொடுத்த வண்ணமே இருந்தது. இருந்தாலும் வேலையின்றி சும்மா இருப்பதில் அர்த்தமில்லை என்றே இவ்வேலையைத் தொடர்ந்து வந்தேன். அப்போது எழுதியது தான் இந்தக் கவிதை.

கவிதைக்காய்க் காத்திருந்து
கற்பனைகள் பல செய்து
காகிதத்தில் எழுதி முடிக்க ...

வரிகளுக்கும் வார்த்தைகளுக்குமான
சண்டையில்
நவீன ஓவியமாகிப் போயிற்று...

பார்த்தவன் சொல்லிப் போனான்
அழகான கவிதையாய்
ஓவியமாகியிருக்கிறதென ....

வெறுத்துப் போய்
நிரந்தர ஓவியனானேன்.

CONTACT

Tel: 9810488582| Tel: 7011144631 | sureshbarathan@gmail.com

Sign Up for Stay Connected

Thanks for submitting!

Follow me:

  • Black Facebook Icon
  • Black Twitter Icon

© 2022 by Suresh Barathan

bottom of page