top of page

Ubiquity

குறுங்கதை

Ubiquity

பத்து வருடமாய் காரோட்டும் போது நிகழாத விபத்து அன்றைக்குதான் முதன்முதலாக நிகழ்ந்தது. அதுவும் எப்படி.

பட்டப்பகலில், காலை பத்து மணி வெயிலில் தில்லி சாணக்யாபுரியின் வினய் மார்க்கில் வண்டி ஓட்டிக்கொண்டருந்தவனின் கண்களுக்குள் சட்டென இருள் சூழ்ந்தது. கண்கள் திறந்திருக்கும் போதே இருள் எப்படி. சட்டென வினய் ரோட்டின் மரங்கள் ரோட்டின் மத்தியில் இருக்கும் டிவைடர், நெஹ்ரூ பார்க் அதையொட்டி இருந்த அனுமார் மந்திர், மந்திருக்கு அடுத்தாற்போல் பத்து வீல் லாரியின் பேஸ்ஸில் உயராமய் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த செல்போன் டவர் எல்லாம் காணாமற் போய்விட்டது.

பதிலாக இரவு நேர ஒன்வேயில் காரோட்டிக் கொண்டிருக்கிறேன். ரோட்டில் உயர உயரமாய் கட்டிடங்கள் ஒளிவெள்ளத்தில் மிதக்கின்றன. (அதிலொரு கட்டிடத்தை அடிக்கடி இங்கிலீஸ் சினிமாவில் பார்த்திருக்கிறேன்). தில்லியின் ஹைப்ரஷர் ஸோடியம் லாம்புகளுக்கு பதிலாக ரோட்டின் இரு முனைகளிலும் இண்டக்‌ஷன் லாம்புகள் இரவை பகலாக்க முயன்று கொண்டிருந்தன. ரோட்டில் கார்கள் சீரான வேகத்தில் செல்கின்றன. மக்களலெல்லாம் ப்ளாட்பாரத்தில் மட்டுமே நடக்கிறார்கள். எல்லாரும் சர்வ நிச்சயமாய் இந்தியர்கள் இல்லை. நானோட்டிக் கொண்டிருக்கும் காரும் இந்தியத் தயாரிப்பில்லை. ஸ்டியரிங்க் கூட காரின் வலப்புறத்தில் இல்லாமல் இடப்புறத்தில் இருக்கிறது.
அய்யய்யோ.. எனக்கு இடப்புறம் அமர்ந்து காரோட்டத் தெரியாது என்பது நினைவுக்கு வருவதற்குள் நான் வினய் ரோட்டின் டிவைடரில் நானொட்டி வந்த சாண்ட்ரோவை விட்டுவிட்டேன்.

நல்ல வேளையாய் எப்போதும் போல வினய் மார்க்கில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் வாகனங்கள் சென்றதாலும் அன்றைக்கென ஜன நடமாட்டமே இல்லாததாலும் நான் மிதமான வேகத்தில் சென்றதாலும் காரின் பானெட்டில் விழுந்த சிறு டென்ட்டைத் தவிர வேறேதும் சேதமில்லாமல் தப்பித்திருந்தேன்.

இதைப் போலவே இரண்டாவது சம்பவம் நான் வீட்டில் இருக்கையில் நிகழ்ந்தது. குளித்து முடித்துவிட்டு பேண்ட் சர்ட் எடுப்பதற்காக வீட்டில் இருந்த வார்ட் ரோபைத் திறந்தால் அதில் இருந்த துணிகள் எல்லாம் நிச்சயமாய் என்னுடையவை அல்ல. அத்தனையும் அமெரிக்கத் தயாரிபில் உருவான தயாராடைகள். ஒன்றை எடுத்து என்னை அதற்குள் நுழைக்க முயன்றேன். கச்சிதமாய் பொருந்தியது. கண நேரத்தில் நான் அணிந்த அந்த வெள்ளையாடை நான் எப்போதும் அணியும் கருப்பு வெள்ளையாய் மாறியது. கண்ணை கசக்கி கொண்டு மீண்டும் பார்த்தேன். அது நிச்சயமாய் நான் எப்போதும் அணியும் இந்திய தயாரிப்பு ஆடைகள் தான். எனில் சற்று நேரம் முன்பு அவை ஏன் அமெரிக்க ஆடைகளாய்த் தெரிந்தன..

உடனடியாய் எதேனும் கண் டாக்டரைப் பார்க்க வேண்டியது தான் என முடிவு செய்தேன்.

உங்கள் கண்களில் எந்தவித பாதிப்புமில்லையே.. டாக்டர் என்னிடம் சொன்ன போது ஏன் இப்படி காட்சிகள் தோன்றுகின்றன என நான் அவரிடம் பதிலுக்கு கேட்டால் இதற்கு என்னால் பதிலளிக்க முடியாது. வொய் டோன்ட் யூ கன்ஸல்ட அ சைக்ரியாடிஸ்ட்.. ஐ கேன் ரெஃபர் யூ அ குட் டாக்டர்..

கண் டாக்டர் பரிந்துரைத்த சைக்ரியாட்ரிஸ்ட் தடித்த கண்ணாடி அணிந்திருந்தார். என்னைப் பார்த்த்தும் அவருக்கு உண்டான அந்த பலத்த ஆச்சர்யத்தை மறைக்க முயன்றார். ஆனாலும் அப்பட்டமாய் அது எனக்கு தெரிந்தே விட்டது.

எப்பெல்லாம் உங்களுக்கு வெளிநாட்டு காட்சிகள் தெரியுது..

சமயம் சந்தர்ப்பமே இல்லை டாக்டர். திடீர் திடீர்ன்னு தான் காட்சிகள் வருது. காட்சிகளில் வர்ற அந்த அமெரிக்க நகரத்துக்கு இது வரை நான் போனதே இல்லை. அந்த நகரமென்ன.. அமெரிக்காவுக்கே நான் போனதில்லை. ஆனால் அந்த தெருக்கள் தெருக்களிலுள்ள கட்டிடங்கள் அவற்றில் நியான் மற்றும் எல்ஈடியில் ஒளிரும் பெயர்கள் கூட எனக்கு அத்துப்படியாய் தெரிந்தவையாய் இருக்கிறன்றன.. எப்படி டாக்டர். ஹவ் ஈஸ் திஸ் பாஸிபிள்..

டாக்டரின் ஆச்சர்யம் மேலும் கூடியது. உங்கள் கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்குமுன் உங்களுக்கு ஒரு வீடியோவை போட்டு காட்ட விரும்புகிறேன். அமேரிக்காவில் இருக்கும் ஒரு ஸைக்ரியாட்டிஸ்ட்டிடம் ஒரு பேஷண்ட் பேசுகிற வீடியோ அது. என்னைப் போன்ற ஸைக்கிக் டாக்டர்ஸ் கன்ஸோர்ட்டியத்துல போன வாரம் ரொம்ப பரபரப்பாகப் பேசப்பட்ட வீடீயோ அது.

அதை ஏன் டாக்டர் நான் பாக்கனும்.

யூ வில் கெட் தி ஆன்ஸர். ஜஸ்ட் கீப் பேஷன்ஸ் ..

டாக்டர் தன் லாப்டாப்பை திறந்து அதுல் ஒரு வீடீயோவை ஓட விட்டார்.

அந்த அமெரிக்க டாக்டரிடம் பேச வந்த பேஷன்ட்டைப் பார்த்ததும் நான்

அய்யோ..

எனக் கத்தி விட்டேன்.

அது சர்வ நிச்சயமாய் நானே தான்.

வீடியோவில் இருந்த நான் அந்த அமேரிக்க டாக்டரிடம் எனக்கு இந்தியாவின் குறிப்பாக தில்லியின் சந்து பொந்துக்கள் எல்லாம் தெரிவதாயும், அந்த சந்துகளில் எல்லாம் நானொரு ஹ்யூன்டாயின் ஹாட்ச் பேக் கார் ஓட்டுவதாயும், இதுவரை நான் இந்தியாவுக்கோ தில்லிக்கோ போனதே இல்லை என்றும் சொல்லிக் கொண்டிருந்தேன்.

CONTACT

Tel: 9810488582| Tel: 7011144631 | sureshbarathan@gmail.com

Sign Up for Stay Connected

Thanks for submitting!

Follow me:

  • Black Facebook Icon
  • Black Twitter Icon

© 2022 by Suresh Barathan

bottom of page