Isaiah
குறுங்கதை

ஒரு நல்ல லவ் மேக்கிங்கிற்கு அப்புறம் மஞ்சு என்னைப் பார்த்து,
ஏன் எப்ப பாத்தாலும் எதையோ பறி கொடுத்த மாதிரி இருக்கே .... என்று கேட்டாள்.
நான் அதைக் கவனிக்காத மாதிரி
இன்னைக்கு நைட் இங்கதானே ஸ்டே.. டின்னர் நான் சமைக்கவா.. இல்ல வேண்டாம். உனக்கு ரொம்பப் புடிச்ச ஜப்பானீஸ் ஃபுட் ஆர்டர் பண்றேன். அந்த கொழைஞ்ச சோறும் பாதி வேகாத மீனும்..
என்று பதில் சொன்னேன்.
அதுக்குன்னு ஒரு பேரு இருக்கு. சூஷி.
டேய்.. எனக்கு இன்னைக்கு சூஷி சாப்பிடனும் போல இருக்குன்றது உனக்கு எப்படித் தெரிஞ்சுது.. சரி அதைவிடு . நான் கேட்டதுக்கு இன்னும் பதில் சொல்லலையே நீ.. அந்த பைக் ஆக்ஸிடெண்டுக்கு அப்புறமா நீ எதையோ பறி கொடுத்த மாதிரி தான் இருக்க.. எதுனாச்சும் ஏடாகூடமா ஆயிருச்சா உனக்கு அந்த ஆக்ஸிடெண்டுல..
என்ன சொல்லச் சொல்ற மஞ்சு.. அப்படில்லாம் ஒன்னுமில்ல..
நீ ஒன்னுமில்லைங்கறச்சயே எதோ ஒன்னு இருக்குன்னு தான் தோணுது. முன்னல்லாம் நான் வர்றப்பல்லாம் நீ ரொம்ப சந்தோசமா இருப்ப.. இப்ப உங்கிட்ட அந்த சந்சோசத்தை கொஞ்சங்கூட காணோம். ஒரு வேளை என்னயைவே ஒனக்குப் புடிக்காம போயிருச்சோன்னு தோணுது எனக்கு. இனிமே நான் இங்க வர்றதுல அர்த்தம் இல்லையோன்னு கூட நினைக்கேன்.
அடச்ச.. மண்டு மாதிரி பேசாத மஞ்சு.. எப்பயுமே நீ தான் என்னோட எல்லாமும்.. ஆனா..
என்ன ஆனா ஆவன்னால்லாம்.. சொல்றதை ஒடைச்சு பளிச்சுன்னுதான் சொல்லேன்..
சரி .. நீ இவ்ளோ கேட்கிறதுனால நான் ஒனக்கு சொல்றேன். அதுக்கப்புறம் நீ எப்படி ரியாக்ட் பண்ணுவேன்னு எனக்கு ஓரளவுக்குத் தெரியும் தான்.
டேய்.. என்னடா என்னவோ போல பேசுற.. உன்னைய பேய்கீய் புடிச்சிருச்சாடா..
டோன்பீ ஸில்லி மஞ்சு.. சரி.. என் பிரச்சினை என்னன்னு ஒனக்குக் கொஞ்சம் ப்ராக்டிகலாவே எக்ஸ்ப்ளைன் பண்றேன்.
இப்ப மணி என்ன.. எட்டேகாலா.. சரியா எட்டு முப்பத்தேழுக்கு காத்தோ அல்லது வேற எதோ ஒரு காரணத்துனாலயோ அடுப்படி மேடையில அடுக்கி வைச்சிருக்கிற ஒரு எவர்சில்வர் தட்டு கீழே விழுந்து இரண்டு வட்டம் போட்டு அடங்கும். அந்த நேரம் உனக்கு ஆர்டர் பண்ண சூஷி டெலிவரி வந்து டோர் பெல் அடிக்கும். நீ உன் கண்ணைத் தொடைச்சிக்கிட்டே போய் கதவைத் திறப்ப. டெலிவரி பையன் சம்பந்தமே இல்லாம ஒரு ஆரஞ்சு கலர் ஹெல்மெட் போட்டிருப்பான். நீ அவனுக்கு ஃபிஃப்டி ரூபீஸ் டிப்ஸ் தருவ….அப்புறம்..
நான் சொல்வதைக் கேட்டு, பயத்தில் முகம் வெளிறிய மஞ்சு, எழுந்து தன் ஹாண்ட் பேக்கை எடுத்துக்கொண்டு கதவை நோக்கிப் போனாள்..
மஞ்சு.. நீ இப்ப போவ.. கீழே போய் ஒரு அஞ்சு நிமிஷம் ஆட்டோவுக்கு வெயிட் பண்ணுவ... அப்புறம் திரும்ப மேலேறி வந்து என்னைய கட்டிக்கிட்டு அழுவ. அப்பதான் எட்டு முப்பத்தேழுக்கு..
நான் சொல்லச் சொல்ல மஞ்சு படியிறங்கி கீழே போய்க்கொண்டே இருந்தாள்.