top of page

லவ் ஆல்.

குறுங்கதை

லவ் ஆல்.

இன்றைக்கு புதுமைப்பித்தன் வீதியாகிப்போன அன்றைய சாலைத் தெருவில் இருந்த பொது நூலகத்துக்கெதிரில் இருந்த டைப் இன்ஸ்ட்டியூட்டில் சுபாவும் டைப்ரைட்டிங்க் படிக்க வருகிறாள் என்று தெரிந்த பின் அங்கே இன்ஸ்ட்ரக்டராக இருந்த இராஜியக்காளைப் பார்க்கப் போவதும் இராஜியக்காளுடன் பேசிக் கொண்டிருப்பதும் வாடிக்கையாகிவிட்டது.

இத்தனைக்கும் இராஜியக்காள் என்னை நான் பிறந்தது முதல் அறிவாள். அதனால் தானோ என்னவோ நான் சுபாவைப் பார்க்கத்தான், சுபாவுடன் பேசத் தான் இராஜியக்காளைப் பார்க்க வருகிறேன் என்பதை இரண்டாம் நாளிலேயோ மூன்றாம் நாளிலேயோ கண்டுபிடித்து, என் காதைத் திருகியவாறே, “கள்ள ராஸ்கல்! என்னடா தம்பிப் பயலுக்கு திடீர்ன்னு அக்கா மேல பாசம் பொத்துக்கிட்டு வருதேன்னு பாத்தேன்! தொலைச்சுப்புடுவன் படவா!” எனச் செல்லமாய் கோவித்துக் கொண்டாலும் சுபா வரும் வேளைகளில் என்னை வரக்கூடாதென்று சொல்லாமலோ அல்லது சுபாவுக்கு முன்னால் என்னைக் கடிந்து கொள்ளாமலோ தான் இருந்தாள்.

சுபாவுடன் நான் வெகுச் சாதாரணமாகத் தான் பேசிக்கொண்டிருப்பேன். அவளும் சட் சட சட் சட் சட சட் என்று டைப்படித்துக் கொண்டே என்னுடன் பேசுவாள்.. நானும் சுபாவும் ஐந்தாம் வகுப்பு வரை ஒன்றாய் படித்தவர்கள். எனவே இருவரின் பேச்சிலும் எந்தவொரு கள்ளத்தனமும் இல்லாமல் இருந்தது. அதுவும் கூட இராஜியக்காளுக்கு ஒருவித ஆசுவாசத்தைத் தந்திருக்குமென நினைக்கிறேன்.

ஆனால் என் பேச்சில் இல்லாத ஒரு கள்ளத்தனம் என் உள் மனசுக்குள் இருந்தது. சுபாவுக்கும் அது இருந்ததா எனத் தெரிந்து கொள்ள நான் ஆசைப்பட்டேன். ஆனால் கேட்கத் துணிவில்லை. இராஜியக்காளிடம் சொல்லிக் கேட்கச் சொல்லலாமா என்று கூட ஒரு யோசனை வந்தது. சுபாவுக்கு அப்படி ஒரு எண்ணமில்லாத பட்சத்தில் இந்த இரண்டில் எதைச் செய்தாலும் சுபா என்னுடன் பேசுவது முற்றிலுமாக நின்றுவிடக் கூடிய அபாயமிருப்பதாக நான் நினைத்து எனக்குள்ளேயே மருகிக் கொண்டிருந்தேன். என்ன செய்வது எனத் தெரியாமல் இரண்டு மூன்று நாட்களாய் நான் இராஜியக்காளையோ சுபாவையோ பார்க்கப் போகாமலிருந்துவிட்டேன்.

நான்காம் நாள் மாலையில் டைப் இன்ஸ்ட்டியூட் மூடும் நேரத்திற்கு அப்புறமாய் இராஜியக்காளை பார்க்கலாம் என்று அவளுடைய வீட்டிற்குப் போனேன். வாசற்படியில் நீர் தெளித்து நடையின் இரு பக்கத்திலும் இரட்டை நெளிவில் கம்பிக் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள் இராஜியக்காள். திரும்பி என்னைப் பார்ததவள்..

ஏன்டா.. எங்கடா போய்த் தொலைஞ்ச.. இந்த மூணு நாளா அந்தப் பிள்ளை எப்படித் தவிச்சுப் போச்சு தெரியுமா. நாந்தான் ஏங்கூட வா.. அந்தப் பய வீட்டுலேயே போய் பாத்துட்டு வருவோம்ன்னு கூட்டிட்டு வந்துருக்கேன்.. உள்ளதான் இருக்கா.. போய் பாரு.. பேசு..

என என் முதுகைப் பிடித்து வீட்டிற்குள் தள்ளினாள் இராஜியக்காள். உள்ளே விளக்கருகில் இருந்த ஸ்டூலில் சுபா கண்களில் கண்ணீரும் காதலுமாய் உட்கார்ந்திருந்தாள். எனக்கு என்ன பேசுவதென்றே தெரியாமல் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.

இராஜியக்காள் வீட்டிற்குள் வந்தாள். சுபா சட்டென எழுந்து இராஜியக்காளைக் கட்டிக் கொண்டாள். நானும் கூடச் சேர்ந்து இராஜியக்காளைக் கட்டிக்கொண்டேன்

CONTACT

Tel: 9810488582| Tel: 7011144631 | sureshbarathan@gmail.com

Sign Up for Stay Connected

Thanks for submitting!

Follow me:

  • Black Facebook Icon
  • Black Twitter Icon

© 2022 by Suresh Barathan

bottom of page